No menu items!

புத்தகம் படிப்போம்: World Cup Football – இந்தியா விலகிய மர்மம்

புத்தகம் படிப்போம்: World Cup Football – இந்தியா விலகிய மர்மம்

உலகம் முழுவதும் கால்பந்து திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதுவரை ஒரு முறைகூட உலகக் கோப்பையில் விளையாடியதில்லை என்றாலும் இந்தியாவிலும் திரும்பிய பக்கமெல்லாம் கால்பந்து பேச்சுதான். குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் உட்பட பல பகுதிகளில் கட் அவுட், பிளக்ஸ், பேனர் என்று திரும்பிய பக்கமெல்லாம் கண்ணில்படுவதும் கால்பந்து வீரர்கள்தான். இத்தனை தீவிர ரசிகர்கள் இருந்தும் இந்தியாவால் உலகக் கோப்பையில் பங்குபெறும் ஒரு திறமையான அணியை ஏன் உருவாக்க முடியவில்லை? இது ஒருபக்கம் இருக்க 1950 உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றும் இந்தியா விளையாடாமல் தவிர்த்துள்ளது, ஏன்?

இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல், ‘Box to Box: 75 years of the Indian football team’. மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் ஜெய்தீப் பாசு இந்நூலை எழுதியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. இதனால், 1938க்கு பிறகு 1950இல்தான் நடைபெற்றது. 12 வருட காத்திருப்புக்குப் பிறகு பிரேசிலில் நடைபெற்ற 1950 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாட 33 நாடுகள் மட்டுமே சம்மதம் தெரிவித்திருந்தன. 1947இல் சுதந்திரம் பெற்ற இந்தியாவும் அந்த 33 நாடுகளில் ஒன்று.

பர்மா, பிலிப்பைன்ஸுடன் 10-வது தகுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்தது, இந்தியா. இந்நிலையில், பர்மாவும் பிலிப்பைன்ஸும் வாபஸ் பெற்றன. இதனால், விளையாடாமலேயே உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா தேர்வானது. இதுவரையான உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் தனது திறமையை வெளிப்படுத்த இந்திய அணிக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு அதுதான்.

பிரிவு 3இல் ஸ்வீடன், இத்தாலி, பராகுவேயுடன் இந்தியா இடம் பெற்றது.

இந்திய கால்பந்து அணி சர்வதேச அளவில் அவ்வளவாக விளையாடியதில்லை என்றாலும் திறமையான அணி என்ற பெயரை அப்போது பெற்றிருந்தது. 1948 லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடிய இந்திய கால்பந்து அணி அந்த பெயரை சம்பாதித்திருந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அனைவரும் வெறுங்காலுடன் கால்பந்து மைதானத்தில் மாயாஜாலமே காட்டியிருந்தனர்.

கால்பந்து வீரர்கள் தங்கள் காலில் தடிமனான துணிப் பட்டையை கட்டிக்கொண்டு விளையாட விரும்பிய காலம் அது. இந்தப் போக்கு 1954 வரை உலகின் பல நாடுகளிலும் இருந்ததுதான். ஆனால், இதுதான் 1950 உலகக் கோப்பையில் தகுதி பெற்றும் இந்தியா பங்கேற்காததற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் கால்பந்து விளையாட விரும்பினர் என்றும் ஃபிஃபா அதை ஏற்கவில்லை என்றும் நீண்ட காலமாக நம்பப்பட்டும் பேசப்பட்டும் வந்தது.

ஆனால், , ஜெய்தீப் பாசுவின் புதிய நூலான ‘பாக்ஸ் டூ பாக்ஸ்’ இதை மறுக்கிறது. இந்நூலில், ‘இந்திய வீரர்கள் வெறுங்காலுடன் விளையாடுவதை ஃபிஃபா ஆட்சேபித்த கேள்விக்கே இடமில்லை’ என்கிறார், ஜெய்தீப் பாசு. ‘அந்த அணியில் இருந்த ஏழு-எட்டு வீரர்கள் தங்கள் பயணப் பைகளில் ஸ்பைக் பூட்ஸை வைத்திருந்தனர். வெறுங்காலுடன் விளையாடுவது வீரர்களின் சொந்த விருப்பம்’ என்று லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களை இதற்கு ஆதாரமாக காட்டுகிறார் ஜெய்தீப் பாசு.

‘1950 மே 16 அன்று உலகக் கோப்பைக்கு செல்லும் அணியை இந்தியா அறிவித்தது. இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 25 அன்று பராகுவேவுக்கு எதிராக விளையாட இருந்தது. இதற்காக இந்திய அணி ஜூன் 15 அன்று பிரேசிலுக்குப் புறப்பட திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடவில்லை. இதனிடையே என்ன நடந்தது என்பது இந்திய கால்பந்தின் மிகப்பெரிய மர்மம். எந்த தெளிவான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை’ என்கிறார் ஜெய்தீப் பாசு.

‘அணியின் தேர்வு தொடர்பான கருத்து வேறுபாடுகள், பயிற்சிக்கு போதுமான நேரம் இல்லாதது போன்றவற்றால் அணி தனது பெயரை விலக்கிக்கொண்டது’ என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவிக்கிறது. ஆனால், பலர் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், பல ஆண்டுகள் இது பற்றி விவாதங்கள் நடந்தன.

இந்திய அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்காததற்கு பணம் பற்றாக்குறையும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், ‘பிரேசில் செல்வதற்கான செலவுகளில் சிக்கல் இருந்ததுதான்; ஆனால், மூன்று மாநில கால்பந்து சங்கங்கள் செலவில் பங்களிக்க உறுதியளித்ததால் அது தீர்க்கப்பட்டது’ என்கிறார் ஜெய்தீப் பாசு.

இன்னொரு கால்பந்து பத்திரிகையாளரான மறைந்த நோவி கபாடியா, ‘உலக கோப்பை கால்பந்து வழிகாட்டி’ என்ற புத்தகத்தில், ‘பிரேசில், இந்திய கால்பந்து சங்கத்தை அணுகி, அணியின் பெரும்பாலான செலவுகளை ஏற்றுக்கொள்ள உறுதியளித்தது. பிரேசிலின் இந்த கோரிக்கைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேருவின் நாட்டைச் சேர்ந்த அணி, தனது நாட்டில் கால்பந்து விளையாட வேண்டும் என்று பிரேசில் விரும்பியது. இன்னொன்று, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், துருக்கி, செக்கோஸ்லோவாக்கியா அணிகளும் 1950 கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து தங்கள் பெயர்களைத் திரும்பப் பெற்றிருந்தன’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னும் இந்தியா ஏன் அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டது?

அந்த கால இந்திய கால்பந்து வீரர்களும் அதிகாரிகளும் அந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை என்பதே முக்கிய காரணம் என்று ஜெய்தீப் பாசுவின் இந்த நூலில் இருந்து புரிகிறது. பல ஆண்டுகள் கட்டுக் கதைகளுக்கு இந்நூலின் மூலம் ஒரு முடிவுரை எழுதியிருக்கிறார், ஜெய்தீப் பாசு.

இந்தியா ஏன் 1950 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடாமல் தவிர்த்தது என்பதுடன், இந்திய கால்பந்து அணியின் கடந்த 75 ஆண்டுகள் பயணத்தையும் விவரிக்கிறது இந்நூல். இந்திய கால்பந்து அணி, 1948 லண்டன் ஒலிம்பிக்கில் பிரான்சிடம் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றதில் தொடங்கி இன்று வரையான சரித்திரத்தை ஆறு அத்தியாங்களில் அற்புதமாக தொகுத்துள்ளார், ஜெய்தீப் பாசு. (2003இல் வெளியான, இவருடைய ‘ஸ்டோரிஸ் ஃப்ரம் இந்தியன் ஃபுட்பால்’ புத்தகமும் மிக முக்கியமான ஒன்று.)

1950கள் வரை இந்தியர்கள் வெறுங்காலுடன் கால்பந்து விளையாடுவதை ஏன் விரும்பினர் என்பதை விவரிக்கிறது, ‘கால்பந்து முதல் பூட்பால் வரை’ அத்தியாயம்.

‘நூற்றாண்டின் தவறு’ என்ற அத்தியாயம், 1950 உலகக் கோப்பையில் பங்கேற்கும் பொன்னான வாய்ப்பை நாம் எப்படி இழந்தோம் என்பதை பேசுகிறது. ‘அறியாமை, குறுகிய பார்வை, வீரர்கள் மீதான நம்பிக்கையின்மை, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தவறான முன்னுரிமை ஆகியவையே அந்த கனவு நனவாகாமல் போனதற்கு காரணம். அதன்பின்னர் இந்தியா உலகக் கோப்பையை விளையாடுவது என்பது இன்று வரை தொலைதூரக் கனவாகவே உள்ளது. இந்திய கால்பந்தில் கடுமையான மாற்றங்கள் வராவிட்டால், அதை அடைய இன்னும் பல, பல ஆண்டுகள் ஆகும்’ என்கிறார், பாசு.

இந்திய கால்பந்து அணியின் முதல் கேப்டனான நாகாலாந்தைச் சேர்ந்த டாக்டர் டி ஏஓவின் கதை தொடங்கி சிறந்த இந்திய கால்பந்து வீரர்களின் கதைகளை விவரிக்கிறது இன்னொரு அத்தியாயம்.

ஆசிய அளவில் 1948 முதல் 1970 வரை இந்திய கால்பந்து அணி மிக புகழ்பெற்ற அணியாக இருந்துள்ளது. 1948 முதல் 1960 வரை தொடர்ந்து நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி முக்கிய பங்காற்றியது. 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தது. 1962 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில், புகழ்பெற்ற பயிற்சியாளர் ஹைதராபாத் எஸ்.ஏ. ரஹீம் தலைமையில் தங்கப் பதக்கத்தை வென்றது.

இந்த சகாப்தத்தை விறுவிறுப்புடன் விவரிக்கிறது, ‘1947-1972 பெரிய சகாப்தம்’ என்ற அத்தியாயம். இந்த சகாப்தத்துக்கு 1970களில் ‘குறுகிய அரசியல் பரிசீலனைகள்’ ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியதையும், நேர்மையற்ற அதிகாரிகளால் இந்தியாவில் கால்பந்து எப்படி குறைவான மதிப்பிற்குள்ளானது என்பதையும் தயங்காமல் வெளிப்படுத்துகிறார்.

நூலின் பின்பகுதியில் 30 பக்கங்களுக்கும் மேலாகவும் தொகுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களும், நாம் இதுவரை பார்த்திராத பல அரிய வரலாற்று புகைப்படங்களும் இந்நூலின் இன்னொரு சிறப்பு.

நூலை வாங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...