No menu items!

ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா – என்ன நடக்கிறது?

ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா – என்ன நடக்கிறது?

2028-ல் ஆரம்பித்த கிசுகிசு. இன்று வரை புயலிலும் அணையாத லாந்தர் விளக்கைப் போல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா காதல் கிசுகிசு.

ஏப்ரல் 5, ராஷ்மிகாவின் பிறந்த நாள். கொண்டாடுவதற்காக அபுதாபிக்கு பறந்துவிட்டார் ராஷ்மிகா. அபுதாபியில் பார்த்த மயிலின் அழகில் மயங்கிய ராஷ்மிகா அந்த மயிலின் புகைப்படத்தை சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட்டார்.

இதே ஏப்ரல் 5-ம் தேதிதான் விஜய் தேவரகொண்டாவும், மிருணாள் தாகூரும் நடித்திருக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ படமும் வெளியானது. இது குறித்து விஜய் தேவரகொண்டா ஒரு காணொலியை வெளியிட்டார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு மயில், எக்ஸ்க்யூஸ் மீ.. மே ஐ கம் இன்’ என்று கேட்காமல் கொள்ளாமல், காணொலியின் ஃப்ரேமிற்குள் வந்து போனது.

அவ்வளவுதான்… ரசிகர்களுக்குள் இருக்கும் ஜேம்ஸ்பாண்ட் 007, ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவும் இந்த மயில் பின்னணியைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என்னதான் நடக்கிறது இந்த இருவருக்கும் இடையே….

கன்னட திரைப்பட நடிகையான ராஷ்மிகா மந்தனா, 2018-ல் ’கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்குப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். ‘அர்ஜூன் ரெட்டி’ கொடுத்த மவுசில் இருந்தார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படமும் வெற்றி.

’கீதா கோவிந்தம்’ பட வெளியீட்டுக்குப் பிறகு அதே ஆண்டில், கன்னட திரைப்பட நாயகன் ரக்‌ஷித் ரெட்டியுடனான காதலை முறித்து கொள்வதாக ராஷ்மிகா மந்தனா பகிரங்கமாக அறிவித்தார்.
ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ஜோடி திரையில் அசல் காதலர்களைப் போலவே இருந்ததால், அடுத்த ஆண்டே இவர்களை ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள். அந்தப் படம்தான் ’டியர் காம்ரேட்’. இந்தப் படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இருந்தன. இந்த காட்சிகளில் அவர்களுக்குள் இருந்த திரைக்காதலில், கொஞ்சம் அசல் காதலும் தெரிகிறது என்ற பேச்சு எழுந்தது. அப்போதே ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் புரிதல் உண்டாகிற்று என்கிறார்கள்.

அடுத்து 2023 புத்தாண்டை கொண்டாடிய ராஷ்மிகா ஒரு நேரலையில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பின்னணியில் விஜய் தேவரகொண்டாவின் குரல் கேட்டது.

இதே ஆண்டு இறுதியில் அதாவது நவம்பரில் மீண்டும் இவர்கள் இருவரும் கிசுகிசுவில் சிக்கினர். தீபாவளியைக் கொண்டாட இவர்கள் இருவரும் தனியே பறந்துவிட்டார்கள் என்றன ஊடகங்கள். ஒரே காரணம் சமூக ஊடகங்களில் இவர்கள் இருவரும் வெளியிட்ட புகைப்படங்களின் பின்னணி ஒரே மாதிரியாக இருந்ததுதான்.

பிப்ரவரியில் இவர்கள் இருவருக்குமிடையே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று சிலர் அடித்து கூறினார்கள். ஆனால் ராஷ்மிகா வாயைத் திறக்கவில்லை. விஜய் தேவரகொண்டா அட போங்கப்பா என்று மறுத்துவிட்டார். ’போகிற போக்கைப் பார்த்தால், ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை நான் கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கே’ என்று விளையாட்டாக ஊடகங்களில் கூறினார்.

இதோ இப்போது மயில் ரூபத்தில் வந்து இவர்களின் நெருக்கத்தை திரும்பவும் பேச வைத்திருக்கிறது. காதல்.

’புஷ்பா’ படத்தின் வெற்றி ராஷ்மிகாவை நேஷனல் க்ரஷ் ஆக கொண்டாட வைத்திருக்கிறது. ‘குட் பை’ படம் இவரது நடிப்பிற்காக பாரட்டப்பட்டது. இதனால் ராஷ்மிகா பரபர நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
மறுபக்கம் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ படம் பான் – இந்தியா படமாக வெளியிடப்பட்டது. பாலிவுட்டின் முக்கிய தல இப்படத்தின் தயாரிப்பில் இருந்ததால், விஜய் தேவரகொண்டா மீது ஊடகத்தின் வெளிச்சம் அதிகம் விழுந்தது. இது அவரை இன்னும் பிரபலபடுத்தியது.

இப்படி இவர்கள் இருவருக்கும் இன்னும் மவுசு இருப்பதனால், ரசிகர்களும் விடாமல் துரத்துகிறார்கள்.

திருமணம் செய்து கொண்டால், பாலிவுட்டை போல் தென்னிந்திய சினிமாவில் பெரிதாக சம்பாதிக்க முடியாது. கனவுக்கன்னியை உடனடியாக எக்ஸ். கனவுக்கன்னியாக்கி விடுவார்கள் ரசிகர்கள். இதனாலேயே பல நட்சத்திரங்கள் காதல் முற்றினாலும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே முடிந்தவரை காலம் கடத்துவார்கள்.

அப்படிப்பார்க்கையில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா இடையே அப்படியொரு எண்ணமிருக்கலாம். ஏனென்றால் இவர்கள் இருவருக்கும் இப்போதுதான் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

இன்றைக்கு தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ராஷ்மிகா இருக்கிறார். படமொன்றில் நடிக்க இவர் 4 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்கிறார்கள். திரைப்படங்கள் தவிர விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதன் மூலம் இவரது சொத்து மதிப்பு 37 கோடி இருக்கலாம் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவின் மதிப்பு 58 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

இப்படி பணம் கொட்டும் போது, அவசரப்பட்டு ஏன் கல்யாணம் பண்ண வேண்டுமென நீங்கள் நினைக்கலாம். அவர்களும் அப்படி நினைத்திருக்கலாம். இன்னும் ஒரு வருடம் கழித்து இதே மயில், குயில் பஞ்சாயத்து வந்தால்தான் இவர்கள் காதலிக்கிறார்களா, திருமணம் செய்து கொள்ள போகிறார்களா இல்லை நண்பர்கள் மட்டும்தான் என்பது தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...