No menu items!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – குஷியில் கூட்டணிக் கட்சிகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – குஷியில் கூட்டணிக் கட்சிகள்

பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் களைகட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பரபரப்பான ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பட்டையைக் கிளப்பியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

நாடு முழுக்க இப்போது இந்த தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றித்தான் பேச்சு.

‘ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய அரசுப் பணிகளில் 2025ஆம் ஆண்டுமுதல் மகளிருக்கு ஐம்பது சதவிகித இடஒதுக்கீடு, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, பாரதிய ஜனதா கொண்டு வந்த ஜி.எஸ்.டி. நீக்கப்பட்டு புதிய ஜி.எஸ்.டி 2.0, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து, நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு, நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை,

நீட் தேர்வுகளை மாநில அரசுகள் அவர்களது விருப்பத்துக்கேற்ப, தேவைக்கேற்ப நடத்திக் கொள்ளலாம், மார்ச் 2024 வரையிலான கல்விக் கடன் ரத்து, ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி, மாநில அரசுகளுடன் கலந்து பேசி புதிய மாநிலக் கல்விக் கொள்கை கொண்டுவரப்படும், செஸ் வரி வசூலில் மாநிலங்களைப் புறக்கணிக்கும் பா.ஜ.க.வின் அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும், நிதிப்பகிர்வு தொடர்பாக புதிய கொள்கை வகுக்கப்படும், மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழப்பதையும், படகுகள் பறிமுதல் ஆவதையும் தடுக்க புதிய வழிமுறைகள்‘

இப்படி காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் பலப்பல அதிரடி சரவெடிகள்.

‘நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும், மாநிலங்களின் உரிமைகைளைக் காக்க பொதுப்பட்டியலில் உள்ள சில பிரிவுகள் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும், முப்படையில் குறுகிய கால ஆளெடுப்பு திட்டமான அக்னிபாத் திட்டம் கைவிடப்படும், எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவினால் பதவி பறிக்க சட்டத்திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்பட மாட்டாது, நீதிபதிகள் நியமனம் பற்றி முடிவு செய்ய தேசிய அளவிலான ஆணையம், ஊடக சுதந்திரம், கருத்து சுதந்திரத்தைக் காக்க தொலைதொடர்பு சட்டம் 2023 மறு ஆய்வ செய்யப்படும், ஒவ்வொரு மாநிலத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, மீனவர்களுக்கு தனி வங்கி, மீன்பிடித் துறைமுகங்கள், பாகுபாடின்றி ஆடவர்களுக்கும், மகளிருக்கும் ஒரே மாதிரியான ஊதியம், ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுவை மீண்டும் கொண்டுவரப்படும், இலவச மருத்துவ சேவை.. இப்படியாகப் போகிறது காங்கிரஸ் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகள்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தொடர்பான அம்சங்களும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் இடம்பிடித்துள்ளன.

விவசாய இடுபொருள்களுக்கு ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு சேவை வரி ரத்து, விவசாயிகள் அவர்களது விளைபொருட்களை நேரடியாக விற்க சந்தை வசதி, குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை நிறைவேற்றம் என, விவசாயிகளுக்கு ஏதுவான பல அம்சங்களும் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.

நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள 46 பக்க தேர்தல் வாக்குறுதிகளில், நவ சங்கல்ப் என்ற பெயரில் நாட்டின் பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வின் படி 2023ஆம் ஆண்டு செப்டம்பருக்குப்பின் இந்தியாவில் 42 சதவிகித பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்தநிலையில், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது, நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம்பிடித்துள்ளன. ‘உற்பத்தியுடன் தொடர்புள்ள ஊக்கத்திட்டம்’ பற்றிய அறிவிப்பும் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளது. இது வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதியை வழங்கியுள்ளது.

‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் வேலை மட்டுமே இருக்கும். வேறு வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்’ என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ளது.

‘நலிந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன், அந்தப் பணம் அந்த குடும்பத்தின் மூத்த வயது பெண்ணின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்’ என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி பல்வேறு தரப்பினரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேர்தல் பரபரப்பின் இடையே மற்றொரு பரபரப்பாக வெளிவந்துள்ள இந்த தேர்தல் வாக்குறுதிகள், பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுக அண்மையில் மக்களவை தேர்தல் தொடர்பான அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்தநிலையில், ‘காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை, திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மெருகூட்டுவது போல அமைந்துள்ளது’ என இந்தியா கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஆம் ஆத்மி கட்சி பாராட்டுத் தெரிவித்துள்ளது.

‘இது இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் தேர்தல் அறிக்கை. இந்தியா கூட்டணிக்கு இந்த தேர்தல் அறிக்கை புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது’ எனவும் ஆம் ஆத்மி கட்சி பாராட்டியுள்ளது.

‘இந்தியாவில் மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவுக்கு அதிக அளவில் மருத்துவர்களை அள்ளித்தரும் மாநிலம் தமிழ்நாடுதான். நீட் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் தமிழகத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, இன்னும் அதிக அளவில் மருத்துவர்களை உருவாக்கும்’ என்ற கருத்தும் இந்தியா கூட்டணிக் கட்சிகளிடம் உள்ளது.

அதேவேளையில், ‘நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். அதை நீக்கப்போவதாக அந்தக் கட்சி அறிவித்திருப்பது நல்ல செயல். இதன்மூலம் செய்த தவறுக்கு கழுவாய் தேடிக்கொள்ள முயல்கிறது’ என்பது மாதிரியான கருத்துகளும் எழாமல் இல்லை.

ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு, 50 சதவிகிதத்துக்கு மேல் செல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்தங்கிய சமூகத்து மாணவர்கள் மீதான துன்புறுத்தலைத் தடுக்க ‘ரோஹித் வெமுலா பெயரில் பாதுகாப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்’ என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியும் பாராட்டைப் பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி சமூக நீதி கோட்பாட்டுக்கான ஓர் இயக்கம் என்பதை இதன்மூலம் நிரூபித்திருப்பதாக கூட்டணிக் கட்சிகள் பாராட்டியுள்ளன.
சமூகநீதி மட்டுமல்ல, மதச் சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம், என பல்வேறு அம்சங்களை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கொண்டிருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர்.

சரி. பாராட்டுகள் எல்லாம் இருக்கட்டும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஒரு வரி கூட இல்லை. இது இந்தியா கூட்டணிக் கட்சிகளை வியப்படைய வைத்துள்ளது. பதிலாக, ‘தேர்தல் சட்டங்கள் திருத்தப்படும்’ என்ற பொத்தாம் பொதுவான வாக்குறுதி இடம்பெற்றுள்ளது.

‘ஈ.வி.எம் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவுப் பற்றி காங்கிரஸ் கட்சி ஏன் வாயே திறப்பதில்லை? அது தொடர்பாக தேர்தல் வாக்குறுதியில் ஏதாவது இடம்பெற்றிருந்தால் மக்கள் மனதில் அது இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்’ என ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

அதேப்போல, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வாக்குறுதியும் இடம்பெறவில்லை. பழைய ஓய்யூதியத் திட்டம் இந்தமுறை மிஸ்சானது காங்கிரஸ் கட்சியின் சென்டிமெண்ட் தொடர்பான விஷயமாகக் கருதப்படுகிறது.

நடப்பு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு முத்தாய்ப்பாக நடந்த ஐந்துமாநிலத் தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களிலும், ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம்’ என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், பழைய ஓய்வூதித் திட்டம் பற்றி வாக்குறுதி எதுவும் தராத தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இந்தநிலையில், பழைய ஓய்வூதித் திட்டம் தொடர்பான தேர்தல் வாக்குறுதி ராசியில்லை என்று காங்கிரஸ் கட்சி நினைத்ததோ என்னவோ? தேர்தல் வாக்குறுதியில் இந்தமுறை பழைய ஓய்வூதித் திட்டத்தைக் காணோம்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விளக்கம் அளித்திருக்கிறார். ‘2004ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட என்.பி.எஸ். எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றி ஆராய காங்கிரஸ் கட்சி, குழு அமைத்திருக்கிறது. இந்த குழுவின் அறிக்கைக்காக கட்சி இப்போது காத்திருக்கிறது. அதனால்தான், தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதித் திட்டம் இடம்பெறவில்லை’ என அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளை ‘பொய்களின் பொட்டலம்’ என்று பாரதிய ஜனதாவின் சுதன்ஷு திரிவேதி வர்ணித்திருக்கிறார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ராகுல் காந்தி தாய்லாந்திலும், அமெரிக்காவிலும் எடுத்த படங்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை எவ்வளவு சீரியசாக கருதுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. நீர் மேலாண்மை தொடர்பான படத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பஃபலோ நதியின் படம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன் மக்களவைத் தேர்தல், மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியதே இல்லை. இந்தநிலையில், இப்போது அளித்திருக்கும் வாக்குறுதிகளை எப்படி நம்புவது?’ எனக் கேட்டிருக்கிறார் சுதன்ஷு திரிவேதி.

காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்களா இல்லையா? அது ஜூன் 4ஆம்தேதி வந்தால் தெரிந்துவிடப் போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...