No menu items!

பணப் பிரச்சினையில் பாஜக! – மிஸ் ரகசியா

பணப் பிரச்சினையில் பாஜக! – மிஸ் ரகசியா

“பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பா பாஜக பிரமுகர் சாய் பிரசாத்தை கைது செய்திருக்கிறதா தகவல் வருது” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தாள்.

“பாஜககாரரா? என்ன நடந்திச்சு”

“இன்னும் முழு விவரம் வெளில வரல. என் ஐ ஏ அதிகாரிகள் அவரை விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க. தேர்தல் நேரத்துல இப்படி நியூஸ் வந்ததுல கர்நாடக பாஜகவினர் ஷாக்கியிருக்காங்க.”

”தேர்தலுக்கு முன்னாடியே ஷாக்கா? சரி, தமிழ்நாட்டு தேர்தல் நிலவரம் எப்படியிருக்கு?”

“பாஜககாரங்க பணம் இல்லாம கஷ்டப்படறாங்களாம்”

“நீ என்னம்மா இப்படி சொல்றே? தேர்தல் பத்திரம் மூலமா பாஜகவுக்கு கோடிக்கணக்குல பணம் குவிஞ்சிருக்கு. மத்தியிலயும் ஆட்சில இருக்காங்க. அப்படி இருந்தும் அவங்ககிட்ட பணம் இல்லையா?”

“பாஜக தலைவர்கள் எல்லாரும் நல்லா செழிப்பாதான் இருக்காங்க. ஆனா அடிமட்ட நிர்வாகிகளுக்கும், தொண்டர்களும் பணப் பஞ்சத்துல இருக்காங்க. திமுக, அதிமுக இரண்டு கட்சியும் முதல் தவணையா ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் ஒரு பெரிய பணப் பெட்டியை அனுப்பி இருக்காங்க. அது காலியானதும் திரும்ப பணத்தை அனுப்பறோம்னும் உறுதி கொடுத்திருக்காங்க. ஆனா பாஜகல மாவட்ட செயலாளர்களுக்கு அரை பெட்டிதான் இதுவரைக்கும் கொடுத்திருக்காங்க. இது தேர்தல் கமிஷம் அங்கீகரிச்ச தொகைல முக்கால்வாசிகூட இல்லையே. இது மைக் செட் கட்டதானே பத்தும்னு பாஜகவுல புலம்பறதை கேக்க முடியுது”

“ஏன் பணத்தை இறக்க மாட்டேங்கிறாங்க”

”இது எல்லா எலக்‌ஷன்லயும் நடக்கிறதுதான். தோக்கிற மாதிரி இருந்தா கட்சி கொடுக்கிற பணத்தை செலவழிக்காம மாவட்ட செயலாளரும் வேட்பாளரும் அமுக்கிப்பாங்க. அது மாதிரி இந்த முறை ஆகிடக் கூடாதுனு கட்சித் தலைமை கொஞ்ச கொஞ்சமா பணம் அனுப்புதான். இவங்க அனுப்பி முடிக்கிறதுக்குள்ள எலெக்‌ஷனே முடிஞ்சுரும்னு சொல்றாங்க”

”கோவை தொகுதிக்கும் இதே நிலைதானா இல்ல அங்க பணம் பாயுதா?”

“கோவை தொகுதிக்காக 100 பெரிய பெட்டி வரைக்கும் செலவு செய்ய திமுக தயாரா இருக்காம். அதைவிட தீவிரமா அண்ணாமலைக்கு டெபாசிட் கிடைக்காம இருக்க 150 பெரிய பெட்டி வரைக்கும் பட்ஜெட் போட்டு பணத்தை அள்ளி விடுது அதிமுக.”

“அப்ப அண்ணாமலை பணம் இல்லாம தவிக்கராரா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஆனா அவர் பெரிய பெட்டிகளை திறக்க மாட்டார்னு சொல்றாங்க. அவருக்கு இருக்கிற பவருக்கு பல பெரிய பெட்டிகள் வந்திருக்கும். ஆனா அதெல்லாம் கட்சிக்காரங்களுக்கு காட்ட மாட்டேங்கிறாருனு கோவை பாஜக கட்சியினரின் புலம்பல்”

“அவரே பாவம். நண்பர்கள் உதவிலதா ஈசிஆர் பங்களாவுல வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்கிறார். அவர்கிட்ட எப்படி பெட்டிகள் இருக்கு”

“டெல்லி அனுப்புன பெட்டிகளையே இன்னும் ஒபன் பண்ணாம இருக்கிறார்னு தாமரை நண்பர்கள் சொல்றாங்க. பெட்டியைத் திறக்காம ஒட்டுப் பெட்டில வாக்கு விழாதுனும் சொல்றாங்க”

“பாஜக கூட்டணில கல்வித் தந்தைகள் நிக்கிறாங்களே. அவங்களாம் பெட்டியைத் திறந்திட்டாங்களா?”

“போன தடவை வாக்காளர்களுக்கு டிஸ்டிரிபியூட் பண்ணச் சொல்லி கட்சிக்காரங்ககிட்ட தான் கொடுத்த பணம் அவங்களுக்கு முறையா போய்ச் சேரலைன்னு ஏசிஎஸ் நினைக்கறார். அதனால இந்த தடவை தன்னோட கல்லூரி ஆசிரியர்களை வச்சே விநியோகிக்கறதா சொல்லி இருக்கார். அதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சுட்டு வர்றார்.”

“பாரிவேந்தர் நிலை என்ன?”

“கொஞ்சம் கஷ்டம்தான். அவர் பெரம்பலூர் பக்கம் வந்தே நாளாகுது. இப்பதான் வந்திருக்கிறார். என்னதான் பெட்டியைத் திறந்தாலும் மக்கள் மனசு திறக்காதுனு சொல்றாங்க”

“ஒரு பக்கம் அரசியல்வாதிங்க இப்படி கோடிக்கணக்குல பணத்தை எடுத்துட்டு போய் வாரி இறைக்கறாங்க. இதை யாரும் கண்டுக்கறதில்லை. ஆனா இன்னொரு பக்கம் சாதாரண மக்கள் 50 ஆயிரத்துக்கு மேல பணம் கொண்டுபோனா, அதைப் பிடிச்சு வச்சுகிட்டு ஆயிரத்தெட்டு கேள்வி கேக்கறாங்க.”

“என்ன பண்றது இதுதான் நம்ம நாட்டு ஜனநாயகம். சரி காங்கிரஸ் நிலைமை எப்படியிருக்கு? சொத்தையெல்லாம் முடக்கினாங்களே”

“செலவுக்கு பணம் இல்லாம இருக்காங்க. தமிழ்நாட்டுல காங்கிரசுக்கு ஆகிற செலவை திமுக ஏத்துக்குமானு சோனியா ஸ்டாலின் கிட்ட கேட்டாங்களாம். அதுக்காகதான் ப.சிதம்பரம் முதல்வரை சந்திச்சு பேசுனார்னு ஒரு செய்தி இருக்கு”

“அவ்வளவு பெரிய கட்சிக்கு செலவழிக்கை பணம் இல்லையா?”

“இப்ப அதான் நிலைமை. ராகுல் யாத்திரைக்கு நிறைய செலவு பண்ணிட்டாங்க. இன்கம்டாக்ஸ் பிரச்சினை வரும்னு அவங்க நினைக்கல. திமுக தலைவரும் ஒண்ணும் பிரச்சினையில்ல, நாங்க பாத்துக்குறோம்னு சொன்னதா ஒரு தகவல் இருக்கு”

“பெட்டினதும் எனக்கு ஒரு ஆள் ஞாபகத்துல வர்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில முக்கிய நபரா இருந்த ஆதவ் அர்ஜுனாவை இப்ப பார்க்கவே முடியலையே?”

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காக ஒரு பொதுத் தொகுதியை வாங்கி என்னை நிறுத்துங்க. கட்சியோட முழு பிரச்சார செலவையும் நானே பார்த்துக்கறேன்னு திருமாவளவன்கிட்ட ஆதவ் அர்ஜுனா சொல்லியிருந்தார். ஆனா விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுக பொதுத் தொகுதியை ஒதுக்கல. ‘திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிறைய பணம் தந்தும், பொதுத் தொகுதியில் நான்தான் போட்டி போடப் போறேன்னு முதல்வர்கிட்ட சொல்லியும் அவங்க பொது தொகுதி தராம ஏமாத்திட்டாங்க. அதுக்குப் பிறகு அதிமுககிட்ட கூட்டணி பேசச் சொல்லி திருமாவளவன்கிட்ட பேசினேன். ஆனா அதையும் அவர் ஏத்துக்கலை’ன்னு ஆதவ் ரொம்ப கோபமா இருக்காராம். அதனால விசிகல இருந்து தாமரைக் கட்சியில சேர்ந்தா என்ன? அவங்களுக்கும்தான் நிதி கொடுத்திருக்கோமேனு ஆதவ் யோசிக்கறாராம்.”

“அங்க உடனே கூப்ட்டுப்பாங்களே”

”வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சிருக்காங்களாம். எலக்‌ஷன் முடிஞ்சதும் ஜம்ப் இருக்கும்”

“போன நாடாளுமன்ற தேர்தல்ல கனிமொழி தூத்துக்குடி தொகுதியில மட்டும் சுத்திச் சுத்தி வந்தார். ஆனா இந்த தடவை தேனி, விருதுநகர்னு பல ஊர்களுக்கு போய் பிரச்சாரம் பண்றாரே?”

“துத்துக்குடி தொகுதியில கனிமொழிக்கு பெருசா போட்டி ஏதும் இல்லை. அதனால அவரை மத்த தொகுதிகள்லயும் பிரச்சாரம் செய்யச் சொல்லி முதல்வர் அன்புக் கட்டளை போட்டிருக்கார். அதனாலதான் அவர் தூத்துக்குடிக்கு வெளிய அடிக்கடி போய் பிரச்சாரம் செஞ்சுட்டு வர்றார்.”

“பாஜகல இருந்து தடா பெரியசாமி விலகிட்டாரே?”

“இதுக்கு காரணம் அதிமுக ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார்தான். மத்த கட்சிகள்ல அதிருப்தியில இருக்கறவங்களை அடையாளம் கண்டு, அவங்களை அதிமுகல சேர்க்கிற வேலையை நிர்மல் குமார்கிட்ட எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்காரு. சிதம்பரம் தொகுதியில் போட்டி போட தனக்கு வாய்ப்பு கிடைக்கலையேங்கிற வருத்த்த்துல இருந்த தடா பெரியசாமியை சந்திச்சு, அவரை அதிமுகல சேர வச்சிருக்காரு நிர்மல் குமார். இதே மாதிரி மத்த கட்சிகள்ல இருக்கற அதிருப்தியாளர்களையும் அவர் தேடிட்டு வர்றாராம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...