No menu items!

மதப் பிரிவினையை தூண்டுகிறாரா பிரதமர் மோடி?

மதப் பிரிவினையை தூண்டுகிறாரா பிரதமர் மோடி?

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி சொன்ன கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் தேர்தலில் வெல்ல திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

பிரதமர் பேசியது என்ன?

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இதுதான்…

” காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறினார்கள். இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு, ஊடுருவல் செய்பவர்களுக்கு விநியோகிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

தாய்மார்கள், சகோதரிகளின் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. சகோதர, சகோதரிகளே, இந்த அர்பன் நக்சல் எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

காங்கிரஸ் எதிர்ப்பு:

மோடியின் இந்த பேச்சை காங்கிரச் கட்சியினர் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறும்போது, “கடந்த 2006-ம் ஆண்டு தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், ஓபிசி பிரிவினர், பெண்கள் ஆகியோர் நாட்டின் வளர்ச்சியின் பலன்களை சமமாக பிரித்துக் கொள்ளும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற வேண்டும் எனவும்தான் கூறினார்” என்றனர்.

ராகுல் காந்தி விமர்சனம்: இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோதி பேசும் பொய்களின் தன்மை மிகவும் மோசமடைந்துள்ளது. பயம் காரணமாக அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப விரும்புகிறார். காங்கிரசின் ‘புரட்சிகரமான தேர்தல் அறிக்கை’க்கு அபரிமிதமான ஆதரவு வரத்துவங்கியுள்ளது. நாடு தனது பிரச்னைகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கும். வேலைவாய்ப்பு, குடும்பம் மற்றும் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும். இந்தியா திசைதிரும்பாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சவால்: காங்கிரஸ் ஊடகப் பிரிவின் தலைவர் பவன் கேரா சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இஸ்லாமியர்கள் பற்றிய மோடியின் பேச்சை அவர் கடுமையாக விமர்சித்த்குள்ளார்.

“பிரதமர் மோடி இன்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற, நீங்கள் பொதுமக்களிடம் பொய் சொல்கிறீர்கள். உங்கள் உத்தரவாதங்கள் பொய், உங்கள் அறிக்கைகள் பொய், உங்கள் வாக்குறுதிகள் பொய்யானவை.

இந்து-முஸ்லிம் என்ற பெயரில் பொய் சொல்லி நாட்டை பிளவுபடுத்துகிறீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ‘முஸ்லிம்’, ‘இந்து’ என்ற வார்த்தைகள் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள். இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்படி பொய் சொல்லி நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஒருவர் வெட்கப்பட வேண்டும். பிரதமரே, உங்கள் பொய்களால் மக்கள் எங்களின் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு, அதில் ‘இந்து’ என்று எங்கு எழுதப்பட்டிருக்கிறது என்று உங்கள் பொய்களைத் தேடுகிறார்கள். மற்றபடி இதுபோன்ற வார்த்தைகள் எங்கள் அறிக்கையிலும் இல்லை, எங்கள் மனதிலும் இல்லை, இந்த சமூகத்திலும் இல்லை. இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. கண்ணியமாக ஒய்வு பெறுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்: பிரதமரின் பேச்சை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இந்திய தேர்தல் ஆணையத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...