No menu items!

திருநெல்வேலியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

திருநெல்வேலியில் முந்துகிறாரா நயினார் நாகேந்திரன்?

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இம்முறை கடும் போட்டியை எதிர்கொள்ளும் தொகுதிகளில் ஒன்று திருநெல்வேலி. காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இத்தொகுதியில் வெற்றிபெற கடுமையாக போராடி வருகின்றன.

தொகுதியின் வரலாறு:

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,42,305. இதில் ஆண் வாக்காளர்கள் 8,02,293 பேர். பெண் வாக்காளர்கள் 8,39,863 பேர். 149 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள். 1980-ம் ஆண்டுமுதல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக 3 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தொகுதியில் நாடார், தேவர், பட்டியலின மக்கள், யாதவர்கள், இஸ்லாமிய ஓட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இத்தொகுதியில் இம்முறை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா.சத்யா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ஸ்பீட் எடுக்கும் நயினார் நாகேந்திரன்:

திருநெல்வேலியில் பாஜக சார்பாக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஆவார். . 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் 46% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இம்முறை வலுவான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்பதால் பாஜக இவரை நிறுத்தியுள்ளது.

2 முறை மாநில அமைச்சராக இருந்தவர் என்பதால், தொகுதியில் இவர் நன்கு அறிமுகமான நபராக இருக்கிறார். பாஜக கூட்டணி மட்டுமின்றி அதிமுகவினரின் வாக்குகளையும் கவர வாய்ப்புள்ளது என்பதால் இப்போதைக்கு இவர் முந்துகிறார். கன்னியாகுமரியைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸை இத்தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பதும் நயினாருக்கு கைகொடுக்கிறது. உள்ளூர் வேட்பாளரை நிறுத்தாததால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

அதேநேரத்தில் இவரது உறவினர்களிடம் இருந்து சமீபத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது நயினாருக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சறுக்கலை மீறி அவர் வெற்றி பெறுவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி.

விடாமல் போராடும் ராபர்ட் ப்ரூஸ்:

இந்தியா கூட்டணியின் சார்பில் இத்தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் ப்ரூசுக்கு முக்கிய மைனஸ் பாயிண்ட், அவர் பக்கத்து தொகுதியான கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதுதான். அதனால் அவர் உள்ளூர்காரர் அல்ல என்று சொல்லி பாஜகவும், அதிமுகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இருப்பினும் கூட்டணி பலமும், வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி செய்த பிரச்சாரமும் தனக்கு கைகொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறார் ராபர்ட் ப்ரூஸ். கடந்த முறை 50 சதவீத வாக்குகளைப் பெற்று 1.8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்ற தொகுதி இது என்பது அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது. அந்த நம்பிக்கையுடன் விடாமல் போராடி வருகிறார் ராபர்ட் ப்ரூஸ். கடந்த முறை ஒரே கூட்டணியில் இருந்த அதிமுகவும், பாஜகவும் பிரிந்து நிற்பதும் இவரது நம்பிக்கையை அதிகரிக்கிறது.

3-வது இடத்தில் அதிமுக:

அதிமுகவில் சிம்லா முத்துசோழன் வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தார். தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு வாரங்கள் முன்பு திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த அவர், ஆர் கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். பின்னர், சிம்லா முத்துசோழனை மாற்றி நெல்லையில் திசையன்விளை பேரூராட்சித் தலைவராக இருக்கும் ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் மகளிரணி செயலாளராகவும் மாவட்ட அதிமுக இணைச் செயலாளராகவும் இருக்கிறார். நயினார் நாகேந்திரன் அதிமுக வாக்குகளை தொடர்ந்து குறிவைத்து வருவதால், இப்போதைக்கு ஜான்சி ராணி 3-வது இடத்தில் இருக்கிறார். அதிமுகவின் கடைசி கட்ட பிரச்சாரம் அவரை மீட்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...