No menu items!

4 மாதத்தில் 7 முறை தமிழ்நாடு வந்த மோடி! – வெற்றி கிடைக்குமா?

4 மாதத்தில் 7 முறை தமிழ்நாடு வந்த மோடி! – வெற்றி கிடைக்குமா?

‘அது என்னங்க? தமிழ்நாடு மேலே பிரதமர் மோடிக்கு அவ்வளவு ஆர்வம்? நாலு மாதத்தில் மட்டும் 7ஆவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாரே?’

இப்படி ஆச்சரியப்படுகிறார்கள் பலர்.

ஆம். 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின், தமிழ்நாட்டுப் பயணங்கள் தடதடவென அதிகரித்துள்ளது.

சும்மா ஒரு பிளாஷ்பேக் பார்ப்போமே.

இந்த ஆண்டு ஜனவரி 2ஆம்தேதி. திருச்சி விமானநிலைய புதிய முனையத்தின் திறப்புவிழாவுக்காக மோடி வந்திருந்தார். ஜனவரி 19. தமிழகம் வந்து கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். 20,21 ஆம்தேதிகளில் ஸ்ரீரங்கம்,ராமேசுவரம், தனுஷ்கோடி போன்ற புண்ணிய தலங்களுக்குப் பயணம் போனார்.

பிப்ரவரி 27. திருப்பூர் பல்லடத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின், ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார். அப்படியே மதுரை மீனாட்சியம்மன் கோயில். மறுநாள் தூத்துக்குடி பயணம்.

இந்தப் பயணத்தின் போது எம்.ஜி.ஆரை ‘ஒப்பற்றத் தலைவர்’ என்றும், ஜெயலலிதாவை சிறந்த ஆட்சியாளர் என்றும் மோடி புகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 4ஆம்தேதி தமிழகம் வந்து, குலசேகரன்பட்டினம் ராக்கெட்தளத்தை திறந்துவைத்தார். அப்படியே கல்பாக்கம் விரைவு ஈனுலை நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் பொதுக்கூட்டம் என்று பிரதமர் மோடியின் வருகை அமர்க்களப்பட்டது.

மார்ச் 15ல் கன்னியாகுமரி பொதுக்கூட்டம். 18ஆம்தேதி கோவையில் ரோட் ஷோ எனப்படும் வாகனப் பேரணி.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல ஏப்ரல் 9அன்று 7ஆவது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை, வேலூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் பகுதிகளில் மிகப்பெரிய தேர்தல் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோக்களை நடத்தி விட்டு போயிருக்கிறார்.

தமிழகம், பிரதமர் மோடியின் கவனத்தை இப்போதுதான் ஈர்த்து இழுக்கிறதா என்றால் இல்லை. 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதல்முறை பிரதமரானபோது தமிழகத்தின் கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அதுதான் ஆரம்பப்புள்ளி. பிள்ளையார் சுழி.

2019ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் சீன அதிபர் க்சி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 2022ல் காசி தமிழ்ச்சங்கமம். புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின்போது தமிழ்நாட்டின் செங்கோல், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மேடையில், திருக்குறள்.. இப்படி தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் புதிது அல்ல.

ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் பிரதமரின் வருகை தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.
தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தை உள்ளடக்கிய தென்னிந்திய பகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் ஓர் இருட்டுப் பகுதியாகவே இருக்கிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலையே எடுத்துக் கொள்வோம். அதில், ஆந்திரா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பாரதிய ஜனதாவால் வெற்றி பெற முடியவில்லை. ஆறுதல் பரிசாக கர்நாடகத்தில் 25 தொகுதிகளையும், தெலங்கானாவில் 4 தொகுதிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றியது.

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா பெற்ற வாக்கு சதவிகிதம் 3.6. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதுவும் போய் 2.6% வாக்கு சதவிகிதம்தான் பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்தது.

இந்தநிலைமை 2024 மக்களவைத் தேர்தலில் மாறும் என்று நினைத்திருந்த பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொண்டது.

அதன்பின், 2024 மக்களவைத் தேர்தலுக்காக, இருபெரும் திராவிடக் கட்சிகள் இல்லாமல் சிறிய கட்சிகளுடன் புதிய கூட்டணியை பாரதிய ஜனதா அமைத்துக் கொண்டது. இந்த கூட்டணி, எதிர்பார்த்த அளவுக்கு சரியாக அமையவில்லை என்பதுதான் உண்மை.

2009 மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு தமிழகத்தில் பாரதிய ஜனதா 10 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டது இல்லை.

2014ஆம் ஆண்டு தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா ஒரேயொரு தொகுதியை வென்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியின் உதவியுடன் 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்டு, அதில், 3.6% வாக்குகளைப் பெற்றது. ஓர் இடம் கூட பாரதிய ஜனதாவுக்குக் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நடப்பு தேர்தலில், தமிழகத்தில் 23 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டிய இக்கட்டான சூழலுக்கு பாரதிய ஜனதா கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள பா.ம.க. 10 தொகுதிகளிலும், த.மா.கா. 3 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரெயொரு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இது போன்ற காரணங்களால்தான் பிரதமர் மோடியின் தமிழக வருகைகள் அதிகரித்துள்ளன. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்போல இந்த ஆண்டு மட்டும் 7ஆவது முறையாக தமிழகம் வந்து சென்றிருக்கிறார் பிரதமர் மோடி.

‘பிரதமர் மோடி சரணாலயத்துக்கு வலசை வரும் பறவையைப் போல தமிழகத்துக்கு வந்து வந்து போகிறார்’ என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கருத்து கூற, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, ‘மோடியின் தமிழகப் பயணங்களால் எந்த பயனும் இல்லை’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

சரி. பிரதமர் மோடிக்கு முன் இதுபோல தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போன பிரதமர் யாரும் இருக்கிறார்களா? இருக்கிறார். அவர் ராஜீவ்காந்தி. பிரதமர் மோடியைப் போலவே ராஜீவ்காந்தியும் தேர்தல் நேரத்தில் தமிழகத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்.

1988ஆம் ஆண்டு 3 முறை தமிழகத்துக்கு வந்திருக்கிறார் ராஜீவ்காந்தி.
1989 மக்களவைத் தேர்தலின்போது, 12 முறைக்கும் குறையாமல் ராஜீவ்காந்தி தமிழகத்துக்கு வந்து சென்றிருக்கிறார்.

தேர்தல் பரப்புரையின்போது கடைசி பத்து நாள்களில் மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவு ராஜீவ்காந்தி பயணித்திருக்கிறார். 234 சட்டமன்றத் தொகுதிகளில் கிட்டத்தட்ட நூறு சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்து, 20 லட்சம் மக்களை ராஜீவ்காந்தி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஒருநாளில் 14 மணிநேரம் ஓயாத பயணம், ஒரு நாளில் 8 பொதுக்கூட்டங்கள் என ராஜீவ்காந்தி அசத்திய காலமும் உண்டு.

அத்தனை முறை ராஜீவ் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்ததற்கு காரணம் உண்டு. 1989 தேர்தலில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்து போட்டியிட்டது. திமுக அணி தனித்து நின்றது. ராஜீவ் தலைமையிலான காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டது. எம்.ஜி.ஆர். இல்லாத அதிமுக உடைந்து கிடந்த சூழலில் காங்கிரசுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று காங்கிரஸ் டெல்லி தலைமை நம்பியது. அதனால் ராஜீவ் அத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடித்தது. இரண்டாவது இடத்துக்கு ஜெ.அணி வந்தது. சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைப் பிடித்தது. அத்தனை முறை பயணப்பட்டும் ராஜீவ்வின் காங்கிரஸ் 26 இடங்களை வென்று மூன்றாவது இடத்தையே பிடித்தது.

இப்போது மீண்டும் மோடிக்கு வருவோம்.

2024 மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி தமிழகத்துக்கு 7 முறை வந்துவிட்ட நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தின் மீதும் பிரதமர் மோடி அதிக கவனம் வைத்துள்ளார்.
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளுடன், கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதி இவற்றைச் சேர்த்தால் மொத்தம் 60 தொகுதிகள்.

இவை கிட்டத்தட்ட உத்தரபிரதேசத்தின் 80 மக்களவைத் தொகுதிகளுக்குச் சமமானவை. எனவே இந்தமுறை தமிழகம், கேரளம், புதுச்சேரி மீது பிரதமர் மோடியின் தனிக்கவனம் அழுத்தமாக விழுந்திருக்கிறது.

தவிர, தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், லட்சத்தீவு போன்ற தென்னிந்திய மக்களவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 129. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இந்த 129 தொகுதிகளில் பா.ஜ.க பெற்ற இடங்கள் வெறும் 29தான்.

இந்திய அளவில் நடப்பு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா, தனித்து குறிவைத்திருக்கும் இலக்கு 370 தொகுதிகள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உதவியுடன் பா.ஜ.க வைத்திருக்கும் இலக்கு 400!

இந்த மேஜிக் எண்களைத் தொட வேண்டும் என்றால் தென்னிந்தியாவில் கணிசமான தொகுதிகளை கண்டிப்பாக பா.ஜ.க.வென்றாக வேண்டும். அந்த வகையில் தென்னிந்தியாவின் 129 தொகுதிகளில் குறைந்தபட்சம் 84 இடங்களை வெல்ல வேண்டும் என பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. பிரதமர் மோடியின் அடுக்கடுக்கான தமிழகப் பயணங்களுக்கு இதுவும் காரணம்.

‘தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் பிரதமர் 7 முறை பயணம் செய்தாலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிகமாக நம்பியிருப்பதும், குறிவைத்திருப்பதும் 6 தொகுதிகளைத்தான். அவை தென்சென்னை, வேலூர், கோவை, பெரம்பலூர், நீலகிரி, விருதுநகர்’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

‘பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவது 2024 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு மட்டுமல்ல. 2026 சட்டமன்றத் தேர்தல், 2029ல் வர இருக்கும் மக்களவைத் தேர்தலையும் மனதில் கொண்டுதான் அவர் அடிக்கடி தமிழகம் வருகிறார்’ என்ற கணிப்பும் இருக்கிறது.

ஆக பிரதமர் மோடியின் தமிழக வருகைகள் நீண்ட நெடிய திட்டம்.

ஆயிரத்தொரு அரபு இரவுகள் கதையில் வரும் மாலுமி சிந்துபாத்தின் 7 கடற்பயணங்கள் புகழ்பெற்றவை. அதுபோல பிரதமர் மோடியின் 7 வருகைகள் தமிழக பாரதிய ஜனதாவுக்கு இந்தமுறை உடனடி பலன் தருமா? அல்லது நீண்டகாலம் கழித்துத்தான் பலன் தருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...