No menu items!

மிஸ் ரகசியா – அமித்ஷாவின் கோபம்

மிஸ் ரகசியா – அமித்ஷாவின் கோபம்

“தமிழக பாரதிய ஜனதா மீது அமித் ஷா கடும் கோபத்தில் இருக்கிறாராம்” என்றவாறு உள்ளே வந்தாள் ரகசியா. ஓணம் பண்டிகை நெருங்குவதை குறிக்கும் வகையில் கேரள கசவு சேலையில் வந்திருந்தாள்.

“ஓணம் டிரெஸ்ஸெல்லாம் சரி… நேந்திரம் சிப்ஸ் இல்லையா?” என்றோம்.

“நியூஸ் சிப்ஸ் மட்டுமல்ல… நேந்திரம் சிப்ஸையும் தருவாள் இந்த ரகசியா” என்றவாறு ஒரு சிப்ஸ் பேக்கட்டை எடுத்து நீட்டினாள்.

சிப்ஸைக் கொறித்துக்கொண்டே, “தமிழ்நாடு பாஜக மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம்?” என்றோம்.

“தமிழக பாஜக தலைவர்கள் பிரதமர் மோடி பற்றியோ மத்திய அரசின் திட்டங்கள் பற்றியோ மக்களிடம் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு தேவையில்லாத அக்கப்போர்களில் ஈடுபடுவதாக நினைக்கிறாராம் அமித் ஷா. அந்த கோபத்தில் தமிழகத்தில் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேதி கொடுத்திருந்த அமித் ஷா, இப்போது அதில் இருந்து பின்வாங்கிவிட்டாராம். இதுபற்றி பிரதமர் மோடியிடமும் நேரடியாக சொல்லிவிட்டாராம். தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்பான விஷயங்களை கவனித்துக்கொள்ளும் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மீதும் அமித் ஷாவுக்கு கோபமாம். அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை என்று நினைக்கிறாராம். அதனால் அவரை வேறு மாநிலத்தின் பொறுப்புக்கு மாற்றுவது பற்றி சிந்தித்து வருகிறார் அமித் ஷா. அத்துடன் இப்போது தமிழக பாரதிய ஜனதா தலைவர்களை நம்பாமல், இங்கு கட்சியை வளர்க்கும் பொறுப்பை ஆர்எஸ்எஸ் சேவகர்களிடம் ஒப்படைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.”

“அண்ணாமலையையும் அவர் நம்பவில்லையா என்ன?”

“அவர் மீதான அதிருப்திகளும் அதிகரித்து வருகின்றன. மாநிலத்தில் அவர் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மத்திய அமைச்சர் முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, எஸ்.வி.சேகர், ராதாரவி என்று பலர் அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ளனர். இதில் ராதாரவியும், எஸ்.வி.சேகரும் கட்சி மாறுவது பற்றி யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை மீது இருக்கும் கோபத்தை காட்டுவதற்காகத்தான் நடிகை குஷ்பு, பல்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ட்விட்டரில் பதிவு செய்தார். அமைச்சர் முருகனும் அண்ணாமலை பற்றி கட்சி மேலிடத்துக்கு பல புகார்களைத் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் அண்ணாமலை தனக்கு அறையைக்கூட ஒதுக்கவில்லை என்று அமித் ஷாவிடம் புகார் கூறியிருக்கிறார் முருகன். கட்சித் தொண்டர்களை சந்திக்க தனக்கு ஒரு அறை வேண்டாமா என்று முருகன் கேட்க, அண்ணாமலையை மீறி அவருக்கு அங்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று கமலாலயத்தில் அந்த அறையில் அமர்ந்து அவர் கட்சிப் பிரமுகர்களை சந்தித்துள்ளார். இதில் அண்ணாமலைக்கு கொஞ்சம் வருத்தம் என்று பேசிக்கொள்கிறார்கள்.”

“அதிமுக விவகாரங்கள் எப்படி போகிறது?”

“எடப்பாடி அணியில் இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் அணிக்கு தாவியதும், ‘நம்ம கொஞ்சம் வெயிட்டா கவனிச்சா பொதுக்குழு உறுப்பினர்கள் நிறைய பேர் வருவாங்க’ என்று ஓபிஎஸ்ஸிடம் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு யோசனை சொல்லும் ஆடிட்டர், ‘அதெல்லாம் வேண்டாம். மேல்முறையீட்டில் உயர்நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடிக்கு பாதகமாக வரும். அப்போது அங்கு இருப்பவர்கள் தானாகவே இங்கு வந்துவிடுவார்கள்” என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு ஓபிஎஸ்ஸும் அமைதியாக இருந்துள்ளார். இப்போது தீர்ப்பு எடப்பாடிக்கு ஆதரவாக வர, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலரே எடப்பாடி பக்கம் சென்றுவிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம். அதேநேரம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ள நிலையில், இந்த ஆணையம் அமைப்பதற்கு காரணமாக இருந்தவர் என்பதால் ஓபிஎஸ் மீது சசிகலாவும் இப்போது கோபத்தில் இருக்கிறாராம்.”

“ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறாரே?”

“இந்த பாத யாத்திரையை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில்தான் ராகுல் காந்தியின் முழு கவனமும் இருக்கிறது. இதை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டால், கட்சித் தலைவர் பதவியை மீண்டும் ஏற்பது குறித்தும் அவர் மறுபரிசீலனை செய்யக்கூடும் என்கிறார்கள் கதர்சட்டைக்காரர்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை, ராகுல் காந்தி அடிக்கடி தொடர்பு கொண்டு பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியைப் பற்றி ஆலோசித்து வருகிறார். இதற்கு கூட்டணி கட்சிகளை அழைப்பது பற்றி ராகுல் காந்தியிடம் அழகிரி யோசனை கேட்டபோது திமுகவுக்கு மட்டும் அழைப்பு அனுப்புங்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவில் நமக்கு எதிராக இருக்கிறார்கள் எனவே அவர்களை அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால்தான் திமுகவுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.”

“இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்கிறார்களே?”

“ராகுல் காந்தியை புகழ்ந்து முரசொலியில் ஒரு பக்க கட்டுரை வந்திருக்கிறது அதை கவனிச்சிங்களா? ராகுல் மீது ஸ்டாலின் ரொம்ப பாசமாதான் இருக்கிறார். பாதயாத்திரையின்போது ராகுல் காந்தியுடன் முதல்வரையும் சில கிலோமீட்டர்கள் நடக்கவைக்க காங்கிரஸ் கட்சியினர் திட்டம் போட்டுள்ளனர். ஆனால் முதல்வர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். பாதயாத்திரையை தொடங்கி வைக்க மட்டும் செய்கிறாராம்..”

“திமுக செய்திகள் வேறு ஏதும் இருக்கிறதா?’

“ஒழுங்காக செயல்படாத 7 மாவட்டச் செயலாளர்களை மாற்றும் முடிவில் இருக்கிறாராம் முதல்வர். அந்தந்த மாவட்டத்தில் அதிகமாக உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளர்களாக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தருமபுரி மாவட்ட செயலாலராக முன்னாள் கல்வி அமைச்சர் பழனியப்பன் நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.”

“நாடாளுமன்ற தேர்தல் இப்போதே சூடுபிடித்து வருகிறதே?”

“ஆமாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பதினைந்து மாதங்கள்தான் இருக்கிறது. ‘எனக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை இல்லை’ என்று நிதீஷ் குமார் சொன்னாலும் அந்த பதவியை நோக்கி அவர் காய் நகர்த்தி வருகிறார் இதன் முதல் கட்டமாக, ‘நான் தேசிய அரசியலுக்கு போகிறேன். பிகார் அரசியலை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று தேஜஸ்வி யாதவிடம் அவர் கூறியிருக்கிறார். தேஜஸ்வி யாதவும் பிரதமர் பதவிக்கு நிதிஷ்குமார் தகுதியானவர் என்று பேசத் தொடங்கியிருக்கிறார். மேலும் தனக்கு நெருக்கமான நண்பரான திருச்சி சிவாவிடம் நிதீஷ் குமாரை திமுக ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த விஷயத்தை திமுக தலைவரிடம் திருச்சி சிவா சொன்னாரா என்று தெரியவில்லை.”

“பாமக எப்படி திட்டம் போடுகிறது?”

“இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் வேண்டாம் என்று பாமக முடிவு எடுத்துள்ளதாம். எட்டு வழி சாலை, பரந்தூர் விமான நிலையம் நெய்வேலி நிலக்கரி சுரங்கநிலம் எடுப்பு போன்றவற்றை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறதாம்.”

”பாமக தனித்து நின்றால் அது திமுகவுக்குதானே சாதகமாக இருக்கும். அப்படி ஒரு முடிவை எடுப்பார்களா?

“எடுக்கலாம். அரசியலில் நமக்குத் தெரியாத பல கணக்குகள் போடப்படும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...