No menu items!

உச்சம் வீட்டில் தீவிரமாகும் திருமண பஞ்சாயத்து

உச்சம் வீட்டில் தீவிரமாகும் திருமண பஞ்சாயத்து

தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகர். இவர் இல்லாமல் பல சாதனைகளும் இல்லை. தொடாத புதிய எல்லைகளும் இல்லை. இப்படி இவரது சினிமா வாழ்க்கை சூப்பர் வாழ்க்கையாக இருப்பது தமிழ் சினிமா ப்ரியர்களுக்கு அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இவரது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைதான் இப்போது வெளியே சொல்ல முடியாத சோதனைகளைக் கொடுத்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இவருக்கு மிகப்பெரிய பிரச்சினை அவரது வயதோ அல்லது உடல்நிலையோ அல்ல. ஆனால் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுக்க வேண்டிய வாரிசுகள்தான் இப்போது மன உளைச்சலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.

நடிகரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்தான். மனைவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால், வீட்டு விஷயங்களில் மனைவி சொல்லே மந்திரம் என இருப்பாராம். இதனால் பல முடிவுகளை அவரது மனைவிதான் எடுப்பாராம். தங்களுடைய வாரிசுகளுக்கும் காதல் திருமணம் செய்து வைக்க மனைவிதான் காரணமாம்.

இந்த காதல் திருமணங்கள்தான் நடிகரை ரொம்பவே அசைத்துப் பார்த்துவிட்டன என்று அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

மூத்த வாரிசு ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது வாரிசு ஒரு தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசை கல்யாணம் பண்ணினார். இந்த இரண்டு திருமணங்களுமே ஆரம்பம் முதலிருந்தே சரிப்பட்டு வரவில்லை. ஆனாலும் தங்கள் குடும்பத்திற்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை கெடுத்து கொள்ளகூடாது, அதனால் முயன்றவரை அந்த குடும்ப வாழ்க்கையில் தாக்குப்பிடிக்குமாறு வாரிசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாம்.

மூத்த வாரிசுக்கும் மாப்பிள்ளை நடிகருக்கும் இடையே பிரச்சினை பெரிதாக வெடிக்க காரணம் நடிகர் தன்னுடைய படங்களை சில நடிகைகளைத் தொடர்ந்து நடிக்க வைத்ததுதானாம். இப்படி நான்கைந்து நடிகைகள் பெயர் அடிப்பட்டதால், இவர்கள் இருவருக்கும் இடையில் வருத்தம் ஏற்பட்டது.

இளைய வாரிசுக்கும், அவர் புகுந்த வீட்டுக்கும் இடையில் நிறைய கலாச்சார மாற்றங்கள். இதனால் திருமணமான 6 மாதங்களிலேயே பிரச்சினைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

மூத்த வாரிசுக்கும், மாப்பிள்ளை நடிகருக்கும் குழந்தைகள் இருப்பதால் இவர்களது பிரிவு தள்ளிப் போய்கொண்டே இருந்தது. ஆனால் அதுவும் ஒரு கட்டம் வரை மட்டுமே பிரிவைத் தள்ளிப் போட முடிந்தது.

கணவர், குழந்தைகளுடன் இருந்தாலும், இவரது ஜாகை அப்பா வீட்டில்தான் அதிகம். பேரன்களும் அம்மாவுடன் செல்வது வாடிக்கையாம். இதுவும் மாப்பிள்ளை நடிகர் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. குழந்தைகள் அப்பா, அம்மா என இரண்டு குடும்பத்தினரிடமும் நெருக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு பக்கமே சாய்ந்தால் பின்னாளில் உறவு விட்டுப் போய்விடும் என்று வருத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி இருக்கிறது. அதேபோல் மாப்பிள்ளை நடிகர் தனது அப்பாவையோ அம்மாவையோ எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுத்தது கிடையாது.

மனைவியின் அப்பா பெரிய ஆளாக இருந்தால் என்ன, என்னை இந்தளவுக்கு உருவாக்கிய என் அப்பாவும் பெரிய ஆள்தான் என்பது மாப்பிள்ளை நடிகரின் வாதம்.

இளைய வாரிசு கொஞ்சம் மாடர்ன் என்பதால், தாக்குப்பிடிக்கமுடியவில்லை. வேறு வழியின்றி இளைய வாரிசின் விவாகரத்திற்கு அவரது பெற்றோர் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

விவாகரத்து வாங்கிய பின்பும் கூட சில மாதங்களில் இளைய வாரிசு ஒரு பெரிய தொழிலதிபரின் வாரிசை திருமணம் செய்து கொண்டார். அவரது மகனுக்கும் புதிய அப்பா கிடைத்தார். இதனால் இவரது வாழ்க்கை இப்போது சுமூகமாக போய் கொண்டிருக்கிறது.

ஆனால் மூத்த வாரிசினால் அப்படி விவாகரத்து வாங்கிவிட முடியவில்லை. காரணம், வளர்ந்த பிள்ளைகள்.

வேறு வழியின்றி இருவரும் கணவன் மனைவியாகவே வெளியுலகத்திற்கு வாழ்ந்து கொண்டிருந்தார்களாம். மூத்த வாரிசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது இயக்குநராகும் அவரது கனவு.

முதல்படம் ஒரு எண்ணை தலைப்பாக வைத்து எடுக்கப்பட்டது. அதில் மாப்பிள்ளை நடிகருக்கும், ஹீரோயினுக்கு நெருங்கிய நட்பு உருவாகிவிட்டது என கிசுகிசுக்கள் கிளம்பின.

இங்கே இவர்கள் இருவருக்குள்ளும் உருவான இடைவெளி, மூத்த வாரிசின் அடுத்தப்பட டைரக்‌ஷனின் போது மிகப்பெரிய இடைவெளியாக மாறிவிட்டதாம்.

பணம், புகழ், அந்தஸ்து என எல்லாமும் இருந்தும் மிஸ் ஆன வலி, சந்தோஷம், வேதனை, ஏமாற்றம் என எல்லாம் இருக்கும் போது தேவைப்படுகிற அருகாமையையும், அன்பையும் ஒரு உதவி இயக்குநர் மூலம் மூத்த வாரிசினால் பெறமுடிந்ததாம்

இந்த உதவி இயக்குநருடன் டிஸ்கஷனில் இருந்ததைதான் மூத்த வாரிசு ஒரு ரிச்சார்ட்டில் தொழிலதிபர் கூட தங்கியிருந்தார் என்று கிசுகிசுவாக வெளியிட்டன சில இணைய ஊடகங்கள்.

அப்பொழுதே மூத்த வாரிசின் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் சில சர்ச்சைகள் கிளம்பிவிட்டதாம். நாளடைவில் அது இந்த ஜோடியின் பிரிவுக்கும் காரணமாகி விட்டதாக கூறுகிறார்கள்.

அந்த நட்பு இப்பொழுதும் தொடர்கிறதாம், மூத்த வாரிசு இயக்கும் படமொன்றில் அந்த உதவி இயக்குநரும் இருக்கிறார். இதனால் இவர்களுக்குள் நட்பு மேலும் நெருக்கமாகி இருக்கிறதாம். ப்ரீ ப்ரொடக்‌ஷன், ஷூட்டிங் நேரங்கள், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் என எல்லா நேரமும் உதவி இயக்குநர்களின் தேவை அவசியம் என்பது இவர்களது நட்புக்கு வாய்ப்பை மேலும் அதிகம் உருவாக்கி கொடுத்துவிட்டது.

மாப்பிள்ளை நடிகரும், மூத்த வாரிசும் தாங்கள் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிகிறோம் என்று வெளிப்படையாக கூறி பல மாதங்கள் கடந்துவிட்டன.

இதனால் இப்போது மூத்த வாரிசு அந்த உதவி இயக்குநரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அடம்பிடிக்கிறாராம்.

இந்த விஷயம் அவரது அப்பாவின் காதில் விழ, பொங்கி எழுந்துவிட்டாராம்.

’பெரிய பசங்க இருக்காங்க. நீப்பாட்டுக்க்கு இப்படி வேற கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்ற. இதெல்லாம் சரியா வராது’ என்று கர்ஜித்து இருக்கிறார்.

ஆனால் மூத்த வாரிசு நான் வாழ்க்கையில் எதையுமே ஒழுங்கா அனுபவிக்கல. அதனால் என் வாழ்க்கையை நானேதான் பார்த்தாகணும். நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்’ என்று பதிலளித்தாராம்.

அப்பா நடிகர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஏனென்றால் அப்பா நடிகர் தன்னுடைய சொத்துக்களையெல்லாம், தனது இரு வாரிசுகளுக்கும் சமமாகப் பிரித்து கொடுத்துவிட்டாராம். அதனால் சொத்தைக் காரணம் காட்டி தனது மகளை சமாதானப்படுத்த முடியாது என்ற வேதனையே அதற்கு காரணம்.

’உன்னோட அப்பா பெரிய நடிகர். எல்லா வசதியும் நமக்கு இருக்கு. ஆனால் நீ சொல்ற பையன் குடும்பம் ரொம்ப சாதாரண குடும்பம். அவன் சம்பாதிச்சாதான் அன்னிக்கு அவங்க சாப்பிடமுடியும். நீ வேற மாதிரி வாழ்ந்து பழகிட்ட. அதனால உனக்கு இந்த கல்யாணம் செட்டாகாது’ என்று கண்கலங்கிவிட்டாராம் அப்பா நடிகர்.

’என் மாப்பிள்ளைக்கு பசங்க மேல் பாசம் அதிகம். அவர் படம் வெளியானால் கூட தாகூர் இண்ஸ்டிடியூட்டில் இருக்கும் ப்ரீவியூ தியேட்டருக்கு பசங்களையெல்லாம் கூட்டிட்டுப் போய் படம் பார்ப்பாரு. அதனால் பசங்களைப் பத்தி கவலைப்படவேண்டாம். என் மாப்பிள்ளை பார்த்துப்பாரு. அவருக்கும் சொத்து நிறைய இருக்கு. அதனால அது ஒரு பிரச்சினையே இல்ல. இனியாவது என் வாழ்க்கையை நானேதான் பார்த்தாகணும்’ என்று தளுதளுத்து விட்டாராம் மூத்த வாரிசு.

அப்பா நடிகரால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. சொத்தையும் பிரித்து கொடுத்தாயிற்று. இனி அவரை தன் வழிக்குக் கொண்டு வர வேறெந்த அஸ்திரமும் இல்லை என்பது புரிந்து கொண்டதால், நீ இப்போது டைரக்ட பண்ற படம் முதல்ல வெளியாகட்டும். அதுல உன்னோட கவனத்தை செலுத்து.ஜெயிக்கிற வழியைப் பாரு. அப்புறம் இதைப்பத்தி பேசலாம்’ என்று இப்பிரச்சினையை தற்காலிமாக தள்ளி வைத்திருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...