No menu items!

என்னை பாதித்த 10 புத்தகங்கள் – நடிகை ரோகிணி

என்னை பாதித்த 10 புத்தகங்கள் – நடிகை ரோகிணி

தன்னைக் கவர்ந்த, தன்னை பாதித்த 10 புத்தகங்கள் பற்றி, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் நடிகை ரோகிணி. அதன் தொடர்ச்சி இங்கே…

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

மரப்பாலம் – கரன் கார்க்கி

கரன் கார்க்கியின் எல்லா எழுத்துகளும் ஏற்றத் தாழ்வுகள் எப்படி ஏற்பட்டது என்பதை பேசுபவை. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, தங்கள் தேவைக்காக, தமிழ்நாட்டில், குறிப்பாக வட சென்னையில் தலித் மக்களை எப்படியெல்லாம் வேலை வாங்கியிருந்தார்கள், எதற்காகவெல்லாம் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை கதையோட்டத்துடன் இந்த நாவல் பேசுகிறது. எழுத்தாளர், இதற்காக அந்த காலகட்டத்தைப் பற்றி பல ஆய்வுகள் செய்து இந்த நாவலை எழுதியுள்ளார் என்பதை படிக்கும்போது  நம்மால் உணர முடிகிறது.

சதத்ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்

இந்தியா – பாகிஸ்தான் பிரவினையின் போது நடந்த விஷயங்கள் அனைத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிற கதைகள், சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள். அதில் மிக முக்கியமானது, டோபா டேக்சிங் என்ற கதை. பிரளயன் நெறியாள்கையில் இந்த சிறுகதை நாடகமாக அரங்கேற்றப்பட்டது. அதில் நான் நடித்துள்ளேன். ஒரு எல்லைக் கோட்டை வரைந்து, நீ இந்தப் பக்கம், நீ அந்தப் பக்கம் என்று, மக்களை அந்த மக்கள் வளர்ந்த சூழலில் இருந்து பிடிங்கிப் போடும்போது ஏற்படும் வலியை, அபத்தத்தை, ஒரு எள்ளலுடன் பேசும் கதை இது.

சதத் ஹசன் மண்ட்டோவின் தாக்கம் இந்தியா முழுவதும் எல்லா எழுத்தாளர்களிடமும் திரைத்துறை கலைஞர்களிடமும் இருக்கிறது. மண்ட்டோவின் சுயசரிதையை நடிகை நந்திதா தாஸ் திரைப்படமாகவே எடுத்திருக்கிறார். சதத் ஹசன் மண்ட்டோ பெரும்பான்மை எழுத்துகள் தமிழில் மொழிபெயர்க்கபட்டு வெளியாகியுள்ளது.

மீட்சி – வோல்கா

சமீப காலத்தில் என்னை மிகவும் பாதித்தவை தெலுங்கு எழுத்தாளர் வோல்கா எழுத்துகள். அவருடைய எல்லா எழுத்துகளுமே எனக்கு பிடிக்கும். இவருடைய பல கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமானது, எல்லோரும் படிக்க வேண்டியது என்று, ‘மீட்சி’ என்ற சிறுகதை தொகுப்பை சொல்வேன். ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து, இந்த சமூகம் அவளை எப்படியாக பார்க்கிறது, சமூகத்தில் அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற நிலை என்ன, அதிலிருந்து அவள் ஏன் மீண்டு வரவேண்டும் என்பதைப் பற்றி வோல்கா இந்த கதைகளில் பேசுகிறார்.

மண்டோதரியும் சூர்ப்பனகையும் பேசிக்கொள்வதில் இருந்து ஒரு கதை தொடங்குகிறது. சீதையை சந்திக்க செல்லும் மண்டோதரி, அப்போது சீதை அலங்காரமே இல்லாமல் உட்கார்ந்திருப்பதை பார்க்கிறார். ‘நீ ஏன் இப்படி அலங்காரமே இல்லாமல் இருக்கிறாய்?’ என்று சீதையிடம் கேட்கிறார். இந்த கேள்வியை, ராவணனுக்காக தன்னை அலங்காரம் செய்து அழைத்து செல்லவே மண்டோதரி வந்துள்ளார் என்று சீதை புரிந்துகொள்கிறார். ஆனால், ‘ராமன் வந்து உன்னை இங்கே இருந்து அழைத்துச் செல்வார் என்று நீ உறுதியாக நம்பும்போது, ஏன் உன்னை நீ அலங்காரம் செய்துகொள்ளக் கூடாது. இந்த அலங்காரம் என்பது உன்னுடைய கணவனுக்காக மட்டும் நீ செய்துகொள்வதா? உனக்காக செய்துகொள்ளக்கூடாதா?” என்று மண்டோதரி கேட்பார். ஒரு பெண்ணாக இந்த கேள்வியை மிக முக்கியமானதாக நான் நினைக்கிறேன்.

ராவணன் கொல்லப்பட்ட பிறகு விபீசணன் பதவியேற்பு நடக்கும். ஆரியர்கள் வழக்கப்படி மண்டோதரி விதவை கோலம் பூண வேண்டும். அப்போதுதான் விபீசணனுக்கு பட்டம் கட்ட முடியும். இதனால், விபீசணன் அண்ணியிடம் போய் கேட்பார். அப்போது மண்டோதரி சொல்வார்: “நம் திராவிட குலத்தில் இதுபோல் பூவும் பொட்டும் எடுக்கும் வழக்கம் இல்லையே. நம்முடைய அம்மாவோ பாட்டியோ பூவும் பொட்டும் இல்லாமல் இருந்து நீ பார்த்திருக்கிறாயா?” என்பார். கடைசியில், பூவும் பொட்டும் எடுக்காமலேதான் மண்டோதரி காட்டுக்குள் செல்வார் என்பதாகவே இந்த கதை முடியும்.

திராவிடர்களுக்கு இருந்த பழக்க வழக்கம் என்ன? ஆரியர்கள் என்ன பழக்க வழக்கங்களை புகுத்தினார்கள் என்பதையும் இந்தக் கதைகளில் வோல்கா பேசுகிறார்கள்.

இலங்கையில் இருந்து திரும்பிய பிறகு ராமனால் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்படுகிறார். அப்போது சூர்ப்பனகையை சீதை சந்திப்பார். அப்போது சீதையைப் பார்த்து சூர்ப்பனகை கேட்பார்: “ராமனைக் காதலித்ததால் உனக்கும் எனக்கும் என்ன கதி ஏற்பட்டுள்ளது பார்த்தாயா?”

ஒரு ஆணாதிக்க சமூகம் கற்பு என்பதை எப்படி பார்க்கிறது, அதை பெண்ணையும் எப்படி நம்ப வைத்தது என்பதையும் வோல்கா கதைகள் பேசுகிறது.

தொடரும்

ரோகிணி பேட்டியை பார்க்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...