கமலும் மணிரத்னமும் 37 வருடங்களுக்குப் பிறகு இணைந்திருக்கும் ’தக் லைஃப்’ பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சும், ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்தி அகியோரும் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் இப்போது இவர்கள் இருவரும் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. துல்கருக்குப் பதிலாக சிம்பு நடிக்கிறார். ஜெயம் ரவிக்குப் பதிலாக அசோக் செல்வனை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.
கமல் – மணிரத்னம் கூட்டணியிலான படத்தில் இருந்து துல்கரும், ஜெயம் ரவியும் விலக காரணம் கால்ஷீட் பிரச்சினை என்றுதான் கூறப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்கிறது கோலிவுட் பட்சி.
முதல் ஷெட்யூல் சென்னையில் நடைபெற்றது. இரண்டாவது ஷெட்யூலை செர்பியாவில் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். கமல் சொன்ன தேதியில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளமுடியாமல் போகவே, கமல் சம்பந்தப்படாத இதர காட்சிகளை படம்பிடித்துவிட்டு மணிரத்னமும், படக்குழுவினரும் திரும்பிவிட்டனர்.
இந்நிலையில்தான் துல்கர் சல்மான் ‘தக் லைஃப்’பில் நடிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் என்று கூறினார். இவர் விலகிய சில நாட்களிலேயே ஜெயம் ரவியும் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.
கமல் கொடுத்த கால்ஷீட்டில் நடிக்க முடியாமல் போகவே, அது மற்ற நட்சத்திரங்களின் கால்ஷீட்டில் குளறுப்படியை உருவாக்கியதாக கூறுகிறார்கள். துல்கர், ஜெயம் ரவி இருவரும் கொடுத்த கால்ஷீட்டை மணிரத்னம் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் இதனால் அவர்கள் நடிக்கும் மற்றப் படங்கள் பாதிக்கப்படுவதால், அவர்கள் இருவரும் குட் பை சொல்லிவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் நடந்த சம்பவமே வேற என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். படம் தொடங்கியதுமே, போட்டோ ஷூட்டுக்காக துல்கரை அழைத்திருக்கிறார்கள். ஆனால் துல்கர் இதற்கு சரியாக ஒத்துழைக்கவில்லையாம். இவர் ஏற்கனவே ’ஒகே காதல் கண்மணி’ படம் மூலம் மணிரத்னம் படத்தில் நடித்திருப்பதால், அந்த நட்பின் அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் ஆரம்பத்தில் எதையும் கண்டுகொள்ளவில்லையாம்.
அடுத்து மற்றுமொரு நாளில் போட்டோ ஷூட்டுக்கு வருமாறு திரும்பவும் துல்கரை அழைத்து இருக்கிறார்கள். அப்போதும் துல்கர் வரவில்லையாம். இதனால் மணிரத்னம் கொஞ்சம் சூடானதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.
சில நாட்கள் கழித்து துல்கரை மீண்டும் அழைத்திருக்கிறார்கள். இந்த முறை போட்டோ ஷூட்டுக்காக வந்த துல்கரை, ஒரு போட்டோ கூட எடுக்காமல், காலையில் இருந்து மாலை வரை காத்திருக்க வைத்துவிட்டார்களாம். வெறுத்து போன துல்கர், மணிரத்னத்தைப் பார்க்க முயற்சி செய்தாராம். ஆனால் அவரை மணிரத்னம் பக்கம் யாரும் விடவே இல்லையாம்.
பொறுத்து பார்த்த துல்கர், சொல்லாமல் கொள்ளாமல் போட்டோ ஷுட்டில் இருந்து கிளம்பி போய்விட்டாராம். இதையறிந்த மணிரத்னம் ஏன் இப்படி செய்தீர்கள் என தனது உதவியாளர்களிடம் கடுமையாக கேட்டாராம்.
பதட்டமான அவரது உதவியாளர்கள் துல்கரை அழைத்தார்களாம். ஆனால் துல்கர் அவர்கள் அழைப்பை ஏற்று கொள்ளவே இல்லையாம்.
இதனால்தான் வேறு வழியின்றி கமலின் அறிவுறுத்தலின் படி சிம்புவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்களாம். சிம்புவும் ஏற்கனவே ‘செக்க சிவந்த வானம்’ படம் மூலம் மணிரத்னமுடன் ஏற்கனவே பணிப்புரிந்து இருக்கிறார். இப்போது கமலுடன் நெருக்கமாகவும் இருக்கிறார். இதனால் சிம்பு ’தக் லைஃப்’ இணைய உடனடியாக ஒப்புக்கொண்டாராம்.
ஜெயம் ரவி ஏன் வெளியேறினார். என்ன காரணம்?
இவர் தக் லைஃப்பிலிருந்து விலக காரணம் கால்ஷீட் பிரச்சினை என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையான, ஒரே காரணம் சிம்புவின் எண்ட்ரீதானாம்.
ஜெயம் ரவி இப்போது மூன்றுப் படங்களில் நடித்து வருகிறார். அவர் நினைத்தால் இந்தப் படங்களின் கால்ஷீட்டை யாருக்கும் பாதகம் இல்லாமல் மாற்றி வைத்து கொள்ள முடியுமாம். ஆனாலும் ஜெயம் ரவி அதை செய்யவில்லை என்கிறார்கள்.
உண்மையில் என்ன பிரச்சினை?
சிம்புவுக்கும், ஜெயம் ரவிக்கும் இடையே நல்ல புரிதலோ, நட்போ இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இவர்கள் இருவரும் நேருக்குநேர் பேசிக்கொள்வது இல்லை என்றும் கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.
கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் சகஜமாக பேசி கொள்வது இல்லையாம்
இப்படியொரு சூழலில் ஷூட்டிங்கில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டால், எப்படி சமாளிப்பது என்பது என புரியாமல்தான். ஜெயம் ரவி தக் லைஃப்பில் இருந்து விலகியதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு இருக்கிறது.