தமிழ்நாட்டுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலுக்கிடையில், மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் அவ்வப்போது சில இடங்களில் பெய்யும் மழை, தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்து வருகிறது.
இதன் அடிப்படையில், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மழைக்கால முன்னெச்சரிக்கை எடுக்கும்படி ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பத்தூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய 26 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், சென்னை வானிலை ஆய்வு மையம், கனமற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர்கள் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி, பேரிடரை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தை முழுமையாக செயல்படச் செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கனமழையால் ஏற்படும் பிரச்சினைகளை கையாள வேண்டும்.
மேலும், மாவட்ட ஆட்சியர்கள் ஏதேனும் நிகழ்வுகள் இருந்தால் அது குறித்து உடனடியாக வருவாய் நிர்வாக ஆணையரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 19-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 19-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பம் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு கேரள கடலோரப் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது.