No menu items!

விடைபெறுகிறார் சுனில் சேட்ரி

விடைபெறுகிறார் சுனில் சேட்ரி

 ‘கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறப் போகிறேன்” என்று விராட் கோலியோ, ரோஹித் சர்மாவோ நேற்று அறிவித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

நாளேடுகளில் நிச்சயம் அந்த அறிவிப்பு முதல் பக்க செய்தியாகி இருக்கும். அத்துடன் அவரது புகழ்பாடவே ஒரு பக்கத்தையாவது பத்திரிகைகள் கொடுத்திருக்கும்.

தனியார் தொலைக்காட்சிகளில் தேர்தல் செய்திகளை ஓரம் கட்டிவிட்டு, அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கும்.

தனி நபர்கள் பலரும் எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அவர்களின் புகழ் பாடியிருப்பார்கள்.

ஆனால் பாவம்… இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஏதும் சுனில் சேட்ரிக்கு கொடுக்கப்படவில்லை. சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அவர் சொன்னது பத்தோடு பதினொன்றாவது செய்தியாகிப் போய்விட்டது. கடந்த 19 ஆண்டுகளாக இந்திய கால்பந்து அணிக்காக உயிரைக் கொடுத்து ஆடிய வீரரின் ஓய்வுக்கு நாம் சரியான மரியாதையை செய்திருக்கிறோமா என்ற கேள்வி இதன்மூலம் எழுந்துள்ளது. கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளை நாம் கொண்டாடத் தவறுவதையும் இது நமக்கு உணர்த்துகிறது.

விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தவர்கள். சுனில் சேட்ரி அப்படி என்ன சாதித்துவிட்டார் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

கோலியுடனும், ரோஹித் சர்மாவுடனும் ஒப்பிடும்போது எந்த விதத்திலும் குறைந்தவரல்ல சுனில் சேட்ரி. இந்தியாவுக்காக இதுவரை 150 சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஆடிய சுனில் சேட்ரி, இதுவரை மொத்தம் 94 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த 4-வது வீர்ர் என்ற பெருமையை சுனில் சேட்ரி பெற்றிருக்கிறார்.

இந்த வரிசையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (128 கோல்கள்), அலி டேய் (108 கோல்கள்), லயோனல் மெஸ்ஸி (106 கோல்கள்) ஆகிய மூன்று வீர்ர்கள் மட்டுமே அவரை முந்தி இருக்கிறார்கள். அவர்களை உலகமே கொண்டாட,  நம் சுனில் சேட்ரியை இந்திய விளையாட்டு ரசிகர்களே அதிகம் கொண்டாடாமல் இருப்பது மிகப்பெரிய வேதனை.  

1984-ம் ஆண்டில் ஆந்திராவில் பிறந்த சுனில் சேட்ரி சிறுவயதில் வளர்ந்தது காங்டாக் நகரில். அவரது பெற்றோர் இருவரும் நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். சேட்ரியின் அம்மா சுசீலா சேட்ரி, நேபள நாட்டுக்காக பெண்கள் கால்பந்து போட்டிகளில் ஆடியவர். அதனாலேயே தனது மகனையும் கால்பந்து வீரனாக்க வேண்டும் என்று பயிற்சி அளித்துள்ளார்.

கேங்காடக்கில் உள்ள பள்ளியில் ஆரம்பத்தில் படித்த சேட்ரி, அதன்பிறகு பெற்றோருக்கு இடமாற்றம் கிடைத்ததால் டெல்லியில் செட்டில் ஆகியுள்ளார். அங்குள்ள ராணிவப் பள்ளியில் படித்த காலத்திலேயே கால்பந்து போட்டிகளில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் இவர் சிறப்பாக ஆட அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறி உள்ளார்.

2001-ம் ஆண்டில் மலேசியாவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான ஆசிய போட்டியில் இவரது கால்கள் செய்த வித்தை பலரையும் கவர பல கிளப்களிலும் இருந்து அழைப்பு வந்துள்ளது அதனால் பிளஸ் 2 வகுப்புடன் படிப்புக்கு குட்பை சொன்ன சேட்ரி, கால்பந்தில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார்.

2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டிதான் சேட்ரி பங்கேற்ற முதல் போட்டி. தனது அறிமுக போட்டியிலேயே கோல் அடித்து அசத்திய சேட்ரி, அன்றுமுதல் கால்பந்தில் இந்தியாவின் சச்சினாக இருந்துள்ளார். தனிப்பட்ட அளவில் இவர் பல சாதனைகளை படைத்தாலும் இந்திய கால்பந்து அணி போட்டிகளில் ஜெயிக்காததால், இவரைப் பலரும் கவனிக்கவில்லை.

கிரிக்கெட் வீரர்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ள நிலையில் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்துள்ள வீரர்களின் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள சேட்ரி வெறும் 7 கோடி ரூபாயை மட்டுமே சம்பாதித்துள்ளார். அதுவும் கிளப் கால்பந்து போட்டிகளில் ஆடியதால்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் சேட்ரி பெரிதாக கவலைப்படவில்லை. ”நான் சாதனைகளைப் பற்றியோ புகழைப்பற்றியோ கவலைப்படுவதில்லை. மைதானத்தில் எஞ்சாய் செய்து ஆடவேண்டும் என்பது மட்டுமே என் குறிக்கோள்” என்கிறார்.

இப்போது வரும் ஜூன் 6-ம் தேதி குவைத்துக்கு எதிராக நடக்கும் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிதான் தன் கடைசி கால்பந்து போட்டி என்று அறிவித்திருக்கிறார் சுனில் சேத்ரி. அவரை வாழ்த்தி வழியனுப்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...