No menu items!

The Railway Man – மீண்டும் ஒரு பாஜக பிரச்சார படம்?

The Railway Man – மீண்டும் ஒரு பாஜக பிரச்சார படம்?

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே அக்கட்சிக்கு சாதகமான கதை அம்சங்கள் கொண்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ’சாம்ராட் பிருத்விராஜ்’, ’பிஎம் நரேந்திர மோடி’, ’தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி உள்ளன. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘தி ரயில்வே மென்’ வெப் சீரிஸையும் இந்த படங்களின் வரிசையில் எடுத்துக் கொள்ளலாம்.

போபாலில் நடந்த விஷவாயு விபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் உயிரையும் கொடுத்து, பலரின் உயிரைக் காத்த ரயில்வே தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘தி ரயில்வே மென்’ வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.

போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி? அந்த விபத்தின் உண்மைகளை மறைக்க யூனியன் கார்பைட் நிறுவனம் என்னவெல்லாம் செய்தது? இதனால் மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன? மக்களை காப்பாற்ற அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது? மக்களை காப்பாற்ற ரயில்வே தொழிலாளர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள் என பல விஷயங்களை நேயர்களுக்கு சொல்கிறது ‘தி ரயில்வே மென்’.

இதில் மக்களை காப்பாற்ற அப்போதைய மத்திய, மாநில அரசுகள் என்னவெல்லாம் செய்தன என்று கேள்விக்கான பதிலைச் சொல்லும் காட்சிகளில்தான் பாரதிய ஜனதாவின் சார்பு அரசியல் காட்டப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தால் மக்களுக்கு ஆபத்து வரக்கூடும் என்று முன்கூட்டியே தெரிந்தே, அந்த ஆலையை அங்கு அமைக்க அரசு அனுமதி கொடுத்ததாக முதல் குற்றச்சாட்டை அப்போதைய காங்கிரஸ் அரசுகள் மீது சில காட்சிகளில் சுமத்துகிறார்கள்.

அடுத்ததாக மீட்புப் பணி… போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க ஒரு மீட்பு ரயிலை அந்த நகருக்கு அனுப்ப வேண்டும் என்று இத்தொடரின் நாயகனான (ரயில்வே பொது மேலாளர்) மாதவன் மேலதிகாரிகளிடம் கேட்கிறார். ஆனால் அதை ஏற்க ரயில்வே அமைச்சகமும், டெல்லி மேலிடமும் மறுக்கிறது. ஏற்கெனவே விஷவாயுவால் போபால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நகருக்கு ஒரு ரயிலையும், ரயில்வே ஊழியர்களையும் அனுப்பி அவர்களை பலிகொடுக்க முடியாது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதாவது போபால் மக்களை காப்பாற்ற எதையும் செய்ய முடியாது என்று அவர்கள் கைவிரிக்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பையும் மீறித்தான் மாதவன் தனி ரயிலை எடுத்துக்கொண்டு போபால் நகருக்கு செல்கிறார். இந்த காட்சியின் மூலம் போபாலுக்கு உதவ அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை… மாறாக சில அதிகாரிகள்தான் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றினார்கள் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.

அதேபோல் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மாற்று மருந்தை சொல்லும் ஜெர்மானிய விஞ்ஞானியின் கருத்தை ஏற்க மறுத்து அவரை மத்திய அரசு உடனடியாக நாடு கடத்துவதாகவும் இதில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. யூனியன் கார்பைட் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உதவியுடன் தப்பும் காட்சிகளும் இந்த வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக போபால் விஷவாயு விபத்தைச் சொல்லும் கதையில், எந்த தேவையும் இல்லாமல் இந்திரா காந்தி கொலைக்கு பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைக் காட்சிகள் புகுத்தப்பட்டுள்ளான. ஒரு காட்சியில் தொலைக்காட்சியில் பேசும் ராஜீவ் காந்தி, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றி பேசும்போது, “ஒரு பெரிய ஆலமரம் விழும்போது நிலம் அதிரவே செய்யும்’ என்று கூறும் காட்சி இந்த வெப் சீரிஸ் இடம்பெற்றுள்ளது.

இப்படி காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை இந்த தொடரில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

5 மாநில தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சூழலில் இந்த தொடர் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் பாஜகவுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...