No menu items!

அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளன. இதனால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றி, அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதால் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ‘இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார்’ என்று தெரிவிக்கப்பாட்டிருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பில், “அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்க  வேண்டும். பொதுக்குழு முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்த வேண்டும். கட்சியில் இருந்து நீக்கபட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்” என்று கூறப்பட்டுள்ளது.

பிபிசி ஆவணப்பட தடை: 3 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிபிசி நிறுவனம், கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்தப் படத்தினை திரையிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதேபோல் இந்த தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி.எல்.சர்மாவும் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் எம் சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, “இந்த மனுக்களுக்கு மூன்று வார காலத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’ என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தின் தடைக்கான உண்மையான ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகளின் மறுவிசாரணை ஏப்ரல் மாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் நிலைக்குறியீட்டில் இருந்து அதானி எண்டர்பிரைசஸ் நீக்கம்

அமெரிக்க பங்குச்சந்தை குறியீட்டு நிறுவனமான டவ் ஜோன்ஸ் குறியீடு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,” கணக்கு மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் டவ் ஜோன்ஸ் நிலைக்குறியீட்டில் இருந்து நீக்கப்படுகிறது. இது இந்த மாற்றம் பிப்.7-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தைகளான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களை அவைகளின் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் (ASM) கீழ் வைத்துள்ளது.

இதற்கிடையில் மும்பை பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்து விற்பனையானது. இந்த வீழ்ச்சி வியாழக்கிழமை 26 சதவீதமாகவும், புதன்கிழமை 28 சதவீதமாகவும் இருந்தது.

கடந்த ஆறு வர்த்தக அமர்வுகளில் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் 10 நிறுவனங்கள் ரூ.8.76 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் நாளை (04.02.2023) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் முழுநேரமும் செயல்படும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் இருந்து ஜோகிந்தர் சர்மா ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்  ஜோகிந்தர் சர்மா  அறிவித்துள்ளார். 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றிபெறக் காரணமான கடைசி ஓவரை வீசியவர் ஜோகிந்தர் சர்மா. அதன் பிறகு சில போட்டிகளில் ஆடிய அவரால் இந்திய அணிக்கு தொடர்ந்து தேர்வாக முடியவில்லை. இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகா அவர் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2002-2017 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள். ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை. எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் விளையாடியது ஒரு முழுமையான பாக்கியம், மேலும் எனது கனவை நனவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...