No menu items!

பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் – என்ன நடந்தது? – மிஸ் ரகசியா

பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் – என்ன நடந்தது? – மிஸ் ரகசியா

“அண்ணாமலையோட வாக்கிங் போனியே… அந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?” என்று ஆபீசுக்குள் நுழைந்த ரகசியாவை விசாரித்தோம்.

“அண்ணாமலை ஹேப்பி. ஆனா அமித் ஷாதான் மகிழ்ச்சியா இல்லை. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூட்டத்தை அண்ணாமலை திரட்டிக் காட்டுவார்னு எதிர்பார்த்திருந்தார் அமித் ஷா. ஆனால் பாதி நாற்காலிகள் காலியா இருந்ததுல அவருக்கு அதிர்ச்சி. அதனால பிரதமரை ராமநாதபுரத்துல நிக்க வைக்கிறதுங்கிற முடிவுல கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்காம்.”

“அப்ப தமிழ்நாட்ல மோடி போட்டியிட மாட்டாரா?”

“தமிழ்நாட்ல மோடியை நிக்க வைக்கணும்கிறதுல பாஜக இப்பவும் உறுதியா இருக்கு. ஆனா ராமநாதபுரத்துல நிக்க வைக்கணுமான்னுதான் யோசிக்கறாங்க. அங்க பூத் கமிட்டி அமைக்கக்கூட போதுமான தொண்டர்கள் இல்லைன்னு கட்சிக்குள்ளேயே ஒரு பேச்சு இருக்கு. இந்த நிலையில ராமநாதபுரத்துல பிரதமர் போட்டியிட்டா எல்லாத்துக்கும் அதிமுகவோட தயவை எதிர்பார்த்து நிக்கவேண்டி இருக்கும். அதனால ராமநாதபுரத்துக்கு பதிலா பாஜகவுக்கு தொண்டர்கள் அதிகமா இருக்கற கோவை, கன்னியாகுமரி தொகுதிகள்ல ஏதாவது ஒண்ணுல பிரதமரை நிக்க வச்சா என்னன்னு பாஜக யோசிக்குது.”

“அவங்க யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள எலெக்‌ஷன் வந்துரும். சரி, நடைப்பயணம் எப்படி இருக்கு?”

“ராகுல் காந்தியோட நடைப்பயணம் மாதிரி இது இல்லை. ராகுல் காந்தி காலையில இருந்து மதியம் வரைக்கும் நடப்பாரு. பிறகு கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு திரும்பவும் நடப்பாரு. பொதுக்கூட்டத்துல பேசுவாரு. ஆனா அண்ணாமலை அப்படி இல்லை. தினமும் சில கிலோமீட்டர்கள் மட்டும்தான் நடக்கறாரு. பிறகு அவருக்காக தயாரிக்கப்பட்டிருக்கிற பிரத்யேக வேன்ல ஏறி, நடைப்பயணத்தை வேன் பயணமா கண்டின்யூ பண்றாரு. அடுத்த ஊரோட எல்லை வரைக்கும் வேன்ல போய் அங்க இறங்கி கொஞ்ச தூரம் நடக்கறாரு. இதைப்பத்தியெல்லாம் உளவுத் துறை அப்பப்ப முதல்வருக்கு தகவல் கொடுத்துட்டு இருக்கு.”

“நடைப்பயணத்தோட தொடக்க விழால இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா… தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடின்னு முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசி இருக்காரே?”

“ஆமாம் இதை பாஜககாரங்க இதை ரசிக்கல. இரும்பு மனிதர் எப்படி முதல்வர் பதவி வாங்கினார்னு தெரியாதா? பாஜக கூட்டத்துக்கு வந்துட்டு எடப்பாடியை புகழ்றார்னு அண்ணாமலைகிட்ட சொல்லியிருக்காங்க. தேர்தல் முடியட்டும் பார்த்துக்கலாம். இப்ப எதுவும் பேச வேண்டாம்னு அண்ணாமலை சொன்னாராம். எடப்பாடிக்கு எரிச்சலைக் கொடுக்கும் சம்பவம் ஒண்ணும் நடக்கப் போகுது”

“என்னது?”

“அண்ணாமலையோட பாதயாத்திரைல ஓபிஎஸ்ஸும் கலந்துக்கப் போறாராம். அதுக்காக தன்னோட ஆதரவாளர்கள் ஐயாயிரம் பேரை கூட்டிக்கிட்டு அண்ணாமலைகூட நடக்கப் போறார். எடப்பாடி தூதுவரா உதயகுமார் வந்தாலும் அதிமுக ஆதரவாளர்கள், தொண்டர்கள் யாரும் பாதயாத்திரைல கலந்துக்கல. ஆனா, ஓபிஎஸ் ஐந்தாயிரம் பேரை கூட்டிட்டு வரேன்னு சொன்னதும் அண்ணாமலைக்கு சந்தோஷமாயிருக்கு. இவர்தான் பாஜகவின் உண்மையான ஆதரவாளர்னு கட்சிக்காரங்ககிட்ட ஓபிஎஸ்ஸை பாராட்டி பேசியிருக்கிறார்”

‘ஓபிஎஸ் கலந்துக்கிட்டா எடப்பாடி கடுப்பாயிடுவாரே..அதிமுக – பாஜக கூட்டணி வருமா வராதா?”

“வரும். ஆனா எடப்பாடி கெத்து காட்டுவார். டெல்லிலருந்து அமித்ஷா கேஸ்களை காட்டுவார். கூட்டணி உடனே வந்துரும். இப்படி நான் சொல்லல, கமலாலயத்துல பேசி சிரிக்கிறாங்க”

“பாஜக நிர்வாகிகளை உளவுத் துறை கண்காணிக்கறதா கேள்விப்பட்டேனே.”

“ஆமாம். அதுக்காக பெரிய குழுவையையே இறக்கி விட்டிருக்காம் மாநில அரசு. பாரதிய ஜனதா நிர்வாகிகளோட சமூக வலைத்தள பதிவுகளையும், மேடைப் பேச்சுகளையும் தீவிரமா கவனிக்கணும்னு அவங்களுக்கு உத்தரவு போட்டிருக்காங்க. திமுக பத்தியும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைப் பத்தியும் யாராவது அவதூறா பேசினா அவங்க மேல கடுமையான சட்டங்களில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருக்காங்களாம்.”

”கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியை ஜாமீன்ல கோர்ட் விடுதலை பண்ணிருச்சே. எதுக்காக இந்த அவசர கைது? ஏதாவது விவரம் கிடைச்சதா?”

“பத்ரி பத்தின ஃபைலை முதல்வர் பார்வைக்கு அனுப்பியிருக்காங்க. அதுல சமூக ஊடகங்கள்ல பாஜக ஆதரவாளர்களுக்கு பத்ரி சேஷாத்ரி மூலம்தான் பணம் போகுது. அவர்தான் திமுகவினரை திட்டுபவர்களுக்கு பணம் கொடுக்கிறாதா அந்த ரிப்போர்ட் சொல்லியிருக்கு. பத்ரி மாதிரி பலரை பாஜக கையில வச்சுக்கிட்டு அரசுக்கும் திமுகவுக்கும் எதிரா சமூக ஊடகங்கள்ல பதிவுகள் போடுறாங்க, பத்ரி மேல ஆக்‌ஷன் எடுத்தா மத்தவங்களுக்கு பயம் வரும்னு அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. ஆனா முதல்வர் எந்த நடவடிக்கைக்கும் உத்தரவு கொடுக்கல. காவல் துறைல சில அதிகாரிகளே அவசரப்பட்டு அவரை கைது செய்திருக்காங்கனு அறிவாலயத்துல பேச்சு. முதல்வருக்கு நெருக்கமானவர்கள் பத்ரியை கைது செய்தது தேவையில்லாத ஆணினு முதல்வர்கிட்ட சொல்லியிருக்காங்க. நீதிமன்றத்தையும் நீதிபதிகளை பற்றியும் தவறா பேசியிருந்தா அதை நீதிமன்றம் பாத்துக்கட்டும்னு சொன்னாங்களாம். முதல்வரும் அதை புரிஞ்சிருக்கார். அதனாலதான் ஜாமீன் மனு விசாரணயின்போது போலீஸ் காவலில் இருக்க வேண்டும்னு அரசு தரப்பு அழுத்தம் காட்டவில்லையாம்”

“அப்போ முதல்வருக்குத் தெரியாம கைது நடந்திருக்கா? ஆச்சர்யமாவும் இருக்கு அதிர்ச்சியாவும் இருக்கு”

“அப்படிதான் அறிவாலயத்துல பேசிக்கிறாங்க. இந்த விஷயத்துல சின்னவர் கூட அவசரப்பட்டுட்டோம்னு சொன்னதா செய்தி இருக்கு”

”செந்தில் பாலாஜி எப்படியிருக்கிறார்? நியூஸே காணோமே?’”

“சுகமா இருக்கிறார். அப்ருவர் ஆகப் போறார்னு ஒரு நியூஸ் திமுக வட்டாரத்துல இருக்கு. அதற்கான முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்காம். தன்னோட தம்பி அசோக்கையும் கைது பண்ணிட்டா சமாளிக்கிறது கஷ்டம்னு செந்தில்பாலாஜிக்கு அழுத்தம் கொடுத்திருக்காங்க. அதனால செந்தில் பாலாஜி அப்ரூவர் ஆகலாம்”

“அப்போ திமுக என்ன செய்யும்?”

”அதற்கான பதில்களையும் தயார் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. தம்பி, அவருக்கு இவ்வளவு பெரிய பதவி, பொறுப்பெல்லாம் உடனே கொடுக்க வேண்டாம்னு சொன்னேன் ஆனா அவரு கேக்கலனு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடில தன்னோட ஆதரவாளர்கள் கிட்ட வருத்தப்பட்டாராம்.

“அவர் அப்ரூவர் ஆனா திமுகவுக்கு கஷ்டம்தான். துரைமுருகன் சோகமா இருக்கார்னா கே.என்.நேரு உற்சாகமா இருக்கார் போல தெரியுதே.”

“முதல்வரோட பாராட்டுதான் இதுக்கு காரணம். கட்சியிலயும் சரி ஆட்சியிலயும் சரி அமைச்சர் நேருதான் சுறுசுறுப்பா செயல்படறார்னு அவருக்கு நூத்துக்கு நூறு மார்க் போட்டிருக்கார் முதல்வர் ஸ்டாலின். திருச்சியில் மண்டல வாக்காளர் முகவர் பாசறையை எந்த சலசலப்பும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தினதுதான் இதுக்கு காரணம். அதனால டிசம்பர் மாசம் சேலத்தில் இளைஞர் அணி மாநாட்டை நடத்தற பொறுப்பையும் அவருக்கு கொடுக்கப் போறாராம் முதல்வர். மாநாட்டு வேலைகளை நேரு கச்சிதமா செய்வார். அதனால இளைஞரணி நிர்வாகிகள்கிட்ட நேரு சொல்ற வேலைகளை மட்டும் செய்யச் சொன்னா போதும்னு உதயநிதிகிட்ட முதல்வர் சொல்லி இருக்கார். நேருவும் அந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள்ல இறங்கிட்டார். முதல் கட்டமா இளைஞர் அணி மாநாட்டுக்காக ஒரு லட்சம் டி சர்ட்டுகளை ஆர்டர் கொடுத்திருக்கார்.”

“தென்காசி மாவட்ட செயலாளரை மாத்தி இருக்காங்களே?”

“தென்காசி மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்துல இருக்கு. மணிப்பூர் கலவரத்துக்கு எதிரா தென்காசில நடந்த போராட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியை மாவட்ட செயலாளரான சிவ பத்மநாபன் அவதூறா பேசினது பெரிய பிரச்சினை ஆகியிருக்கு. தமிழ்ச்செல்வி இதுபத்தி கனிமொழிகிட்ட புகார் சொல்ல, அவர் அதை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கார். கூடவே மாவட்ட செயலாளரை பதவியில இருந்து நீக்கனும்னு சிபாரிசும் செஞ்சிருக்கார். கனிமொழியைப் பொறுத்தவரை இதுவரைக்கும் யாரையும் நீக்கச் சொல்லி அவர் ஸ்டாலின்கிட்ட சொன்னதில்லை. அப்படி சொன்னது இதுதான் முதல் முறை. அதனால பிரச்சினையோட தீவிரத்தை உணர்ந்த முதல்வரும், அவரை சிவ பத்மநாபனை மாவட்ட செயலாலர் பதவியில இருந்து நீக்கி மாவட்ட செயலாளரா ஜெயபாலனை நியமிச்சு இருக்கார். பிறகு ஜெயபாலனை கூப்டு பேசின ஸ்டாலின், சிவபாலன் தரப்பை அரவணைச்சு போகணும்னு சொல்லி இருக்கார். பிறகு சிவ பத்மநாபன்கிட்ட பேசின முதல்வர், ‘கனிமொழி இதுவரை கட்சி விஷயங்களில் யாரையும் நீக்கச் சொல்லி சிபாரிசு செஞ்சதே கிடையாது. முதல் முறையா உங்களை நீக்கச் சொல்லி சிபாரிசு செஞ்சிருக்காங்க. தென்காசியில் அந்த அளவுக்கு நீங்கள் கட்சிப் பெயரை கெடுத்து வச்சிருக்கீங்க’ன்னு சத்தம் போட்டிருக்கார்.”

“என் எல் சி விவகாரம் தொடர்பா அன்புமணி நடத்தின போராட்டத்தில வன்முறை வெடிச்சிருக்கே.”

“இந்த விஷயத்தால பாமக மேல திமுக தலைமைக்கு கடும் கோபம் ஏற்பட்டிருக்கு. இனி என்ன ஆனாலும் அவங்களுக்கு நம்ம கூட்டணியில இடம் இல்லைன்னு முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்தி இருக்காராம். அதனாலதான் ‘ஜாக்கிரதை… வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’னு அன்புமணி ராமதாஸுக்கு எச்சரிக்கை பேட்டி தந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு”

”அதிமுகவும் தள்ளி நிக்குது. திமுகவும் தள்ளிப் போகுது..அப்ப பாமக என்ன செய்யும்?”

“பாமகவுக்கு கஷ்டகாலம்தான்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...