No menu items!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலக்கிய விருதை வென்ற தமிழச்சி!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலக்கிய விருதை வென்ற தமிழச்சி!

இந்தியாவில் ‘ஞானபீடம்’ போல், ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய இலக்கிய விருது ‘மைல்ஸ் ஃபிராங்க்ளின் (The Miles Franklin Literary Award). இவ்விருது இந்த ஆண்டு ஈழத் தமிழரான சங்கரி சந்திரன் எழுதிய ‘Chai Time at Cinnamon Gardens’ ஆங்கில நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அரசியலுடன் போர் காரணமாக புலம்பெயரும் மக்களின் அலைச்சல்களையும் அவர்கள் சந்திக்கும் கலாச்சார முரண்களையும் பேசுகிறது இந்த நாவல். இதனால், ஆஸ்திரேலியா விருது என்றாலும் ஆஸ்திரேலியா கடந்த உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இந்த விருதை கொண்டாடி வருகிறார்கள்.

யார் இந்த சங்கரி சந்திரன்?

ஆஸ்திரேலியாவின் பன்பாராவில் வசிக்கும் சங்கரி சந்திரன், சமூக நீதித்துறை வழக்கறிஞராக பணிபுரிகிறார். இவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். இலங்கையில் வடக்கே அளவெட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக அகதியாக வெளியேறி இங்கிலாந்து சென்றார்கள். மூன்று ஆண்டுகளுக்கு பின்பு ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து குடியேறினார்கள்.

சங்கரி சந்திரனின் மூன்றாவது நாவல் ‘Chai Time at Cinnamon Gardens’. போர், இனப் படுகொலை, இனவெறி, குடும்பம், காதல், நட்பு போன்றவைதான் இந்நாவலின் கருப்பொருள்கள். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிப்பதற்காக எண்பதுகளில் ஈழத்தை விட்டு வெளியேறிய ஒருவரால் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடத்தப்படும் கறுவாத்தோட்டம் என்ற முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கை வழியாக இதையெல்லாம் இந்நாவல் பேசுகிறது.

இலங்கையில் 1980களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி புலம்பெயர்ந்த தம்பதிகளான மாயா, ஜாகிர் இருவரும், சிட்னியில் கறுவாத்தோட்டம் முதியோர் இல்லத்தை நடத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் ஜாகிர் காணாமல் போய்விடுகிறார். அவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. அதன்பின்னர் தம்பதியினர் மகள் அஞ்சலி முதியோர் இல்லத்தை நடத்துகிறார். மகள் பராமரிப்பில் அந்த இல்லத்திலேயே மாயா வசிக்கிறார். உள்ளூர் கவுன்சிலராக வரும் கரேத் ஒரு முக்கிய கதாபாத்திரம். இவர் அஞ்சலியின் நீண்டகால நண்பர்.

அந்த முதியோர் இல்லத்திலிருந்த – ஆஸ்திரேலியாவிற்கு முதன் முதலாக வந்து இறங்கியவர், ஆஸ்திரேலியாவினைக் கண்டுபிடித்தவர் என்றெல்லம் போற்றப்படுகின்ற – கேப்டன் குக் சிலையை இடித்துத் தள்ளுவதிலிருந்து, நாவல் பல விவாதங்களை ஆரம்பிக்கிறது.

கேப்டன் குக் சிலையை அகற்றியதற்காக, இலங்கைத் தமிழர்களால் நடத்துகின்ற கறுவாத் தோட்டம் முதியோர் இல்லத்தை நிறவெறிபிடித்தவர்கள் என்று உள்ளூர் கவுன்ஸில் நோட்டீஸ் அனுப்ப, விவகாரம் நீதிமன்றம் வரை போகின்றது. அதன் பின்னர் இந்த சிக்கல் எவ்வாறெல்லாம் விஸ்வரூபம் எடுக்கிறது என நாவல் விரிகிறது.

இந்நாவல் குறித்து இலங்கைத் தமிழரும் விமர்சகருமான மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம், “முதல் பார்வையில், இந்நாவல் முதியோர் இல்லத்தில் வாழும் பல்வேறு வயதான ஆஸ்திரேலியர்கள் பற்றிய ஒரு எளிய கதை என்று தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்நாவல் பல காலக்கெடுவைக் கொண்டுள்ளது. இனம், அதிர்ச்சி, பன்முக கலாச்சார நாடாக அறியப்படும் ஆஸ்திரேலியாவின் கட்டமைப்பு சமத்துவமின்மை போன்ற பல சிக்கலான விஷயங்களையும் பேசுகிறது.

கறுவாத் தோட்டம் ஒரு கலாச்சாரப் போரின் தளமாக மாறுகிறது. இந்நாவலில் குடும்ப வன்முறை இருக்கிறது; ஒரு குழந்தையின் சோகமான இழப்பு, சித்திரவதை, இடம்பெயர்வு, உள்ளூர் அரசியல் போர், திருமணத்திற்கு புறம்பான விவகாரங்கள் என பல விஷயங்கள் இருக்கிறது.

‘மஹாவம்சம்’ என்ற பொய் நூலின் மீது கட்டமைக்கப்பட்ட இலங்கையின் வரலாற்றைப் போல, கேப்டன் குக் வருகையோடு ஆஸ்திரேலியாவின் வரலாற்றைக் கட்டியெழுப்புகின்ற, அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிடுகின்ற அஞ்சலி, ஆஸ்திரேலியாவின் அரசியல் ஆன்மாவின் மீதே கை வைக்கிறார். வெறுமனே ஆஸ்திரேலிய அரசியலுக்குள் நின்று விடாது, இலங்கையின் பல்வேறு அரசியல் சம்பவங்களோடும் அதன் பாதிப்புகளோடும் கோர்த்துக்கொண்டே போகிறார். தொழில்முறை சட்டத்தரணி என்பதால் தர்க்கவிசாரங்களோடு நாவலை இறுக்கமாகியிருக்கிறார்” என்கிறார்.

இந்நாவல் குறித்து ‘The Weekend Australian’ இதழ் ‘சங்கரி சந்திரன் ஒரு சிறந்த கதைசொல்லி’  எனப் பாராட்டியுள்ளது.

The Daily Telegraph, ‘அவசரமாகவும் அவசியமாகவும் உணரும் ஒரு ஈர்க்கக்கூடிய கதை இது. அதுவும் பயங்கர வாசிப்பு’ எனக் கூறியுள்ளது.

The Guardian, ‘இந்தப் புத்தகத்தை சுலபமாக வாசித்துவிட முடியாது. வாசிக்க முழு கவனமும் தேவைப்படும். ஆனால், அப்படி கவனத்துடன் வாசிப்பவர்களுக்கான வெகுமதியை நாவல் அளிக்கும்’ என்று கூறியுள்ளது.

Miles Franklin விருதுக் குழுவின் சார்பில் சங்கரியை அழைத்து, ‘Chai Time at Cinnamon Gardens’ நாவலை தேர்வு செய்துள்ள செய்தியை சொன்னபோது முதலில் அவரால் நம்ப முடியவில்லையாம். நான்கு தடவைகள் திரும்பத் திரும்பக் கூறிய பின்னரே, என்ன சொல்ல வருகிறார்கள் என உணர்ந்துகொண்டாராம்.

இந்த விருதின் மதிப்பு 60 ஆயிரம் ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் 32 லட்சத்து 70 ஆயிரத்து 381 ரூபாய், 60 பைசா)

“மைல்ஸ் ஃபிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவது அசாதாரணமானது. ‘ஆஸ்திரேலியாவாக இருத்தல்’ என்றால் என்ன என்பதை ஆராயும் நாவலான ‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ இந்த வழியில் அங்கீகரிக்கப்பட்டது என்பது எனக்கு மிகவும் பெருமை. நான் இன்னும் அதிர்ச்சியில்தான் இருக்கிறேன்”என்று சங்கரி சந்திரன் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள் சங்கரி!

3 COMMENTS

  1. This is really appreciated one because to write this book as a writer Sankari would have been gone the pais
    She felt, lived, loved in through book of her words totally.
    Congratulations to her and Miles Franklin.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...