No menu items!

அதிரடியாக சந்தாவை குறைத்த அமேசான் ப்ரைம்!

அதிரடியாக சந்தாவை குறைத்த அமேசான் ப்ரைம்!

அமேசன் ப்ரைம் – அமேசான் ப்ரைம்லைட் – எது ஒகே?

இன்றைக்கு ட்ரெண்ட் ஸ்ட்ரீமிங் சேவைகள்தான். இதனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார் மாதிரியான ஒடிடி நிறுவனங்களுக்கு இந்தியா மிகப்பெரும் ஒடிடி சந்தையாக கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனால் இங்குள்ளவர்களை தங்களது சந்தாதாரர்களாக மாற்ற இந்த ஒடிடி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தப் போட்டியால் லாபம் இந்தியர்களுக்குதான். போட்டிப் போட்டுகொண்டு தங்களது சந்தாவை குறைப்பது அல்லது நம்முடைய பாக்கெட்டை அதிகம் பதம் பார்க்காத சந்தா கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்துவது என தினம் தினம் ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஒடிடி ஜாம்பவான்கள்.

நெட்ஃப்ளிக்ஸ் தனது சந்தாவை குறைத்தது. ஜியோ சினிமா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க வைத்து தன் பக்கம் ஈர்த்தது. இதனால் வேறு வழியில்லாமல் டிஸ்னி ஹாட்ஸ்டார் அடுத்து வருகிற கிரிக்கெட் போட்டிகளை மொபைல் போனில் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. இப்போது வேறு வழியில்லாமல் அமேசானும் கட்டணக்குறைப்பு விஷயத்தில் இறங்கி வந்திருக்கிறது.

எப்படியாவது இந்திய சந்தாதாரர்களை தனது அமேசான் ப்ரைம் வீடியோவின் வாடிக்கையாளர்களாக மாற்றிவிட வேண்டுமென அமேசான் துடிப்பது நன்றாக தெரிகிறது. இதனால் ‘அமேசான் ப்ரைம் லைட்’ [Amazon Prime Lite] என்ற ஒரு புதிய மெம்பர்ஷிப் திட்டத்தை அமேசான் அறிவித்து இருக்கிறது.

இந்த அமேசான் ப்ரைம் லைட், கொஞ்சம் மலிவானது. எளிமையானது. கொஞ்ச நாட்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த திட்டம் கிடைத்தது. இப்போது இந்த லைட்டான, கவர்ச்சி திட்டத்தை அனைவருக்கும் வழங்குகிறது அமேசான்.

அப்படியென்றால் அமேசான் ப்ரைம், அமேசான் ப்ரைம் லைட் இந்த இரண்டும் என்ன வித்தியாசம்.. எது நமக்கு பொருத்தமாக இருக்கும். எதை தேர்ந்தெடுத்தால் தேவையில்லாமல் பணம் கொடுப்பதை தவிர்க்கலாம்.. என்ற கேள்வி இப்போது எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.

அமேசன் ப்ரைம் வீடியோஸ் இந்தியாவில் பல்வேறு சந்தா திட்டங்களை பல்வேறு விதமான பலன்களுடன் வழங்கி வருகிறது.

இதன் மாதாந்திர சந்தா கட்டணம் 299 ரூபாய். இதில் ப்ரைம் வழங்கும் அனைத்து பலன்களும் அப்படியே கிடைக்கும்.

அதேபோல் ப்ரைமின் காலாண்டுதிட்டம் கட்டணம் 599 ரூபாய். எல்லா பலன்களும் இத்திட்டத்தில் கிடைப்பதோடு, மாதாந்திர திட்டத்தோடு ஒப்பிடுகையில் 78 ரூபாய் வரை நீங்கள் சேமிக்கலாம்.

வருடாந்திர திட்டத்தின் சந்தா கட்டணம் 1,499 ரூபாய். இத்திட்டத்தில் ப்ரைமின் எல்லா பலன்களும் கிடைப்பதோடு, காலாண்டு திட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 337 ரூபாயை வாடிக்கையாளர்கள் சேமிக்க முடியும். மாதாந்திர திட்டத்தோடு பார்த்தால் சுமார் 649 ரூபாய் மிச்சம்.

இப்போது மலிவான கட்டணத்தில் அறிமுகப்படுத்தி இருக்கும் அமேசான் ப்ரைம் லைட்டின் வருடாந்திர திட்டம் 999 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் ஏறக்குறைய அனைத்து ப்ரைம் பலன்களும் இடம்பெற்று இருந்தாலும், அமேசான் மியூசிக்கை பயன்படுத்த முடியாது. பாட்டெல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

நான் மொபைல் போனில்தான் அமேசானை பார்ப்பது வழக்கம் என்று தங்களை ஹை டெக் ஆசாமியாக நினைத்து கொள்பவர்களுக்கு, 599 ரூபாய் வருடாந்திர கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இது மொபைல் போனில் பார்ப்பது என்பதால், சில அம்சங்கள் இருக்கும், சில அம்சங்கள் இருக்காது. அதாவது வழக்கமான ஸ்டாண்டர்ட் ஸ்ட்ரீமிங்தான். அமேசான் மியூசிக்கை பயன்படுத்த முடியாது. சொல்லப்போனால், இத்திட்டம் வழக்கமான வருடாந்திர திட்டத்தை விட 900 ரூபாய் குறைவு. ஆனாலும் அமேசான் ஒரிஜினல்ஸ், லைவ் கிரிக்கெட், திரைப்படங்கள், ஐ.எம்.டி.பி. வழங்கும் எக்ஸ்-ரே ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். ரிலாக்ஸாக இருக்கும் போது பார்ப்பதற்கு ஏற்ற வகையில் டவுன்லோட் செய்து ஆஃப் லைனில் பார்க்க முடியும் என்ற செளகரியத்தையும் அளிக்கிறது.

இப்போது அறிமுகமாகி இருக்கும் அமேசான் லைட் ப்ளான், 12 மாதங்களுக்கு 999 ரூபாய் சந்தாவில் கிடைக்கிறது. மாதாந்திர திட்டம், காலாண்டு திட்டத்தை இன்னும் அமேசான் நம்மூருக்கு கொடுக்கவில்லை.

பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்து அமேசான் தன்னுடைய இ-காமர்ஸ் தளத்தில் வாங்கும் பொருட்களுக்கும் இந்த இரண்டு திட்டங்கள் மூலமாக சில சலுகைகளை அளிக்கிறது.

அமேசான் ப்ரைம் லைட் மெம்பர்ஷிப்புக்கு, இரண்டு நாட்கள் மற்றும் ஸ்டாண்டர்ட் டெலிவரி வாய்ப்பை வழங்குகிறது. அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு அதே நாளில் டெலிவரி அல்லது ஒரே நாளில் டெலிவரி என்ற அட்டகாசமான டெலிவரியை அளிக்கிறது.

அமேசான் இப்படி என்றால், ஜியோ சினிமா இப்போது மற்ற ஒடிடி நிறுவனங்களின் சந்தாதாரர்களை தன் பக்கம் இழுக்க புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஜியோ சினிமா ப்ரீமியம் என்ற பேக்கில் ‘பெஸ்ட் ஆஃப் ஹாலிவுட்’ என்று வருடாந்திர திட்டமொன்றை வழங்குகிறது. இதற்கு 999 ரூபாய் சந்தா வசூலிக்கப்படுகிறது.

உயர்தர ஆடியோ மற்றும் வீடியோவில் போன், டேப்லெட்கள், லேப்டாப்கல், தொலைக்காட்சிகள் என எந்த கருவிகளில் வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். ஒரே நேரத்தில் 4 கருவிகளில் பார்க்க முடியும் என்று சலுகைகளை அள்ளி விட்டிருக்கிறது ஜியோ சினிமா.

மேலும் ஜியோ சினிமா மற்றுமொரு வேலையில் சத்தமில்லாமல் இறங்கி இருக்கிறது. ஹெச்.பி.ஒ.-வை கையகப்படுத்தியதைப் போலவே, இப்போது தெலுங்கில் பிரபலமாக இருக்கும், ஆஹா ஒடிடியை கையகப்படுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருக்கிறதாம்.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் மை ஹோம் க்ரூப் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஆஹா ஒடிடி-யை வாங்கிவிட்டால், அதன் தெலுங்கு சந்தாதாரர்கள் ஜியோ சினிமா வசமாகிவிடுவார்கள்.

மற்றொரு பக்கம், இந்திய ஒடிடி தளத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கும் சோனி லைவ் மற்றும் ஸீ5 இணையவும் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்துவருகிறது. இந்த ஒப்பந்தமும் முடிந்துவிட்டால், சோனி லைவ் உடன் ஸீ5 இணைக்கப்பட்டுவிடும்.

இந்த இணைப்புக்கு பிறகு சோனி லைவ், புதிய சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஒடிடி சந்தை மிகப்பெரியது என்பதால், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற வெளிநாட்டு ஒடிடி நிறுவனங்கள் மலிவான சந்தா திட்டம் மூலம் இங்குள்ள மார்க்கெட்டை அசைக்கப் பார்க்கின்றன. அதேநேரம் ஸீ5, ஆஹா போன்ற இந்திய ஒடிடி நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

இதனால் இன்னும் சில மாதங்களில் இன்னும் மலிவான சந்தா திட்டங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...