No menu items!

அதி பயங்கர அமேசான் காடு – தனியே 11 நாட்கள்!

அதி பயங்கர அமேசான் காடு – தனியே 11 நாட்கள்!

மோகன ரூபன்


அமேசான் காடு, உலகின் மிகப்பெரிய மழைக்காடு. அதன் பரப்பளவு 55 லட்சம் சதுர கி.மீ.. கிரேட் பிரிட்டனையும், அதற்குப் பக்கத்தில் இருக்கும் அயர்லாந்தையும் 17 முறை தூக்கி அமேசான் காட்டுக்குள் வைத்துவிடலாம். அந்த அளவுக்கு அது பெரிய காடு. அமேசான் காடு ஒரு தனிநாடாக இருந்தால் அது உலகத்தின் 9-ஆவதுபெரிய நாடு!

உலகுக்கு 20 விழுக்காடு உயிர்க் காற்றைத் தரும் நுரையீரல் இது. அமேசான் காட்டில் மழை விழுந்தால் மரத்தின் தலையில் விழுந்த மழைத்துளி, தரையைத் தொட 10 நிமிடம் வரை ஆகும். ஒரு விழுக்காடு சூரிய ஒளிதான் அமேசான் காட்டுக்கு உள்ளே நுழைய முடியும். அந்த அளவுக்கு அடர்த்தியான காடு.

ஆறாயிரத்து 840 கி.மீ. நீளமுள்ள அமேசான் ஆறு, இந்த மழைக்காட்டுக்குள்தான், அனகோண்டா பாம்பு போல வளைந்து நெளிந்து ஓடுகிறது. பிரேசில், பெரு, கொலம்பியா உள்பட 9 லத்தீன் அமெரிக்க நாடுகளை தன் பச்சைக்கரங்களால் ஆரத்தழுவி அணைத்திருக்கும் காடு அமேசான் காடு.

அமேசான் வடிநிலம் 40 ஆயிரம் வகை தாவரங்கள், 1,300 வகை பறவைகள், 3,000 வகை மீன்கள், 430 வகை பாலூட்டிகள், 25 லட்சம் வகை பூச்சிகளின் தாய்வீடு.

அது மட்டுமல்ல. 400 முதல் 500 வகையான 10 லட்சம் பழங்குடி மக்களின் தாயகம் அது. இதில் 50 வகை பழங்குடிகள் இதுவரை வெளியுலகத்தையே பார்க்காதவர்கள்.

சரி. அமேசான் காடுகள் பற்றிய இந்த அறிமுகத்தை நிறுத்திக் கொண்டு, அங்கு நடந்த ஓர் அதிரவைக்கும் உண்மை சம்பவத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். நடுவானத்தில் பறந்த விமானத்தில் இருந்து அமேசான் காட்டுக்குள் விழுந்து ஒரு பெண் பிழைத்துக் கொண்டார் என்றால் அது ஓர் அதிசய நிகழ்ச்சிதானே?

அந்த அதிசயப் பெண், பெரு நாட்டைச் சேர்ந்தவர். பெயர் ஜூலியானே கப்கா. வயது 17. அப்பா பேர் ஹான்ஸ் வில்கெம் கப்கா. ஜெர்மன் நாட்டிலே இருந்து வந்து பெரு நாட்டில் குடியேறிய அவர், பெரிய உயிரியல் அறிஞர். அம்மா பேர் மரியா கப்கா. அவரும் வெப்ப மண்டல பறவைகளைப் பத்தி ஆய்வு செய்து வந்த ஓர் உயிரியல் ஆய்வாளர்தான்.

1971ஆம் வருஷம் டிசம்பர் 23-ஆம் தேதி. பெரு நாட்டின் தலைநகரமான லிமாவில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜூலியானே கப்கா பங்கேற்று பட்டம் வாங்கினார். அந்த விழாவிலே அம்மா மரியா மட்டும் கலந்து கொண்டார்.

மறுநாள் டிசம்பர் 24ஆம்தேதி. நள்ளிரவு 12 மணி வந்தால் கிறிஸ்துமஸ் திருவிழா. டிசம்பர் 24-ஆம் தேதி, லிமா நகரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சொந்த நகரமான பாங்குவானாவுக்குப் போக அம்மாவும், மகளும் முடிவு செய்தார்கள். அங்கே அப்பாவுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பெருநாளை அமர்க்களமாக கொண்டாட வேண்டும் என்பது ஜூலியானேவின் திட்டம்.

அது கிறிஸ்துமஸ் காலம் என்பதால் எல்லா விமானங்களின் இருக்கைகளும் நிரம்பிவிட்டன. லான்சா ஃபிளைட் 508 என்கிற விமானத்தில் மட்டும்தான் 2 இருக்கைகள் கிடைத்தன. மொத்தம் 90 இருக்கைகள் கொண்ட விமானம் அது. அம்மாவும், பெண்ணும் அந்த விமானத்திலே ஏறிக்கொண்டார்கள்.

லான்சா விமானநிறுவனம் கவனக்குறைவுக்குப் பேர் போன நிறுவனம். ஜூலியானே ஏறிய எல்-188 எலக்ட்ரா வகை விமானம், அடிக்கடி விபத்தில் சிக்குகிற விமானம். அந்த வகையைச் சேர்ந்த 58 விமானங்கள் இதுவரை விபத்துக்குள்ளாகி இருக்கின்றன.

லான்சா ஃபிளைட் 508, 90 பயணிகளோடு வானம் ஏறியது. அம்மாவும், பெண்ணும் சாண்ட்விச் சாப்பிட்டார்கள். பச்சைப் பசேல் என இருந்த அமேசான் காடு மீது விமானம் இப்போது பறக்கத் தொடங்கியது.

இன்னும் பதினைந்து நிமிடநேரம் பறந்தால் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும். இந்த நேரம் பார்த்து வானம் இருண்டது. நடுவானத்தில், டர்புலன்ஸ் என்கிற மேகக்குவியலை விமானம் சந்தித்தது. அந்த மேகக்குவியலுக்குள்ளே விமானம் சிக்கித்தவிக்க, விமானி முடிந்த அளவுக்கு போராடினார்.

விமானம் இப்போது பேயாட்டம் ஆட ஆரம்பித்தது. மேலே கப்போர்ட்களில் இருந்த பைகள், பெட்டிகள், துணிகள் எல்லாம் பயணிகள் மேலே சிதறி விழ ஆரம்பித்தன. விமானத்துக்குள்ளே ஒரே கூச்சல் குழப்பம்.

இந்தநேரம் வெள்ளை நிறத்தில் மின்னல் ஒன்று விமானத்தைத் தாக்கி, விமானத்தின் வலது இறக்கையை ஒடித்தது. இப்போது அடுத்த மின்னல். இடதுபக்க இறக்கையும் முறிந்தது. விமானம் சிறகிழந்த பறவை போல நடுவானத்திலே, கிட்டத்தட்ட பத்தாயிரம் அடி உயரத்திலே சிதறி சின்னாபின்னமானது.

இளம்பெண் ஜூலியானே கப்கா இப்போது விமானத்துக்கு வெளியே நட்டநடுவானத்திலே, வெட்டவெளியிலே இருந்தார். அதுவரை காதில் கேட்டுக்கொண்டிருந்த விமான இயந்திரத்தின் சத்தம், பயணிகளின் அலறல்கள் எல்லாம் அப்படியே திடீரென நின்றுபோனது.

யார் செய்த புண்ணியமோ தெரியாது? ஜூலியானே கப்கா அமர்ந்திருந்த இருக்கை அவருடன் இன்னும் உறுதியாக ஒட்டிக்கொண்டிருந்தது. இருக்கையுடன் சேர்த்து மூன்றாயிரம் மீட்டர் உயரத்தில் இருந்து, அடர்ந்து அமேசான் காட்டை நோக்கி ஜூலியானே விழுந்து கொண்டிருந்தார் அவர் விழுந்த வேகம் எவ்வளவு தெரியுமா? ஒரு நொடிக்கு 45 மீட்டர் வேகம்.

கீழே இருந்த அமேசான் காட்டு மரங்கள், அவருக்கு ஏதோ காய்கறிகூடை மாதிரி தெரிந்தது. அமேசான் காட்டுக்குள் போய் விழுகிறோம் என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. அதன்பின் ஒரு மின்னல் மின்னியதைப்போல இருந்தது. கண்கள் இருண்டன.

ஜூலியானேவுக்கு விழிப்பு ஏற்பட்டபோது அமேசான் காட்டுத்தரையில் அவர் உயிருடன் இருந்தார். அவரது காலர் எலும்பு உடைந்து போயிருந்தது. மனித உடலில் ஏற்படும் எலும்பு முறிவுகளில மிகக்குறைவான ஆபத்துள்ள எலும்பு முறிவு இந்த காலர் எலும்பு முறிவுதான். இதைத்தவிர வலது கையிலே ஓர் ஆழமான வெட்டு, கண்ணிலே காயம். கூடவே கொஞ்சம் சிராய்ப்புகள்.

ஜூலியானே எழுந்து நின்றார். நடக்க ஆரம்பித்தார். நடந்ததை அவரால் நம்பவே முடியவில்லை. நடுவானத்தில் விமானத்தில் இருந்து விழுந்து உயிர்பிழைத்து ஒரு பெண் எழுந்து நடக்கிறார் என்றால் யார்தான் அதை நம்புவார்கள்?

விமானப் பயணத்தின்போது ஜூலியானே கப்கா, ஸ்லீவ்லெஸ் மினி டிரஸ் ஒன்றை அணிந்திருந்தார். அந்த உடை கந்தர்கோலமாகிவிட்டது. ஆடை கிழிந்துபோனதைப்பற்றி ஜூலியானே கவலைப்படவில்லை. காரணம் அமேசான் காட்டுக்குள் அவரது அரை நிர்வாணக் கோலத்தைப் பார்க்க ஆட்கள் யாரும் இல்லை.

மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து ஒருவர் இவ்வளவு சிறிய காயங்களோடு உயிர் பிழைப்பது எவ்வளவு பெரிய அதிசயம். இதில், உடை கிழிந்து போனதைப் பற்றி வருத்தப்பட முடியுமா என்ன?

‘விமானத்தில் இருந்து விழுந்த அம்மா என்ன ஆனார்? வேறு யாராவது உயிர்பிழைத்தார்களா? ஜூலியானே அங்கும் இங்கும் தேட ஆரம்பித்தார். ம்ஹூம். யாரையும் காணவில்லை. அடர்ந்த அந்த அமேசான் காட்டுக்குள் ஜூலியானே இப்போது சுற்றித்திரிய ஆரம்பித்தார். அன்றிரவு அந்த அடர்ந்த காட்டுக்குள்ளே அவர் படுத்துத் தூங்கினார்.

ஜூலியானேவின் அம்மாவும், அப்பாவும், உயிரியல் அறிஞர்கள் என்பதால், அமேசான் காட்டுப்பகுதியில் அவர்கள் ஓர் ஆய்வுநிலையம் அமைத்து சிலகாலம் அங்கே குடியிருந்திருக்கிறார்கள். சிறுமியாக இருந்த ஜூலியானேவும் அவர்களுடன் அந்த நடுக்காட்டு ஆய்வுநிலையத்தில் தங்கி இருந்திருக்கிறாள். ஆகவே, ஜூலியானேவுக்கு அமேசான் காடுகளைப் பற்றி முன்கூட்டியே பரிச்சயம் உண்டு.

அமேசான் காடு, விஷச் சிலந்திகள், அனகோண்டா மாதிரியான பாம்புகள், கொசுக்களுக்குப் பேர் போன இடம். ஜாகுவார் என்கிற பெரிய சிறுத்தையும், ஆறுகளில் ஆபத்தான முதலைகளும் உண்டு. இதெல்லாம் ஜூலியானேவுக்குத் தெரியும்.

அப்போது மழைக்காலம். அமேசான் காட்டில் கேட்ட தவளைகளின் சத்தம் ஜூலியானேவுக்கு பழகிய சத்தமாக இருந்தது. அவர் நடக்க ஆரம்பித்தார். சரியான திசைக்குப் பதிலாக தவறான திசையில் முன்னேறினால், மனிதர்கள் வாழும் பகுதிக்குப் பதிலாக இன்னும் அடர்ந்த காட்டுக்குள் அவர் போய்விட வாய்ப்புண்டு. இருந்தும் நம்பிக்கையுடன் ஜூலியானே முன்னேறினார்.

வழியில், விமானத்தில் இருந்து விழுந்த ஒரு லாலிபாப் மிட்டாய் பொதி கிடந்தது. அதை எடுத்து ஜூலியானே சாப்பிட்டார்.

அது மழைக்காலம். தொடர்ந்து மழையும், தூறலும் விழுந்ததால் கற்களை உரசி தீமூட்டி குளிர்காய முடியவில்லை. எல்லா இடங்களும் ஈரமும், சேறுமாக இருந்தன. மழைக்காலம் என்பதால் மரங்களில் பழங்களும் இருக்கவில்லை.

ஜூலியானே கடுமையான பூச்சிக்கடிகளைச் சந்திச்சார். அவரது காயங்களில் புழு வைக்க ஆரம்பித்தது.

காட்டுக்குள் சிக்கிக் கொண்டால் ஏதாவது ஆற்றைக் கண்டுபிடித்து அந்த ஆற்றின் கரை வழியே நடக்க வேணடும். அப்படி நடந்தால் மனிதர்களைப் பார்க்க வாய்ப்புண்டு. ஜூலியானேவுக்கு இது தெரியும். அதனால் ஓர் ஆற்றைக் கண்டுபிடித்து அந்த ஆற்றின் ஓரமாக அவர் நடக்க ஆரம்பித்தார்.

அமேசான் ஆறு, அதன் துணை ஆறுகளில் பிரானா என்கிற ஆபத்தான மீன்கள் உண்டு. ஆள் சிக்கினால் சில நிமிடங்களில் அந்த மீன்கூட்டம் ஆளைப் பிய்த்துத் தின்று எலும்புக்கூடாக்கி விடும். பிரானா மீன்கூட்டம் எப்போதும் ஆற்றின் கரைப்பகுதியில்தான் இருக்கும். இதனால் ஆற்றோரம் ஜூலியானே கவனமாக நடந்தார்.

ஓர் இடத்தில், சில மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. அவை, ஜூலியானே பயணம் செய்த அதே விமானத்தைச் சேர்ந்த சில பெண் பயணிகளின் உடல்கள். அந்த உடல்களை பிணம்தின்னிக் கழுகுகள் கிட்டத்தட்ட தின்று தீர்த்திருந்தன. அந்த உடல்களில் அம்மா மரியாவின் உடல் இருக்கிறதா என்று ஜூலியானே தேடினார்.

அந்த பெண்களின் நகங்களில் நெயில் பாலிஷ் என்கிற நகப்பூச்சு இருந்தது. அம்மா மரியா நகப்பூச்சு எதுவும் போட மாட்டார். அதனால, அந்த உடல்களில் அம்மாவின் உடல் இல்லை என்கிற முடிவுக்கு ஜூலியானே வந்தார்.

கடுமையான குளிர், மழை, பசி. அரிதாகக் கிடைத்த சில பழங்களை ஜூலியானே கவனமாக மெல்ல ருசி பார்த்தார். காரணம் அவை நச்சுப் பழங்களாக இருக்கலாம். ஜூலியானேவின் முன்னெச்சரிக்கை பலன் அளித்தது. அவர் கவனமாக ருசி பார்த்த பழங்கள் நச்சுப் பழங்கள் என்பது தெரிந்துவிட்டது. அவற்றை உடனே துப்பி விட்டார் ஜூலியானே.

உலகில் ஆதியில் வாழ்ந்த நமது பழங்கால மனிதகுல முன்னோடிகள் ஆரம்பத்தில் இப்படித்தான் பழங்களை கவனமாக ருசி பார்த்து, அவை நல்ல கனிகளா, நச்சுக் கனிகளா என்பதைத் தெரிந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 45 ஆயிரம் தலைமுறைகளைக் கடந்தபிறகும் மனிதர்களின் மரபணுக்களில் இந்த ஆதிமனிதர்களின் முன்னெச்சரிக்கை இன்றும் உள்ளது. ஜூலியானேவிடமும் அது இருந்ததில் வியப்பில்லை.

உடல்சோர்வு, பசி, காயங்கள். இதனால் ஒரு கட்டத்தில் மனம் சலித்துப்போனார் ஜூலியானே. நல்லவேளை. 9ஆவது நாள். ஆற்றோரம் அவர் ஒரு குடிசையைப் பார்த்தார். அது மீனவர்கள் கட்டிவைத்திருந்த தற்காலிக குடிசை. ஜூலியானே அதற்குள் நுழைந்தார். உள்ளே யாரும் இல்லை. அந்த குடிசைக்குள் சில பயன்தருகிற பொருட்கள் இருந்தன. அவற்றை வைத்து தனக்குத் தெரிந்த அளவில் ஜூலியானே காயங்களுக்குச் சிகிச்சை செய்து கொண்டார். ஒரு சிறிய கேனில் இருந்த பெட்ரோலை காயங்களில் ஊற்றி, முப்பது புழுக்களை அவர் வெளியே இழுத்துப் போட்டார்.

அன்று 11ஆவது நாள். அந்த குடிசைக்குரிய மீனவர்கள் திரும்பி வந்தார்கள். ஜூலியானேவைக் கண்டதும் அவர்கள் பதறிப்போனார்கள். காரணம், அமேசான் ஆற்றில் வாழும் ஒருவகை தேவதை அல்லது கடற்கன்னி போன்ற ஒரு பெண் என ஜூலியானேவை அவர்கள் தவறாக நினைத்து விட்டார்கள். தான் ஒரு மானிடப்பெண்தான் என்று ஜூலியானே அவர்களுக்குப் புரிய வைத்தார்.

ஜூலியானேவை ஒரு படகில் ஏற்றி மீனவர்கள் நகரத்துக்குக் கொண்டுவந்தார்கள். அங்கிருந்து ஒரு ஹெலிகாப்டர் மூலமாக ஜூலியானே அவசர மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு போகப்பட்டார்.

ஜூலியானே பத்தாயிரம் அடி உயரத்திலே பறந்த விமானத்திலே இருந்து விழுந்து எப்படிப் பிழைத்தார் என்பது விமான இயல் வல்லுநர்களுக்குக் கூட புரியவில்லை. ஜூலியானே விமானத்தின் நடுப்பக்க இருக்கையிலே உட்கார்ந்து இருந்தபோதுதான் விபத்து நடந்திருக்கிறது. அவருடைய இருக்கை அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் இருந்த 2 இருக்கைகளோடு இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு இருந்திருக்கிறது.

விமானம் சிதறியபோது நல்வாய்ப்பாக ஜூலியானேவின் சீட் பெல்ட் அவிழாமல் அப்படியே இருந்திருக்கிறது. இரண்டு பக்கமும் இருந்த இருக்கைகள் அவர் விழுந்தபோது பாராசூட் போல செயல்பட்டு விழுகிற வேகத்தைக் குறைத்திருக்கின்றன. அந்த நேரம் வீசிய இடியுடன் கூடிய ஒரு புயல்காற்றும்கூட ஜூலியானே கொஞ்சம் மெதுவாக தரையிறங்க உதவி செய்திருக்கிறது. அமேசான் காட்டிலே ஜூலியானே விழுந்த இடத்தில் மரங்கள் மெத்தை மாதிரி அவரைத் தாங்கிப்பிடித்து அவர் உயிர் தப்ப உதவியிருக்கின்றன.

ஜூலியானே, அமேசான் காடு பற்றி நன்றாகத் தெரிந்தவர். அவர் 11 நாள்கள் அந்த காட்டுக்குள் வெற்றிகரமாக நடமாடி உயிரோடு இருந்தற்கு அதுதான் முதன்மையான காரணம்.

இதற்குள் ஜூலியானே விழுந்த அமேசான் காட்டுப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை மும்முரமாக நடந்தது. ஜூலியானேவைத் தவிர அந்த விமான விபத்தில் மற்ற எல்லோருமே இறந்து போனது தெரிய வந்தது. இறந்தவர்களில் ஜூலியானேவின் அம்மா மரியாவும் ஒருவர்.

மருத்துவச் சிகிச்சைக்குப்பிறகு உடல்நலம் தேறி ஜூலியானேவும் மீட்புக்குழுவோடு சேர்ந்து அமேசான் காட்டுப்பகுதியில் உடல்களைத் தேட ஆரம்பித்தார். 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம்தேதி, ஜூலியானேவின் அம்மா மரியாவின் உடல் கிடைத்தது.

விமானத்தில் இருந்து அமேசான் காட்டுக்குள் விழுந்தவர்களில் 14 பேர், ஆரம்ப கட்டத்திலே காயங்களோடு உயிரோடு இருந்திருக்கிறார்கள், பிறகுதான் அவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். இந்தத் தகவல் மருத்துவ உடற் கூராய்வுக்குப் பிறகு தெரிய வந்தது.

தனது வாழ்வில் நடந்த இந்த பெரிய விபத்துக்குப்பிறகு பிற்காலத்தில் ஜூலியானே, ஜெர்மன் நாட்டுக்குப் போனார். அப்பாவைப் போலவே அவரும் அங்கே பயாலஜி என்கிற உயிரியல் மேற்படிப்பைப் படித்தார். மியூனிச் நகரத்து லுத்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டத்தை முடித்தார். ‘பெரு நாட்டின் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழுகிற வவ்வால்கள்’ என்பதுதான் அவருடைய முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு.

தான் உயிர்பிழைத்த அந்த அதிசய அனுபவத்தைப் பற்றி, 2012ஆம் ஆண்டு பி.பி.சி தொலைக்காட்சி நிலையத்துக்கு ஜூலியானே பேட்டி அளித்தார்.

‘அமேசான் காடுகளை ஏதோ பச்சை நிற நரகம் என்று உலகம் நினைக்கிறது. ஆனால், அப்படி இல்லை. விமான விபத்து நடந்தபோது நான் விமானத்தை விடவில்லை. விமானம்தான் என்னை விட்டுவிட்டது’ என்று அவர் அந்த நேர்காணலில் கூறினார்.

விமானத்திலே இருந்து விழுந்து உயிர் தப்பித்த தனது திகில் அனுபவத்தைப் பற்றி ஜூலியானே ஒரு புத்தகம் எழுதினார். ‘வென் ஐ ஃபெல் ஃபுரம் தி ஸ்கை : தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் ஒன் வுமன்ஸ் மிராகுலஸ் சர்விவல்’ என்பது அந்த புத்தகத்தின் பெயர்.

ஜூலியானே உயிர்பிழைத்த இந்த அதிசய சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘விங்க் ஆஃப் ஹோப்’ என்ற பெயரில் ஒரு சினிமாப்படம்கூட வெளிவந்தது.

மனிதர்கள் காடுகளை கைவிட்டுவிட்டு நகரங்களில் வாழ்ந்தாலும்கூட, காடுகள் மனிதர்களை ஆபத்து நேரத்தில் கைவிடுவதில்லை. அண்மையில் கூட அமேசான் காட்டுக்குள் சிறிய ரக விமானம் விழுந்து விமானி உள்பட மூவர் இறந்துபோக, அதே விமானத்தில் இருந்த 4 குழந்தைகள் நாற்பது நாள்கள் வரை அமேசான் காட்டுக்குள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். அந்த 4 குழந்தைகளில் ஒருவர் கைக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

‘முன்பு நாம் காட்டில் வாழ்ந்தோம். காடு இப்போது நமக்குள் வாழ்கிறது’ என்றார் ஆர்.சி.தாவீதார். ஜூலியானே தொடர்பான இந்த சம்பவமும், நான்கு குழந்தைகள் உயிர்பிழைத்த சம்பவமும் ஒருவகையில் இதைத்தான் நினைவுபடுத்துகிறன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...