நேஷனல் ஹெரால்டு வழக்குக்காக மூன்றாம் முறை சம்மன் பெற்ற சோனியா காந்தி இன்று நேரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடமும் 5 நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. நேஷனல் ஹெரால்டு மோசடி கேஸ் பின்னணி என்ன?
நேஷனல் ஹெரால்டு துவங்கியது 1936களில். 1936-இல் ஜவஹர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்தை நிறுவினார்.
இந்த நிறுவனத்தில் 5000 சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். விடுதலைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த பத்திரிகையின் ஒரே நோக்கம், இந்தியர்களின் சுதந்திர உணர்வை தூண்டும் எழுச்சி கட்டுரைகளை வெளியிடுவது மட்டுமே. அதனால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் அதே நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வந்த உருது மொழி தினசரி குவாமி அவாஸ், ஹிந்தி மொழியில் நவ்ஜீவன் தினசரி என மூன்று செய்தித்தாள்களை வெளியிட்டு வந்தது.
ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திர உணர்வைத் தூண்டுவதாக இருந்ததால் அந்தக் காலக் கட்டத்தில் இந்த பத்திரிகைகள் மிகப் பிரபலமாக இருந்தன.
ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நேஷனல் ஹெரால்டின் தேவை குறைந்து போனது. காங்கிரஸ் கட்சி பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிட்டு காங்கிரஸ் கட்சியின் செய்தித்தாளாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கடுமையான நஷ்டத்தை சந்தித்து, அவற்றை சமாளிக்க காங்கிரஸ் கட்சியிடமிருந்து 90 கோடி கடனும் பெற்றது. ஆனாலும் நிறுவனம் நிமிரவில்லை.
2010 ஆம் ஆண்டு யங் இந்தியன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உறுப்பினர்களாக இருந்தனர். யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா, ராகுலுக்கு 76 சதவீத பங்குகளும் மிச்சமுள்ள 24% பங்குகள் காங்கிரஸ் தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிக்கையாளர் சுமன் தூபே, மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோரும் வைத்திருந்தனர்.
இந்த யங் இந்தியன் நிறுவனம், 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஏ.ஜே.எல் நிறுவனத்தை வாங்கியது. ஏ.ஜே.எல். நிறுவனத்தின் மொத்த பங்குகளும் யங் இந்தியன் நிறுவனத்தின் பெயரில் மாற்றபட்டது. இதுதான் பிரச்சினையின் முதல் காரணம்.
2012ஆம் ஆண்டு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்த விஷயத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அதாவது, காங்கிரஸிடம் பெற்ற 90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் செலுத்திவிடும் என கூறி, சுமார் 2000 கோடி மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வெறும் 50 லட்சத்துக்கு யங் இந்தியன் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.
இதற்கு ஏ.ஜே.எல் நிறுவனத்தின் பங்குதாரர்களின் அனுமதியும் பெறவில்லை என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடுத்தார். நேரு ஆரம்பித்த ஏ.ஜே.எல் நிறுவனத்தில் 5000 பங்குதாரர்கள் இருந்தார்கள். 2010-ல் அந்த பங்குதாரர் எண்ணிக்கை 1052-ஆக குறைந்திருந்தது.
சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை 2014 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை 2015 முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2015 டிசம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் முன் ஜாமீன் அளித்தது. மேலும் 2016ஆம் ஆண்டு, குற்றவியல் நீதிமன்றம் சோனியா, ராகுல், மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் தூபே, மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கும் அளித்திருந்தது.
அதன் பிறகு இவ்வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா விடம் மட்டும் ஒரே ஒரு முறை 2021 ல் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் சோனியா, ராகுல் ஆகியோரை விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதனடிப்படையில் 5 நாட்களுக்கும் மேலாக ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் 8 ஆம் தேதி ஆஜராக வேண்டியிருந்த சோனியா காந்திக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு அமலாக்கத் துறைக்கு கடிதம் அனுப்பினார்.கடிதத்தை ஏற்றுக்கொண்டு அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைத்தது.
ஆனால், தொற்றிலிருந்து குணமடைந்திருந்தாலும் சோனியா காந்தியை வீட்டில் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால், சோனியா சார்பின் மீண்டும் அமலாக்க துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. அதனடிப்படையில் மேலும் 4 வாரங்கள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மூன்றாவது முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய பின் இன்று சோனியா காந்தி ஆஜரானார்.