No menu items!

தேஜாவு – சினிமா விமர்சனம்

தேஜாவு – சினிமா விமர்சனம்

ஒரு எழுத்தாளர் கதை எழுத எழுத, அக்கதையில் வரும் சம்பவங்கள் அப்படியே நிஜ வாழ்க்கையில் நிகழ, அதனால் உண்டாகும் பிரச்சினைகள் என்னென்ன, அதை எப்படி சமாளிக்கிறார் ஹீரோ என்பதே ‘தேஜாவு’ படத்தின் ஒன்லைன்.

ஒரு பத்திரிகையாளராக இருந்து, இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அரவிந்த் ஸ்ரீனிவாசன், எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணிப்புரிந்த அனுபவம் எதுவுமில்லாமல் ‘தேஜாவு’ படத்தை இயக்கி இருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

இப்படம் 119.39 நிமிடங்கள் ஓடுகிறது. கமர்ஷியல் சமாச்சாரங்களான பாடல்கள் இல்லை. சண்டைக் காட்சிகள் இல்லை. ஆனால் விறுவிறுப்பை மட்டும் திரைக்கதையில் தக்க வைத்திருக்கிறார்கள்.

எழுத்தாளராக தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் அச்வத் குமார், நீலாங்கரை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் ஒன்றை கொடுக்கிறார். அதில் தான் எழுதிய கதையின் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் மிரட்டல் விடுப்பதாக சொல்கிறார். மறுநாளே காவல் துறை டிஜிபி மதுபாலாவின் மகள் ஸ்மிருதி வெங்கட் காணாமல் போகிறார். காணாமல் போன அன்று ஸ்மிருதி வெங்கட் கடைசியாக கண்ட்ரோல் ரூமிற்கு பேசிய தொலைப்பேசி அழைப்பில் அச்வத் குமாரையும் அவரது லொகேஷனையும் குறிப்பிட, அந்த நொடியில் இருந்து விறுவிறுப்பு ஏறுகிறது.

அச்வத் குமார் எழுதும் கதை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற, மதுபாலாவிற்கு உதவுவதற்காக அண்டர்கவர் ஆபிஸராக அருள்நிதி வருகிறார். அதன் பின் அவர் எப்படி குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கிறார் என்பதே மீதி கதை.

‘தனக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுப்பதில் அருள்நிதிக்கு இருக்கும் instinct, தேஜாவு’ படத்திலும் கைக்கொடுத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் அண்டர்ப்ளே செய்யும் ஒரு அண்டர்கவர் ஆபிஸராக நடித்திருக்கும் அருள்நிதி, ஒரு த்ரில்லர் எக்ஸ்பர்ட்டாகி இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் தன்னை தேடி வரும் கதைகளில் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதாக அருள்நிதி சொல்கிறார். அதனால் இனி இயக்குநர்கள் த்ரில்லர் அல்லாத கதைகளுக்கும் அருள்நிதியை அணுகலாம். கமர்ஷியல் ஹீரோவாக அவரையும் களமிறக்கலாம்.

மதுபாலா, அச்வத் குமார், காளி வெங்கட், ஸ்மிருதி வெங்கட் என பலர் நடித்திருந்தாலும். இதில் ஸ்மிருதி வெங்கட்டுக்கு காட்டுக்குள் ஓடுவதைத் தவிர படத்தில் வேறெதுவும் வேலையில்லை. அச்வத் குமார், சரக்கு அடித்தபடியே, நக்கலாக கமெண்ட் அடிப்பதில் கவர்ந்திருக்கிறார். மதுபாலாவுக்கு முக்கியமான கதாபாத்திரம். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கேற்ற பாடிலாங்வேஜ்ஜில் கோட்டை விட்டிருக்கிறார். காளிவெங்கட்டுக்கு அச்வத் குமார் எழுதும் கதையை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டிய கதாபாத்திரம். கிடைத்த அந்த வாய்ப்பில் கலகலப்பையும் ஏற்றுகிறார்.

ஸ்மிருதி வெங்கட்டை கடத்தியதாக சந்தேகப்படுபவர்களை விசாரிக்கும் காட்சியில், அருள்நிதி ‘என்னய்யா பண்றீங்க. ஆயில், சுடுத்தண்ணி வைச்சிகிட்டு, ஸ்பா நடத்துறீங்களா’ என்று சிரீயஸாக கலாய்ப்பது, அச்வத் குமார் கதை எழுதுவதெல்லாம் நடக்கும் போது, ‘கடைசி பக்கத்தை ஏன் முதல்ல எழுதக்கூடாது’ என்று கேட்கும்போது, பதிலுக்கு அச்வத் ’லாஸ்ட் பெக்கை எப்படி முதல்ல அடிக்க முடியும்’ என்று பதில் சொல்வது போன்ற காட்சிகளில் வசனம் ரசிக்க வைக்கிறது.

ஜிப்ரானின் பின்னணி இசை, த்ரில்லருக்கான டெம்போவை ஏற்றுகிறது ஜிப்ரானின் ஒரிஜினல் ஸ்கோர் படத்தின் பெரும் பலம்

படத்தின் ஆரம்ப காட்சிகளில் அச்வத் குமார் விஸ்கியை ஊற்றுவது, உட்கார்வது என மாற்று சினிமாவுக்கான பாணியில் காட்சிகளைத் தொகுத்து இருந்தாலும், அதன் பிறகு எடிட்டிங்கில் தேவையில்லாதவற்றை திணிக்காமல் எடிட்டர் ’கட்டிங்’ போட்டது நலம்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.ஜி. முத்தையாவே ஒளிப்பதிவையும் பார்த்து கொண்டது படத்தின் பட்ஜெட்டுக்கு பலம். பி.ஜி. முத்தையாவின் கேமரா கதாபாத்திரங்களுக்குப் பின்னால் புலி பாய்ச்சலில் தொடர்கிறது.

இந்த சமாச்சாரங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்க்ரிப்ட்டின் சில அடிப்படை விஷயங்களில் கவனக்குறைவு இருக்கதான் செய்கிறது. ஒரு அண்டர்கவர் ஆபிஸர் தனது பெயரை மற்றவர்களிடம் வெளிப்படையாக சொல்கிறார், அவருக்கு உதவியாக வரும் போலீஸ் வழக்கமான போலீஸ் தோற்றத்தில் இருக்கிறார்கள், கதையின் ட்விஸ்ட்டுக்கான ரகசியத்தை டிஜிபி பேசும் போது அவரோடு ஸ்டேஷனில் மற்ற போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள்.

எழுத்தாளர் என்று சொல்லும் அச்வத் ஏதேனும் கதைகள் எழுதியிருந்தால் அந்த கதைகள் எந்த பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன என்பதை கூட போலீஸ் விசாரிக்காமல், அதை அப்படியே நம்புவது, என லாஜிக்கில் சில ஓட்டைகள் இருக்கின்றன. ஆனாலும் த்ரில்லராக கொண்டு போயிருப்பதில் இந்த லாஜிக்குகள் பற்றி சட்டென்று யோசிக்கத் தோன்றவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...