ஒரு புத்திசாலித்தனமான சீரியல் கில்லர். சுருக் சுருக்கென்று கோபப்படும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் கண்ணாம்பூச்சி விளையாட்டுதான் இந்த ‘பட்டாம்பூச்சி’.
ஹேர் டை தூக்கலாக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக சுந்தர்.சி. கொழுகொழுவென மாறியிருக்கும் கன்னங்களுடன் சிரிக்கும் சீரியல் கில்லராக ஜெய். சின்ன குஷ்பூவைப் போல தோற்றமளிக்கும் பத்திரிகை நிருபராக ஹனி ரோஸ். வழக்கத்திற்கு மாறாக அடக்கி வாசித்திருக்கும் போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளாக இமான் அண்ணாச்சி. இந்த நான்கு பேரும்தான் பட்டாம் பூச்சியின் நான்கு இறக்கைகள்.
தனியாளாக இருக்கும் தனது அப்பாவை பார்த்து கொள்வதற்காக லாஸ்-ஆஃப்-பே இருந்தாலும் பரவாயில்லையென லீவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி, ட்யூட்டியில் இல்லாததாலோ என்னவோ ஓடுவதற்கும், சண்டை போடுவதற்கும் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். வழக்கமான சுந்தர் சி-யின் அந்த சுறுசுறு, நக்கல் இதில் மிஸ்ஸிங்.
தனது வழக்கமான காதல், காமெடி ட்ராக்கிலிருந்து வெளிவந்திருக்கும் சுந்தர்.சி, த்ரில்லர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது அவரது அடையாளத்தை மறக்கடிக்க செய்துவிடக்கூடும்.
ஜெய், தலையை திருகுவது, கையை ஆட்டுவது, என கொஞ்சம் சைக்கோத்தனத்தை காட்டினாலும் சாஃப்ட்டான சைக்கோவாகதான் தெரிகிறார். ’அடப்பாவி பார்க்க இப்படியிருக்கான்.,. ஆனா என்ன வேலைப் பண்றான் பாரு’ என்ற கமெண்ட் வரவில்லை. ஹனி ரோஸ், அலட்டாமல் அளவாய் பேசுகிறார். இமான் அண்ணாச்சி பரிதாபத்தைப் பெறுகிறார்.
புத்திசாலித்தனமான சைக்கோ கில்லர் ஜெய் என்று முடிவான பிறகு அவரை எதிர்த்துப் போராடும் காவல் துறை அதிகாரியும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருக்கவேண்டாமா. ஆனால் சுந்தர்.சி கதாபாத்திரத்திற்கு பாதிநேரம் ஜீப் ஒட்டுவதிலும், காரை ஓட்டுவதிலும்ம், வீட்டில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பலும்தான் அக்கறை காட்டியிருக்கிறார்கள்.
எதிரியை உசுப்பேற்ற கோபத்தை வரவழைக்க வேண்டுமென்கிற சுந்தர்.சி, அதிகம் கோபப்படுகிறார். மைண்ட் கேம் என்று திரைக்கதையில் முயற்சித்தாலும், அதற்கான ஸ்மார்ட் மூவ் பட்டாம்பூச்சியில் மிஸ்ஸிங். இதனால் ஒரு பரபரப்பு இருந்தாலும் அந்த த்ரில்லிங்கை முழுமையாக அனுபவிக்கமுடியவில்லை.
கமர்ஷியல் படங்களுக்கு லாஜிக் வேண்டாம். ரொம்ப மெனக்கெடாதீர்கள் என்பார்கள். அதற்காக க்ளைமாக்ஸில் இப்படியா செய்வது. ஜெய் ஹனிரோஸ்ஸையும், சுந்தர்.சி அப்பாவையும் கடத்திவிடுகிறார். அதை கண்டுபிடிக்க துப்பு ஒன்றையும் கொடுத்துவிட்டு போகிறார். அதன்படி தேடிப் போகிறார்.
ஒரு கட்டத்தில் போலீஸூம் சுந்தர்-சி.யை துரத்துகிறது. உண்மை தெரியவர போலீஸூம் சுந்தர்.சி உடன் சேர்ந்து ஜெயைப் பிடிக்க ஒரு திட்டம் போடுகிறார்கள். ஆனால் கடைசியில் ஹீரோ மட்டும் கொலைக்காரனின் ஸ்பாட்டுக்கு வருகிறார். சண்டைப் போடுகிறார். வில்லனை கொல்கிறார். ஆனால் போலீஸ் மட்டும் கடைசிவரைக்கும் வரவே இல்லை. இப்படி லாஜிக்கையும் பட்டாம்பூச்சி தீர்த்து கட்டிவிடுகிறது.
த்ரில்லர் என்று முடிவெடுத்த பிறகு எதற்கு ஆட்டம் பாட்டம் என டூயட்களை தவிர்த்திருக்கிறார்கள். இதனால் படம் இரண்டு மணிநேரம் 15 நிமிடம் 12 நொடிகளில் முடிவது ஒரு திருப்தி.
பட்டாம்பூச்சி – உயர பறக்கவில்லை