No menu items!

கதிர்: சினிமா விமர்சனம்

கதிர்: சினிமா விமர்சனம்

ன்ஜினியரிங் படித்து விட்டு சென்னைக்கு வேலை தேடி வருகிறான் கதிர். இங்கிலீஷ் பேசத் தெரியாமல் திணறுவதால் வேலை கிடைக்காமலிருக்க, சொந்த ஊருக்கே சென்று சுயதொழில் செய்ய தொடங்குகிறான். அது வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே மீதிக் கதை.

இன்றைக்கு இருக்கக் கூடிய காலக்கட்டத்தில், என்ஜினியரிங் படித்த ஒவ்வொருவராலும் இந்தக் கதையை தங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிற அளவிற்கு எதார்த்தமாக பல நிகழ்வுகள் இப்படத்தில் அமைந்துள்ளன. படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காமல் சொந்த ஊரில் நண்பர்களுடன் வெட்டியாக குடித்துக் கும்மாளம் அடித்து பொழுதை போக்கி வரும் கதிர், அப்பா கண்டிக்கவே கோபமாக வீட்டை விட்டு சென்னைக்கு கிளம்புகிறார்.

நண்பனின் அறையில் தங்கும் கதிர் தனது வீட்டு உரிமையாளரான பாட்டியிடம் முதலில் பகைத்துக் கொள்கிறார். பிறகு நாட்கள் செல்ல செல்ல ஹவுஸ் ஓனர் பாட்டிக்கும், கதிருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படுகிறது.

இந்த நட்பு ஏற்படுவதற்கான காலகட்டத்தில் கதிரும் பாட்டியும் சண்டையிடும் காட்சிகள் மிகவும் அழகாகவும்,எதார்த்தமாகவும் உள்ளன.

இங்கிலீஷ் பேசத் தெரியாமல் பல நேர்காணல்களில் அவமானப்பட்டு வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார் கதிர். அப்போது ஒரு ஃப்ளாஷ் பேக். அதில் கதிரின் கல்லூரி நாட்கள் காட்டப்படுகின்றன. இதில் பெரும்பாலும் ப்ரேமம் படத்தின் வாடை வீசுகிறது. கதிர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். நண்பனின் காதல் தோல்விக்கு பழிவாங்கப் போய், அவர் செய்யும் காரியத்தினால், கதிருடன் காதலி தீப்ஷிகா ப்ரேக் அப் செய்கிறார். அவரை மறக்க முடியாமல் தான் இப்படி குடிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் மிகவும் கிளிஷேவாக இருப்பதால் நம்மால் அவருக்காக வருந்தத் தோன்றவில்லை.

ஒரு மாறுதலுக்காக சொந்த ஊருக்கு பாட்டியையும் அழைத்துச் செல்கிறார். ஊரில் ஒரு நாள் திடீரென்று விவசாய நண்பன் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். அவன் தற்கொலை கதிரை பாதிக்கிறது.

அழுத்தமாக நகர வேண்டிய காட்சிகள். ஆனால் கடன் தொல்லையா, குடும்பப் பிரச்சினையா அல்லது விவசாயத்தில் ஏதும் தடங்கலா என எந்தத் தெளிவான காரணமும் இல்லாமலிருப்பது படத்தில் மிகப்பெரிய மைனஸாக இருக்கிறது.

நண்பனை இழந்த சோகத்திலிருக்கும் கதிருக்கு, பாட்டி அறிவுரை கூறி தேற்றுகிறார். அப்போது தனது வாழ்க்கையில் முன்பு தான் சந்தித்த விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி கூறுகிறார். இதில் விவசாயிகளின் பிரச்சனைக்காக போராடும் தோழராக ’குக் வித் கோமாளி’ சந்தோஷ் ப்ரதாப் நடித்திருக்கிறார். டீச்சராக நடித்திருக்கும் ஆர்யா ரமேஷ் எல்லா ப்ரேமிலும் அழகாகத் தெரிவது மட்டுமில்லாமல், தன் கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்திப் போகிறார்.

ஃப்ளாஷ்பேக் முடிய, சொந்த ஊரிலிருந்துக் கொண்டு விவசாயிகளுக்கு நன்மை செய்யும் வகையில் சுயதொழில் செய்ய முடிவு செய்கிறார். விவசாயிகளுக்கு உதவி செய்ய அவர் எடுக்கும் முயற்சிகளில் உள்ள சிக்கல்கள், எப்படி அவற்றை அவர் கையாள்கிறார் என்பதையெல்லாம் சொல்ல பல காட்சிகளை வீணடித்திருக்கிறார்கள்.

நண்பன் ஏன் இறந்தான் என்பதை தெளிவான காட்சிகளுடனும் வசனங்களுடனும் அமைத்து இருந்தால் பார்ப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் இருந்திருக்கும்.

ஹவுஸ் ஓனர் பாட்டியாக நடித்துள்ள ரஜினி சாண்டி யார்? இத்தனை நாள் எங்கு இருந்தார் என்று கேள்வி கேட்க வைக்கிறார். படத்தில் அனைவருமே இயல்பாகவும்,நன்றாகவும் நடித்திருக்கிறார்கள்.

ப்ளாஷ் பேக் சீனில் சந்தோஷ் ப்ரதாப் சைகிளை நிறுத்தி விட்டு வேகமாக ஓடி வரும் காட்சிகளை அழகாக படம்பிடித்திருக்கிறார் ஜெயந்த் சேது மாதவன். சில இடங்களில் மட்டும் பிஜிஎம் மிளிர்கிறது.

படம் முழுக்க ஒருவிதமான அமெச்சூர்தனம் தெரிவது படத்தின் குறைகளில் முக்கியமான ஒன்று.

கதிராக வெங்கடேஷ் நடித்திருக்கிறார். நல்ல கதாபாத்திரம், நடிப்பினால் நிற்க வைக்க முயற்சித்திருக்கிறார். சிறப்பான முயற்சி.

இயக்குநர் தினேஷ் பழனிவேலுக்கு இது முதல் படம். ஒரு யதார்த்தமான கதையை யதார்த்தமாகவே மக்களுக்கு வழங்க நினைத்திருக்கிறார். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளதென்றே சொல்லலாம். வீட்டு உரிமையாளருக்கும் வாடகைக்கு இருக்கும் பேச்சலர்ஸ்க்கும் இருக்கும் உறவை மிகவும் இயல்பாக காட்டியிருப்பதற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

திரைக்கதையில் இன்னும் சற்று அதிக கவனம் செலுத்தியிருந்தால், சுவாரசியம் கூடியிருக்கும்.

மாற்று கருத்துக்களை சொல்லும் திரைப்படமாக கதிர் வந்திருக்கிறது. அந்த வகையில் பாராட்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...