No menu items!

தொடரும் ஜிம் மரணங்கள்: காரணம் என்ன? தடுப்பது எப்படி? – டாக்டர் அருணாச்சலம்

தொடரும் ஜிம் மரணங்கள்: காரணம் என்ன? தடுப்பது எப்படி? – டாக்டர் அருணாச்சலம்

மீண்டும் ஒரு ஜிம் மரணம்!

சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகாஷிற்கு தனது உடலை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயது முதலே இருந்துள்ளது. ஆனால், அவரது அந்த ஆர்வமும் அதற்கான கடின உழைப்பும் எடுத்துக்கொண்ட உணவுகளும் இன்று அவர் உயிரையே குடித்துள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் தொடங்கி ஆவடி ஆகாஷ் வரைக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜிம்மில் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே உயிரிழப்பு என்பது தொடர்கதையாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? ஜிம்மில் பாதுகாப்பாக உடற்பயிற்சி செய்வது எப்படி? டாக்டர் அருணாசலம் தரும் ஆலோசனைகள் இங்கே…

“உடற்பயிற்சி உட்பட கடின வேலைகள் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவது என்பது சமீப வருடங்களில் மட்டுமல்ல முன்பும் இருந்ததுதான். கிராமங்களில் விவசாயிகள் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இறந்து போயிருக்கிறார்கள். இப்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால், அதுவும் பிரபலங்கள் மரணம் காரணமாக இது அதிகளவில் பேசப்படுகிறது. ஆனால், இதன்மூலம் மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள் என்பதும் முக்கியம்.

ஜிம் மரணங்களுக்கு உடல்பருமன், மிக குறுகிய காலத்தில் பலனை எதிர்பார்த்து ஓடுவது, தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கின்றன.

உடல் பருமனை குறைக்க வேண்டும்தான். அதற்காக 150 கிலோ எடைகொண்ட ஒருவர் உடனே 80 கிலோவாக குறைக்க வேண்டும் என்று வேகமாக ஓடுவதும் ஆபத்து. உடலில் உள்ள அதிக கொழுப்பு, புரோட்டீன் போன்றவற்றை எல்லாம் கரைக்கும்போது கிட்னி, லிவர் ‘ஓவர் லோட்’ ஆகும்.

எனவே, உடல் ஆரோக்கியம் பேண எந்த ஒரு விஷயத்தையும் அளவாக, மெதுவாக செய்ய வேண்டும். அதுவும் உடற்பயிற்சி என்று சென்றுவிட்டால் உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் நடந்து கொள்வது அவசியம். இசிஜி, எக்கோ, டிரட்மில் டெஸ்ட் மூன்று பரிசோதனைகளும் செய்து பார்த்துவிட்டு, ஒரு கைதேர்ந்த இருதய மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு ஜிம் பயிற்சிகளை தொடங்குவது நல்லது. இல்லையெனில் விபரீத விளைவுகள் ஏற்பட்டு உயிரையே பறிக்கும் நிகழ்வுகள் அரங்கேறிவிடும் என்பதற்கு சமீப சம்பவங்கள் உதாரணம்.

தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமல்ல வருடம் தோறும் இசிஜி, எக்கோ, டிரட் மில் டெஸ்ட் செய்து பார்த்து, இருதய மருத்துவர் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்போது ஸ்போர்ட்ஸ் மெடிசின் டாக்டர்கள், பிஸியோதெரபிஸ்ட் நிறைய பேர் வந்துவிட்டார்கள். இவர்களிடமும் ஆலோசனைகள் பெறலாம்.

இன்னொன்று உடல் எடை குறைப்பில் உடற்பயிற்சியைவிட உணவு பழக்கவழக்கத்தையே அதிகம் நம்ப வேண்டும். அப்புறம் தூக்கம்… குடும்பமாக லேட்டாக படுக்க செல்வது இப்போது அதிகரித்துள்ளது. இதனால் தூக்கமின்மை அதிகரித்துள்ளது. மூன்று மாதங்கள் சரியாக தூங்காத ஆண்களுக்கும் ஆறு மாதங்கள் தூங்காத பெண்களுக்கும் சர்க்கரை வியாதி வர அந்த ஒரு காரணமே போதும். அந்தளவு தூக்கம் நம் உடலுக்கு மிக அவசியம்.

இரவு 10.30 – 11.00 தூங்க சென்றுவிட வேண்டும். காலையில் 5 – 6 மணி வரைக்கும் தூங்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேர கும்மிருட்டு மட்டும்தான் உடலில் மெலடோமி என்கிற பிக்மெண்டை சுரக்க வைக்கும். 6 – 8 மணிநேர தூக்கம் மிக அவசியம். தினமும் இவ்வளவு நேரம் ஒதுக்க முடியாமல், தூக்க நேர குறைபாடு உள்ளவர்கள் அதை சரி செய்வதுபோல் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நன்றாக தூங்க வேண்டும்” என்கிறார் டாக்டர் அருணாசலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...