கள்ளக்குறிச்சி பகுதியிலுள்ள கனியாமூரில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த மர்ம மரணம் அந்தப் பகுதியை கலவரப் பகுதியாக்கியிருக்கிறது.
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் செய்து அதை மாற்றிவிட்டீர்கள் என்று இன்று அதுதொடர்பாக நடந்த வழக்கில் நீதிபதி கூறுமளவு கலவரம் நடந்திருக்கிறது.
பேருந்துகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. பள்ளியிலிருந்த மாணவர்களின் ஆவணங்கள் தீ வைக்கப்பட்டிருக்கின்றன. வகுப்பறைகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருக்கின்றன. காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இத்தனைக்கும் காரணம் ஸ்ரீமதி என்ற 12-ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணம்.
ஜூலை 13-ம் தேதி காலை ஐந்தரை மணியளவில் பள்ளி விடுதியில் விழுந்து கிடக்கிறாள் மாணவி ஸ்ரீமதி. மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு மாணவி இறந்துவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ஆசிரியைகள் கடிந்துக் கொண்டதால் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக் கொண்டாள் என்ற தகவல் வருகிறது.
மாணவியின் தற்கொலைக் கடிதம் என்று மற்றொரு தகவல் வருகிறது. அந்தக் கடிதத்தில் வேதியியல், கணித ஆசிரியைகள் மீது குற்றம் சாட்டியிருக்கிறாள் ஸ்ரீமதி. இந்தக் கடிதம் காவல்துறையினரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை மாணவியின் உறவினர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். மாணவி தற்கொலை செய்யவில்லை. அந்தக் கடிதம் அவள் எழுதியதில்லை. பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கிறது…. என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகி சாந்தி மறுக்கிறார். எங்கள் மீது தவறு எதுவும் இல்லை. மாணவி விழுந்துக் கிடந்ததைப் பார்த்ததும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இத்தனை கலவரத்துக்கும் ஸ்ரீமதியின் தாய்தான் காரணம் என்று ஸ்ரீமதியின் தாய் செல்வி மீது பழி போட்டிருக்கிறார்.
நேற்றைய கலவரத்துக்குப் பிறகு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மகளின் மரணம் தொடர்பாக ஸ்ரீமதியின் பெற்றோர் வழக்கு தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கலவரம் தொடர்பாக நீதிபதிகள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இது உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரம், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அது மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். காவல்துறையும் இன்று விரைந்து நடவடிக்கை எடுத்து 329 பேரை கைது செய்திருக்கிறார்கள். 108 பேருக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.
13-ம் தேதி நடந்த சம்பவத்துக்கான கலவரம் நான்கு நாட்கள் கழித்து 17-ம் தேதி நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது நீதிமன்றம் கூறுவது போல் இது உணர்ச்சி வேகத்தில் நடந்த கலவரம் அல்ல, திட்டமிடப்பட்டு நடந்த கலவரம் என்றே தோன்றுகிறது.
13-ம் தேதி பிரச்சினை ஆரம்பித்த போதே காவல்துறை முழுமையாக களத்தில் இறங்கியிருக்க வேண்டும். ஸ்ரீமதியை சார்ந்தோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அதை காவல்துறை செய்யத் தவறியிருக்கிறது. காவல்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டிருந்தால் போராட்டங்களுக்கும் கலவரத்துக்கும் அடிப்படை இல்லாமல் போயிருக்கும்.
கனியாமூர் போன்ற ஒரு சிறு ஊரில் (கனியாமூரின் மொத்த மக்கள் தொகையே சுமார் 3 ஆயிரம்தான்) பலர் உள்ளே நுழைந்து கலவரம் செய்கிறார்கள் என்றால் அதை உளவுத் துறையின் குறைபாடாகவே பார்க்க வேண்டும்.
பள்ளி மீது குற்றமில்லை என்று காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கூறியதாக ஒரு செய்தி அட்டை தந்தி தொலைக்காட்சியின் ட்விட்டர் பதிவில் வெளியானது. பின்னர் அது நீக்கப்பட்டது. அந்த அட்டை வாட்ஸப் குழுக்களில் பகிரப்பட்டு, பள்ளிக்கு சார்பாக காவல்துறை செயல்படுகிறது என்ற பிம்பத்தை உருவாக்கியது.
மீடியா நிறுவனங்கள் இது போன்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகளில் எத்தனை கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு ஏன் போராட்டத்தில் இறங்கினீர்கள் என்று இன்று ஸ்ரீமதி பெற்றோர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சதீஷ்குமார் கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்ரீமதியின் பெற்றோருக்கும் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
அப்படியென்றால் இந்த வன்முறைக்கு யார் காரணம் என்று நீதிபதி கேட்க, பள்ளியின் பழைய மாணவர்கள் வாட்சப் குழுக்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் பதிலளித்திருக்கிறார். வாட்சப் குழு ஒருங்கிணைப்பு மூலம் இத்தனை பெரிய கலவரத்தை பழைய மாணவர்களால் நடத்த முடியும்போது அதை காவல்துறையினரால் ஏன் கண்டறிய முடியவில்லை. மீண்டும் உளவுத்துறையின் செயல்பாடு குறித்து சந்தேகம் ஏற்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிப்பவர்கள் மீதும் கவனம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சமூக ஊடகங்களிலேயே விசாரணை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். வட இந்தியாவில் பல கலவரங்கள் வாட்சப் குழுக்கள் மூலம் உருவாக்கப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். படித்திருக்கிறோம். கலவர சூழலின்போது இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் கண்டிருக்கிறோம். அது போன்ற ஒரு சூழல் தமிழ் நாட்டில் வந்துவிடக் கூடாது. அரசு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் அரசியலையும் சமூக ஒழுங்கையும் மாற்ற விரும்பும் சக்திகள் ஆதிக்கம் பெறுவதை அனுமதிப்பது தமிழ் நாட்டின் நலனுக்கு நல்லதல்ல. நீதிமன்றம் இன்று தெரிவித்தது போல் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து அடக்க வேண்டும்.
மற்றொரு போஸ்ட்மார்ட்டத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் ஸ்ரீமதியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பெற்றோருக்கு உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். அதை சுமூகமாக நடத்த காவல்துறை தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மீண்டும் ஒரு கலவரத்துக்கு காரணமாகிவிடக் கூடாது.