No menu items!

அரிசிக்கு ஜிஎஸ்டி: முதல்வர் என்ன செய்ய வேண்டும்?

அரிசிக்கு ஜிஎஸ்டி: முதல்வர் என்ன செய்ய வேண்டும்?

அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களும் ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிராக அரிசி ஆலைகள், அரிசி விற்பனை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ். ரத்தினவேலுடன் பேசினோம்.

அரிசி, கோதுமை போன்ற அன்றாட அத்தியாவசிய உணவுகளை பொறுத்த வரைக்கும் வணிகப் பெயர் (பிராண்டட் நேம்) உள்ள பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது. பேக் செய்யப்படாத அல்லது பேக் செய்யப்பட்டிருந்தாலும் வணிகப்பெயர் இல்லாவிட்டால் வரி கிடையாது. இதுதான் இதுவரை நடைமுறையில் இருந்தது.

இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்து வந்தோம்.

S. Rathinavel
எஸ். ரத்தினவேல்

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பது நேரடியாக ஏழை மக்களை பாதிக்கும். எனவே, பேக் செய்யப்பட்டிருந்தாலும் இல்லையென்றாலும், வணிகப்பெயர் இருந்தாலும் இல்லையென்றாலும் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வரி விதிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்திருந்தோம். 

இந்நிலையில்தான், வரிவிலக்கு கொடுக்கப்பட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் வரிவிதிப்பது குறித்தும் மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான செய்தி எங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அதிர்ச்சி தரும் வகையில், அந்த தகவலை உறுதி செய்வதுபோல், இதுவரை வரிவிலக்கு பெற்றிருந்த உணவுப் பொருள்களுக்கு 2022 ஜூலை 18ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

முன்னதாக, ‘சில்லறை விற்பனைக்கான பேக்கிங்கிக்கு’ எடையளவு சட்டப்படி வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலின் 47ஆவது கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டபோது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல், அறிக்கை 6, 7இல், ‘சில்லறை விற்பனைக்கான பேக்கிங்’ என்ற வார்த்தைகளை எடுத்துவிட்டார்கள். இதனால் குழப்பம் உண்டானது.

25 கிலோ அல்லது அதற்கும் குறைவான எடை கொண்டு பேக்குகள் சில்லறையில் விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோவுக்கு மேலே எடைகொண்ட மூடைகள் மொத்த வியாபாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முதலில் வெளியான, பரிந்துரைபடி பார்த்தால் சில்லறை வியாபாரத்தில் பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி உண்டும், மொத்த வியாபாரத்தில் விற்பனை செய்யப்படும் அரிசிக்கு வரி கிடையாது என்றாகிறது. ஆனால், அதன் பின்னர் வெளியான அறிவிப்புபடி பார்த்தால் இரண்டிற்கும் வரி உண்டும் என்றாகிறது. இது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பியதன் அடிப்படையில் பின்னர் ஒரு விளக்கத்தை வெளியிட்டார்கள். அதில் மொத்த வியாபாரத்தில் விற்பனை செய்யப்படும் 25 கிலோவுக்கு மேலே உள்ள மூடைகளுக்கு வரி இல்லை என்று சொல்லியுள்ளார்கள்.

ஜிஎஸ்டி பரிந்துரையில் சொன்னதற்கும் அறிவிப்புக்கும் இடையே மாறுதல் – குழப்பம், இப்போது அறிவிப்புக்கும் விளக்கத்துக்கும் இடையே இன்னொரு மாறுதல் – குழப்பம். ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நடைமுறையில் என்ன நடக்கப்போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.

எப்போதுமே, அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வரி விதிக்கக்கூடாது என்பது மக்கள் நல அரசுகள் பின்பற்றும் ஒரு கொள்கை. ஏனெனில், அன்றாட அத்தியாவசிய உணவு பொருடகள் மீது வரி விதித்தால், ஏழை எளிய மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால்தான் இதுநாள் வரை, அரிசிக்கு எந்த அரசும் வரியை விதித்தது கிடையாது. ஆனால், மத்திய அரசு இப்போது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.

இந்த 5 சதவிகித வரி விதிப்பால் ஏழை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக ஏழை – நடுத்தர மக்கள் உட்பட அனைவரும் இப்போது கிலோ 50 ரூபாய் ரேஞ்சில் உள்ள அரிசியைத்தான் வாங்குகிறார்கள். அதுதான் ஓரளவு நன்றாக இருக்கும் என்பது முக்கியக் காரணம். இப்போது இந்த 5 சதவீத ஜிஎஸ்டி வரியால் கிலோ 50 ரூபாய் அரிசி 52.50 ஆகும். அதாவது கிலோவுக்கு ரூ. 2.50 அதிகரிக்கும். இப்படி 2.50 ரூபாயில் தொடங்கி, நாம் வாங்கும் ரேஞ்சுக்கு ஏற்ப 5 ரூபாய் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 25 கிலோ பேக் எடுத்துக்கொண்டால் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அதிகரிக்கும்.

மக்களின் அன்றாட பயன்பாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்பது எப்போதும் திமுக அரசின் அறிவிக்கப்படாத கொள்கை முடிவாகும். இதனால், கலைஞர் ஒவ்வொரு ஆட்சிக்கு வரும்போதும், அதற்கு முந்தைய அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விதித்திருந்தால் அதனை நீக்கிவிடுவார்.

அந்த நல்ல கொள்கையை இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரிவிதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமையை நிலை நாட்டி உச்ச நீதிமன்றம் 19.05.2022ஆம் நாள் வெளியிட்ட தீர்ப்பை கடைப்பிடித்து மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கும் முதலமைச்சருக்கு இது சரியான சந்தர்ப்பம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...