அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும், “ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன்பின்னர் நடக்கும் பொதுக்குழுக்களுக்கு அல்ல. ஜூலை 11 நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரை நீதிமன்றம் தலையிட முடியாது” என்று தெரிவித்தனர்.
விஜயகாந்த் உடல்நிலை குறித்த தவறான செய்திகள்: தேமுதிக கண்டனம்
விஜயகாந்த் உடல்நிலை குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதை தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டும் என்று தேமுதிக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஏற்கெனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும் தேமுதிக தலைமைக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இனிமேல் இதுபோன்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் அருகே 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது – அமைச்சர் அன்பில் மகேஷ்
தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது. முதலமைச்சரின் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருகிறது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இது குறித்த வழுகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடப்படும்” என்றார்.
இலங்கை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்தச் சம்பவம், தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதோடு, மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.