No menu items!

சிகரெட் புகைக்கும் ‘காளி’: லீனா மணிமேகலை சர்ச்சை

சிகரெட் புகைக்கும் ‘காளி’: லீனா மணிமேகலை சர்ச்சை

கவிஞர் லீனா மணிமேகலையின் புதிய ஆவணப்படமான ‘காளி’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையாகி உள்ளது. போஸ்டரில் வாயில் சிகரெட்டுடன், கையில் ‘அனைத்து பாலின அடையாளம் கொண்டவர்கள்’ (LGBT) சமூகத்தினர் கொடியை பிடித்தபடி ‘காளி’ வேடமணிந்த  பெண் உள்ளார். இதனையடுத்து, ‘ArrestLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

சர்ச்சைக்கு என்ன காரணம்? லீனா மணிமேகலை பதில் என்ன?

‘காளி’ ஆவணபடத்தின் போஸ்டர் மூலம் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக லீனா மணிமேகலை மீது டெல்லி போலீசில், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகாரை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து இந்தியா முழுவதும் இருந்து பாஜகவினரும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினரும் ‘#ArrestLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலாக ‘#InsolidaritywithLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக்கில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

nambi narayanan
நம்பி நாராயணன்

இந்நிலையில், இது தொடர்பாக நம்முடன் பேசிய, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘ஒரே நாடு’ இதழின் ஆசிரியர் நம்பி நாராயணன், “‘இந்த போஸ்டரை இந்து கடவுள்களை, இந்து மதத்தை அவமதிக்கிற திட்டமிட்ட ஒரு செயலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம், கலை வெளிப்பாடாக பார்க்கவில்லை. காளி மட்டும்தான் ஆதி சக்தியா, எல்லா மத கடவுள்களும் ஆதி சக்திதானே; ஆனால், படைப்பு சுதந்திரம் பேசுபவர்கள் இந்து மதக் கடவுள்களை மட்டும்தானே இப்படி சித்தரிக்கிறார்கள். ஏன் மற்ற மதத்தினர் கடவுளை பற்றி பேசுவதில்லை. நாத்திகம் பேசுபவர்களும் இந்து கடவுள்களைத்தான் பேசுகிறார்கள். கலை வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் இந்து மதத்தினரிடம்தான் கேட்கிறார்கள். இவற்றின் வெளிப்பாடுதான் லீனா மணிமேகலையின் சர்ச்சைக்குரிய போஸ்டர்.

கனடா நாட்டில் இருந்து இதை இவர் செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள பிரிவினை சக்திகளுக்கு ஆதரவாக உள்ள நாடு கனடா. குறிப்பாக இந்தியாவின் பிரிவினைவாதிகளான காலிஸ்தான் போன்ற அமைப்புக்கு ஆதரவாக உள்ள நாடு. அங்கே இருந்துகொண்டு அமித்ஷா, மோடி பற்றி லீனா பேசியுள்ளவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது இதற்கு பின்னால் ஒரு திட்டம் இருப்பதை தெளிவாக உணர்ந்துகொள்ளலாம்.

இந்த போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகும் என்று லீனாவுக்கு தெரியும். ஆனாலும், இந்த சர்ச்சையால் பலனடைய நினைத்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். இவரைப் போன்றவர்கள்தான் உண்மையில் மத துவேஷத்தை வளர்ப்பவர்கள், மதப் பிரிவினைக்கு காரணமாக இருப்பவர்கள்.

தனக்கு பின்னால் வெளிநாட்டு சக்தி இருக்கும் தைரியத்தில்தான் இத்தகைய காரியத்தை செய்கிறார். எனவே, இது அனுமதிக்கதக்கதல்ல என்பதே எங்கள் நிலைப்பாடு” என்றார்.

லீனா மணிமேகலை பதில் என்ன?

“கனடாவின் ‘யோர்க் பல்கலைக்கழகம்’ எனக்கு உதவித்தொகை வழங்கி மேலதிக பயிற்சிக்கான களத்தையும் மாஸ்டர்ஸ் டிகிரிக்கான வாய்பையும் வழங்கியது. இந்நிலையில், கனடாவில் சினிமா படிக்கிற மாணவர்களில் சிலரை தேர்தெடுத்து கனடா நாட்டின் பன்முக கலாசாரத்தை பற்றிய படங்களை எடுக்கிற முகாமில் பங்கெடுக்க `டோரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்’ அழைப்பு விடுத்தது. அந்த முகாமில் கலந்துகொண்டு என் பங்களிப்பாக நான் எடுத்த படம் தான் `காளி’. இதில் நான் காளியாக, நடித்து, இயக்கி, தயாரித்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை ‘காளி’, அசுரத்தனம் என்று கருதப்படுவதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிற, தீமையின் தலைகளையெல்லாம் ஒட்ட நறுக்கி கெட்ட ரத்தமாக ஓடவிடுகிற துடியான ஆதி மனுஷி.

காளி எனக்குள் இறங்கி ஒரு மாலை நேரம் கனடாவின் டொரோண்டோ நகர வீதிகளில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதன் சித்தரிப்புதான் இந்த ஆவணப்படம். நான் எல்.ஜி.பி.டி சமூத்தினராகவும் திரைப்படங்களை இயக்கும் பெண்ணாகவும் இருப்பதால் எனக்குள் இறங்கும் காளி, எல்.ஜி.பி.டி கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார்.

கடந்த பதினேழு ஆண்டுகால என் கலை வாழ்க்கையில் கொலை மிரட்டல், வன்புணர்வு செய்யப்படுவாய் – ஆசிட் அடிக்கப்படுவாய் போன்ற அச்சுறுத்தல்கள், அரசியல் கைதுகள், சென்சார் தலையீடுகள், அவதூறுகள், போலீஸ் புகார்கள், அரசியல் கைதுகள், மீடூ இயக்கத்தில் இணைந்து பாலியல் அத்துமீறல்களைப் பற்றி பேசியதால் தொடுக்கப்பட்ட வழக்குகள், அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கம், அதை முறியடிக்க போராட்டங்கள் – இப்படி எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்.

ஆனால், `arrest leena manimekalai’ என் ஹேஷ்டேக் பதிவிடுபவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் `love you leena manimekalai’ என்று ஹேஷ்டேக் பதிவிடுவார்கள்” என்கிறார் லீனா மணிமேகலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...