சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகின் சக்தி வாய்ந்த விளையாட்டு வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதந்தோறும் இவரை சராசரியாக 1.10 கோடி பேர் தேடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க கால்பந்து வீரரான ரயான் ராம்சிக் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவரை மாதந்தோறும் சராசரியாக 61 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடுகிறார்கள்.
கால்பந்து விளையாட்டில் அவருக்கு இணையாக கருதப்படும் அர்ஜென்டைனா வீரர் லயோனல் மெஸ்ஸி இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். அவரை மாதந்தோறும் 45 லட்சம் பேர் தேடுகிறார்கள். இந்த டாப் டென் பட்டியலில் ஒரு கிரிக்கெட் வீரர்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவிலும் கூவத்தூர் அரசியல்
ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். அதேபோல் இப்போது மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது. அங்கு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனா எம்எல்ஏக்கள் அனைவரும் அசாமின் குவாஹாட்டி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த விடுதிக்குள்ளேயே செஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளை ஆடியும், திரைப்படங்களைப் பார்த்தும் எம்எல்ஏக்கள் பொழுதுபோக்கி வருகின்றனர்.
எம்எல்ஏக்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பாக (!) இருப்பவர்களுக்கும் சேர்த்து அங்கு 70 அறைகளை புக்கிங் செய்து வைத்திருக்கிறார்களாம். இதற்காக மட்டுமே கடந்த சில நாட்களில் ரூ.1.12 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாம்.
ஆள்குறைப்பு செய்யும் நெட்பிளிக்ஸ்
ஊரடங்கு காலத்தில் ‘ஒர்ப் பிரம் ஹோம்’ முறையில் பலரும் வீட்டிலேயே இருந்து பணியாற்றியதால் ஓடிடிக்களின் காட்டில் பணமழை பெய்தது. ஆனால் இப்போது எல்லோரும் வேலைக்கு போகத் தொடங்கியதாலும், சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டதாலும் ஓடிடிக்களின் மவுசு குறைந்துள்ளது. குறிப்பாக நெட்பிளிக்ஸின் பார்வையாளர்கள் எண்ணிக்கை முன்பைவிட குறைந்துகொண்டே வருகிறது.
திடீரென்று சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நஷ்டத்தைச் சரிகட்டுவதற்காக ஆள்குறைப்பில் ஈடுபட்டுள்ளது நெட்பிளிக்ஸ்.
முதல்கட்டமாக தனது மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 4 சதவீதத்தை குறைக்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்காவில் மட்டும் 400 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
வியன்னா – உலகின் சிறந்த நகரம்
உலகில் மக்கள் வாழ்வதற்கு அதிக தகுதிவாய்ந்த 10 நகரங்களை ‘தி எகனாமிக் இண்டெலிஜன்ஸ் யூனிட்என்ற அமைப்பு ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் மக்கள் வாழ்வதற்கு அதிக தகுதிவாய்ந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரமும், 3-வது இடத்தில் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரமும் இடம்பெற்றுள்ளன.
இந்த நகரங்களைத் தவிர கனடாவின் வான்கூவர், கால்கரி, டொரண்டோ, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா, ஜெர்மனியின் பிராங்பர்ட், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், ஜப்பானின் ஒசாகா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. கனடா நாட்டில் இருந்து மட்டுமே 3 நகரங்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள நிலையில் ஆசியாவில் இருந்து ஒசாகா நகரம் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹர்த்திக்கிடம் உதவிகேட்ட ரஷித் கான்
தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் ஏற்கெனவே கஷ்டப்படுகிறார்கள் ஆப்கான் மக்கள். இந்த சூழலில் மற்றொரு கஷ்டமாக இந்த வாரம் அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகள் பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமான நிலையில், உயிர் பிழைத்தவர்களும் உணவில்லாமலும், மருந்துகள் இல்லாமலும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ஆப்கான் பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான், “இந்த குட்டி தேவதையின் குடும்பத்தில் இப்போது அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. அவளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி, மேற்கிந்திய வீரர் டைன் பிராவோ ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டும் உதவி கேட்டுள்ளார்.