No menu items!

கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா – செய்தியாளர் அனுபவங்கள்

கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா – செய்தியாளர் அனுபவங்கள்

கலைஞர் நிருபர்களை சந்திக்கிறார் என்றால் பத்திரிக்கைகள் செய்தி ஆசிரியர்கள் நிம்மதியாக இருப்பார்கள்! தலைப்புச் செய்தி கிடைத்தாயிற்று !

செய்தியாளர்களின் எப்படிப்பட்ட கேள்விகளையும் கலைஞர் வரவேற்பார் விஷமப் புன்னகையுடன் சில நிருபர்களை வேண்டுமென்றே சீண்டி பார்ப்பார். ’இங்கே சூடான சுவையான பதில் கிடைக்கும் என்று போர்டே போடலாம் !” இப்படி ஒரு நிருபர் சொல்லும்போது கலைஞர் புன்னகை பூத்தார்.

கட்சியிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர். தி.மு.க. ஆட்சி மீது ஊழல் பட்டியலை வெளியிட்டபோது நிருபர்கள், “அதை பார்த்தீர்களா” ? என்று கேட்டார்கள். பார்த்தேன்… படித்தேன் ரசித்தேன்” என்ற அவர் பதில் புகழ்பெற்றது.

எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அவரது முதல் பிரச்சார கூட்டம் பற்றி நிருபர்களிடம் கலைஞர் விசாரித்துக் கொண்டிருந்தார் அங்கே இருந்த ஒரு ஜால்ரா அதிகாரி ‘நான் செங்கல்பட்டில் பார்த்தேனே! பெரிய கூட்டம் எதுவும் கிடையாது நான் காரை ஒரு பக்கம் நிறுத்திவிட்டு ஈசியாக ரோட்டை கிராஸ் செய்தேன்” என்றார்.

அந்த அதிகாரி சொல்வதை ஒரு காதால் கேட்டவாறு நிருபர்களின் முகபாவத்தை உற்று கவனித்தார் கலைஞர். நிருபர் கூட்டம் முடிந்தது. அதிகாரியை போகச் சொன்னார் கலைஞர் ! குறிப்பாக ஒரு நிருபரை பெயர் கூறி அழைத்தார். ‘நீங்கள் அந்த கூட்டத்திற்கு போய் இருந்தீர்களா எப்படி இருந்தது? என்றார். ‘உண்மையை சொல்லட்டுமா என்றார் நிருபர்”. அதுதான் வேண்டும் என்றார் கலைஞர்

‘கூட்டம் பிரம்மாண்டம்! கூட்டம் கலைவதற்கு அரை மணிக்குமேல் ஆயிற்று அந்த அதிகாரியையும் பார்த்தேன் காரை எங்கோ நிறுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன் ரோட்டை கடக்க முடியாமல் திண்டாடி தவித்தார்” என்றார்

உண்மை நிலவரங்களை அறிய விரும்புவார் கலைஞர். முக்கியமான செய்திகளை நிறுத்தி நிதானமாக டிக்டேட் செய்வார், அவர் பின்னால் நின்றுக்கொண்டிருக்கும் உதவியாளர் சண்முகநாதன் எல்லாவற்றையும் சுருக்கெழுத்தில் குறிப்பு எடுத்து உடனே டைப் அடித்து கலைஞர் டேபிளில் வைப்பார்.

பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற தோற்றப் பொலிவுடன் இருப்பார் எம்.ஜி.ஆர். தி.மு.கவில் இருந்து அவர் நீக்கப்பட்ட அன்று சத்யா ஸ்டுடியோவில் நிருபர்கள் கூட்டம் அதிகம் மதுரை முத்து மூலம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட போகும் செய்தியை நிருபர்கள் அறிந்திருந்தார்கள்.

நீக்கப்பட்ட செய்தி வந்தது ! நிருபர்கள் எல்லோருக்கும் பால் பாயாசம் வழங்க உத்திரவிட்டார் எம்.ஜி.ஆர். ! எம்.ஜி.ஆர். ஒவ்வொரு நிருபர்களையும் தெரிந்து வைத்திருப்பார். நிருபர் பெயர் திருமணம் ஆகிவிட்டதா, மனைவி எந்த ஊர், இப்படியெல்லாம் கேட்டு தெரிந்து வைத்திருப்பார்.

ஒரு புது நிருபர் எம்.ஜி.ஆரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டவாறு இருந்தார்.

‘நீங்கள் எந்த பத்திரிக்கை?’ கேட்டார் எம்.ஜி.ஆர்.

நிருபர் நான் சார்ந்துள்ள இதழின் பெயரை கூறினார்;!

‘நான் உங்களை பார்த்ததே இல்லையே!

‘நான் புதுமுகம்” என்றார் அந்த நிருபர்

எம்.ஜி.ஆர். பலமாக சிரித்தார் !

பேட்டி முடிந்த உடன் ‘சரி… பேனாவை முடிவையுங்கள் பொதுவாக
பேசுவோம்” என்பார்.

தனக்கும் கலைஞருக்கும் இருந்த நெருக்கமான உறவைப் பற்றியும், மார்டன் தியேட்டர்ஸ் படத்தில் தான் நடித்ததும், கலைஞர் அதற்கு வசனம் எழுதியதும், இருவரும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கியது பற்றியும் கூறுவார்.

‘கலைஞர் தான் எழுதும் கதையையும் வசனங்களையும் படித்துக் காண்பிப்பார். அவர் எழுதப் போகும் கிளைமாக்ஸ் எப்படி அமையும் என்பதை நான் சொல்லி விடுவேன் ! எப்படி கண்டுப்பிடித்தீர்கள் என்பார் கலைஞர். கதைப்போக்கையும் வசனத்தையும் வைத்துக் கண்டுப்பிடித்தேன் என்று கூறுவேன் ஆகவே கலைஞர் அரசியலில் அடுத்து என்னசெய்வார், அவர் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை இப்போதும் என்னால் கணிக்கமுடிகிறது !

அதனால்தான் அவர் என்னை ஜெயிக்கமுடியவில்லை ! நான் ஜெயித்துக் கொண்டே இருக்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் கூறினார் !

கோபம் என்றால் அது ஜெயலலிதாதான்! பத்திரிக்கையில் ஏதாவது செய்தியைப் படித்து அது சரியில்லை என்று தோன்றினால், உடனே அந்த இதழின் ஆசிரியர் அல்லது நிருபரை டெலிபோனிலியே கூப்பிட்டு கோபமாக பேசுவார்! அவர் பேசுவதற்க்கு முன்பு, ‘அம்மா பேசப்போகிறார்! லயனை ஃப்ரியாக வைத்திருங்கள் ‘ என்று போன் மேல் போன்வரும்!

ஆனால் தனிப்பட்ட எந்த தாக்குதல்லும் இருக்காது! ‘கலைஞர் தூண்டிவிட்டாரா’ என்றெல்லாம் சொன்னதில்லை!

’வளர்பு மகன் ‘ சுதாகரன் திருமணத்திற்க்கு பிறகு ஏற்ப்பட்ட தேர்தல் தோல்விக்கு பிறகு, அவரை பேட்டிகான போயஸ் தோட்ட இல்லத்துக்கு போனோம்! ‘மதன்’ கூட வந்தார்! இரண்டு பேராக போவது நல்லது! ஒருவர் டோஸ் வாங்க இன்னொருவர் குறுக்கிட்டு சமாதானம் செய்ய! அது வெற்றி பெறும்.

முதலில் மதன்’ ஜெ’ அறையின் உள்ளே சென்றார்! அவர் பர்சனாலிட்டிக்கு எல்லாரையும் அமைதிபடுத்தும் வல்லமை உண்டு!. நீண்ட வராண்டாவை கடந்து நான் மதனைத் தொடர்ந்து மெள்ள அந்த அறைக்கு வந்தேன். அறையில் ஒளி ‘டிம்’மாக இருக்க, ‘படி’ இருப்பது தெரியாமல், ஒரு கணம் தடுக்கி – கீழே விழ இருந்தேன்!

”பார்த்து,, பார்த்து” என்று உரக்க சொன்னவாறு என்னை பிடிக்க
எழுந்தார் ஜெ! நான் சமாளித்துக் கொண்டு, நாற்காலியில் அமர்ந்தேன்…

”அது என்ன! யாராவது தடுக்கி விழு ந்தால் நோராக உங்கள் நாற்காலி அருகே நெடுஞாண்கிடாயாக விழுவார்கள் போல இருக்கிறதே!” என்று மதன் கூற ‘ஜெ’ சிரித்தார்.

ஆனால் உடனே டோஸ்! அடுக்கடுக்காக ! இல்லாததும் பொல்லாததும் எழுதினீங்களே! இப்போது என்ன! மறப்போம் மன்னிப்போம் கதையா!” என்றார்.

”அம்மா! நீங்கள் ஒரு மாபெரும் தலைவி என்பதும், மக்கள் உங்கள் திறமை மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதையும் யாராலும் எப்போதும் மறுக்க முடியாது” என்று மதன் கூறினார்!

”உங்ளுக்ளெல்லாம் பேச சொல்லித்தர வேண்டுமா” என்ற ஜெ சமாதானம் ஆகிவிட்டார்!

அவர் கோபம் சற்றி நோரம்தான்! எதற்கும் அசராத கம்பீரப் பேச்சு அவருடையது! இந்திரா காந்திக்கு நிகரமாக ஒளி வீசவேண்டியவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...