இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திரெளபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உடன் சென்றனர். தமிழகத்தில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தம்பிதுரையும் இதில் பங்கேற்றனர்.
யஷ்வந்த் சின்காவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு – மத்திய அரசு அறிவிப்பு
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகிறார்கள். இதில் திரெளபதி முர்முவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், யஷ்வந்த் சின்காவுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினியை விடுவிப்பதில் தவறில்லை – கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி சேலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்கள் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்க வேண்டும். அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் வருந்ததக்கது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை. பேரறிவாளன் செய்த குற்றத்தைவிட நளினி பெரிய குற்றம் செய்யவில்லை. கோவை சிறையிலிருக்கும் இஸ்லாமியர்களையும் விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.
இலங்கை பொருளாதாரம் முற்றிலும் வீழ்ந்தது; கச்சா எண்ணெய் வாங்கவும் காசு இல்லை – ரணில்
இலங்கையின் நிதி நெருக்கடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சீனா, அமெரிக்கா, இந்தியா என்று பல நாடுகள் கடன், பொருள், கொடை என உதவியும் தனது நிதி நிலையை இயல்புக்குக் கொண்டு வர இலங்கை போராடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தற்போது கச்சா எண்ணெய் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹே பாராளுமன்றத்தில் பேசும்போது, “நமது பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. எண்ணையை இறக்குமதி செய்ய நிதி இல்லை. இந்தியாவிடமிருந்து 4 பில்லியன் டாலர் கடனுதவியாக இலங்கை பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவினால் இலங்கையை அதிக காலம் நிதி நெருக்கடியில் இருந்து காக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
பள்ளியில் சீட் தர பணம் வாங்கினார்: மதுவந்தி மீது புகார்
சென்னையில் பிரபலமான பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கித் தருவதற்காக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மதுவந்தி ரூ.6 லட்சம் பெற்று மோசடி செய்துவிட்டதாகக் கூறி தி.நகரைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிஎஸ்பிபி பள்ளியில் சீட் பெற்றுத் தருவதற்காக தன்னிடம் மதுவந்தி இதுவரை ரூ.19 லட்சம் பணம் பெற்றதாகவும் பள்ளியில் சீட் கிடைக்காத மாணவர்களின் பெற்றோர் தன்னிடம் பணம் கேட்பதால் மதுவந்தி மீது புகார் அளித்துள்ளதாகவும் கிருஷ்ணபிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த புகாரை மறுத்துள்ள மதுவந்தி, “கிருஷ்ணபிரசாத் சொல்வதைப் போல நான் பணம் வாங்கவில்லை. எனக்குப் பணம் வாங்கவேண்டிய தேவையில்லை. அவர் என் பெயரைச் சொல்லி பணம் வாங்கியுள்ளார். கிருஷ்ணபிரசாத்திடம் பணம் வாங்கக்கூடாது என நான்கு மாதங்களுக்கு முன்னதாக எச்சரித்தேன். அவர் எங்கள் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று நினைத்து எச்சரிக்கை செய்தேன். ஆனால், இந்த முறை அவர் மீது கண்டிப்பாகப் புகார் கொடுக்க வேண்டும் என முடிவுசெய்துவிட்டேன். கிருஷ்ணபிரசாத் என்னுடைய நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். அது தவிர எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என மதுவந்தி தெரிவித்துள்ளார்.