No menu items!

மிஸ் ரகசியா : என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?

மிஸ் ரகசியா : என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?

“ஜனாதிபதி தேர்தலில் நான் சொன்னதைப் போலவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரா திரௌபதி முர்முவை அறிவிச்சுட்டாங்க பார்த்தீங்களா” என்று டீ ஷர்ட்டின் காலரை தூக்கி விட்டுக்கொண்டே ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“கவலைப்படாதே இந்த வருஷம் அப்ரைசல் வரும்போது இதைப்பத்தி எம்டிகிட்ட சொல்றேன். ஆமாம் திரௌபதி முர்முவை எதுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரா தேர்ந்தெடுத்தாங்களாம்?”

“எல்லாம் ஓட்டுக் கணக்குதான். ஒடிசாவுல நவீன் பட்நாயக் மூலமா பாஜக ஓரளவுக்கு வளர்ந்தது. ஆனா இப்ப அவருக்கு எதிர்க்கட்சியா பாஜக இருக்கு. அங்க எப்படியாவது ஆட்சியைப் பிடிக்கணும்கிறது பாஜகவோட லட்சியம். அதனாலதான் ஒடிசாவை சேர்ந்த பழங்குடி இன பெண்மணியான முர்முவை வேட்பாளரா அறிவிச்சு இருக்காங்க. ஒடிசா மட்டுமில்லை… குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலத்துலயும் பழங்குடிகள் நிறைய பேர் இருக்காங்க. இப்ப முர்முவை ஜனாதிபதி வேட்பாளரா அறிவிச்சதால அவங்களோட ஓட்டுகளும் கிடைக்கும்னு நினைக்கிறாங்க.”

“அப்ப எதுக்காக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கறதுக்கு முன்னாடி வெங்கையா நாயுடுவை ராஜ்நாத் சிங்கும், நட்டாவும் சந்திச்சு பேசினாங்க்?”

“இந்த முறை தன்னை குடியரசுத் தலைவர் வேட்பாளாரா பாஜக அறிவிக்கும்னு வெங்கையா நாயுடு ரொம்பவே எதிர்பார்த்திருக்கார். அதனால வேட்பாளரை அறிவிக்கறதுக்கு முன்னால அவரை சமாதானப்படுத்தறதுக்காக சந்திச்சு இருக்காங்க.”

“வெங்கய்ய நாயுடுவை ஏன் பாஜக வேட்பாளரா அறிவிக்கலை?”

“வெங்கையா நாயுடு பாஜகவின் பழைய ஆளு. அவருக்கு வாக்கு பலம் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். எப்பவுமே நீண்ட காலத் திட்டங்களைதான் போடும். ஆர்.எஸ்.எஸின் திட்டத்தில் வெங்கையா நாயுடு இல்லை. அதுதான். சிம்பிள். ஊரே ஓபிஎஸ், இபிஎஸ் பத்தி பேசிக்கிட்டு இருக்கும் நீங்க குடியரசுத் தலைவர் தேர்தலைப் பத்தி கேட்டுக்கிட்டு இருக்கிங்க”

“அதிமுக சண்டையை படிச்சி படிச்சி அலுத்துப் போயிருச்சு. சரி இனிம ஓபிஎஸ் வெளில போக வேண்டியதுதானா?”

“கட்சியில தன்னோட நிலையை தக்கவைக்க என்ன செய்யலாம்னு ஓபிஎஸ் தீவிரமா யோசிசிட்டு இருக்காரு. முதல் கட்டமா பாஜகவோட உதவியை அவர் எதிர்பார்க்கிறார். அதுக்காகத்தான் பொதுக்குழு முடிஞ்ச அன்னைக்கு ராத்திரியே டெல்லிக்கு போயிருக்கார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகனு சொல்றதெல்லாம் சும்மா ஒரு காரணம்”

“பாஜக அவருக்கு ஆதரவு கொடுக்குமா?”

“கொடுக்கிறது சந்தேகம். கட்சி பெருந்தலைகள் கிட்ட மட்டுமில்ல, தொண்டர்கள் கிட்டயும் அவருக்கு செல்வாக்கு இல்லனு பாஜககாரங்க நினைக்கிறாங்க. பொதுக்குழுவுக்கு வரும்போதே எடப்பாடி செம மாஸ் காட்டிட்டாரு. அந்தக் கூட்டத்தை பாஜகவும் பாத்திருக்கும்ல. மோடி சொன்னதாலதான் துணை முதல்வர் பதவியை ஏத்துக்கிட்டேன்னு பத்திரிகையாளர்கள்கிட்ட ஓபிஎஸ் சொன்னதை பாஜக ரசிக்கலயாம். நான்கு சுவர்களுக்கு உள்ள நடந்த விஷயத்தை இப்படி வெளியில சொல்லி பிரதமர் இமேஜை காலி பண்ணிட்டாருனு பேசிக்கிறாங்க.”

“அப்ப, ஓபிஎஸ் நிலைமை ரொம்ப கஷ்டம்னு சொல்ற? சி.வி.சண்முகம் வேற கடுமையா பேசியிருக்காரே”

“ஆமா. நேற்றுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்னு சொல்லியிருக்கார். ஆனா அத்தனை ஈசியா அப்படி பண்ண முடியுமானு தெரியல”

“தேர்தல் ஆணையத்துல ஓபிஎஸ் தரப்புல மனு கொடுத்திருக்கிறதா செய்தி வந்திருக்கிறதே?”

“இல்லனு மறுத்துருக்காங்க. டெல்லிலயும் விசாரிச்சேன். ஓபிஎஸ் தரப்புலருந்து அப்படி மனு கொடுக்கலையாம். ஆனா கொடுக்காம இருக்க மாட்டாங்க. கண்டிப்பா கொடுப்பாங்க. ஆனா முதல்ல கோர்ட்ல கேஸ் போடலாம். அப்புறம் தேர்தல் ஆணையம் போகலாம்னு இருக்காங்களாம்”

“ஏன், அப்படி?”

“ நீதிமன்றத்துக்கு போனாதான் கேஸ் நிக்கும்னு ஓபிஎஸ் தரப்பு நினைக்குது. அதே நேரம் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட அந்தப் பழி ஓபிஎஸ் மேல வந்துருமோனும் பயப்படுறாங்க, அதனால பொறுமையாதா எல்லாம் நடக்கும்”

“பொதுக் குழு முடிஞ்சதுமே பாஜக அண்ணாமலையும் சி.டி.ரவியும் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சந்திச்சிருக்காங்களே”

”ஒரே இடத்துல சந்திக்கலாம்னு நினைச்சோம்..இப்படி தனித்தனியா சந்திக்க வச்சிட்டிங்களேனு சி.டி.ரவி சொல்லியிருக்கார். முதல்ல அதிமுக தலைமையகத்துல சந்திக்கிறதா இருந்தது அத வச்சு அப்படி சொல்லியிருக்கார். எடப்பாடி கமெண்ட் எதுவும் சொல்லாம சிரிச்சிருக்கார்”

“பாஜக இணைப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமா”

“வேண்டாம்னு நினைக்கிறாங்க. இந்த சண்டை இருந்தாதான் 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல நிறைய சீட் கேட்க முடியும்னு நினைக்கிறாங்க. அதிமுக பலவீனப்படுறதைதான் பாஜக விரும்புது”

“ஆமா, அப்பதானே அவங்க வளர முடியும். பொதுக்குழு கூட்டத்துல ஓபிஎஸ்ஸைவிட வைத்திலிங்கம் ரொம்ப டென்ஷனா இருந்திருக்காரே?”

“முன்னாள் அமைச்சரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் ஜெயலலிதா காலத்திலேயே செல்வாக்கோடு இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலில் ஓபிஎஸ் பிறகு எடப்பாடின்னு ஆதரவுக் குரலை மாத்தினாரு. இடையில என்ன நடந்துச்சோ, இப்ப ஓபிஎஸ் ஆதரவாளரா இருக்காரு. இதனால் கோபப்பட்ட எடப்பாடி தஞ்சை மாவட்டத்துல இருக்கிற வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்கிட்ட பேச வேண்டிய படி பேசி அவர்கள் எல்லோரையும் தன் முகாமுக்கு மாத்தியிருக்கார். ஒற்றைத் தலைமைக்கு ஆதரவா கையெழுத்து வாங்கியிருக்கார். இதனால வைத்திலிங்கத்தோட கோபம் அதிகமாகி இருக்கு. அதுதான் பொதுக்குழுவுல கொந்தளிச்சு இருக்காரு.”

“அதிமுகவுல நடக்கிற மாற்றங்களை திமுக எப்படி பார்க்குது?”

“பொதுக்குழுவில் ஓபிஎஸ்க்கு எதிரா மட்டும் கோஷம் எழுப்பல. திமுகவுக்கு எதிராவும் பொதுக்குழு உறுப்பினர்கள் குரல் எழுப்பி இருக்காங்க. சில நிர்வாகிகள் மேடையில் இருந்தபடி திமுக ஆட்சியை அகற்றுவோம்னு ஆவேசமாக பேசி இருக்காங்க. அதனாலதான் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வீட்டு திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், ‘திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள்’ன்னு பேசி இருக்கார். அதோட எடப்பாடி தலைமைப் பதவியை நோக்கி முன்னேறறது திமுகவை மாத்தி யோசிக்க வச்சிருக்கு. அதனால கோடநாடு வழக்கையும், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் மேல இருக்கிற வழக்குகளையும் துரிதப்படுத்த திட்டம் போட்டிருக்காங்க.”

“பாஜக செய்திகள் ஏதாவது இருக்கா?”

“புதுவை மாநில பாரதிய ஜனதா தேர்தல் பொறுப்பாளரா மத்திய அமைச்சர் முருகனை கட்சி மேலிடம் நியமிச்சிருக்கு. தேர்தல் பற்றி நோட்டமிட அவர் நியமிக்கப்பட்டதா சொன்னாலும் உண்மையில் அது மட்டும் காரணம் இல்லையாம். ரங்கசாமி கட்சி எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இணைக்கறதுதான் முக்கிய நோக்கம்னு சொல்றாங்க. இந்த விஷயத்தை அரசல் புரசலா கேள்விப்பட்ட முதல்வர் ரங்கசாமி எனக்கு ஏதாவது ஒரு மாநில ஆளுநர் பதவி வாங்கித் தரச்சொல்லி தமிழிசை கிட்ட கேட்டிருக்கார். பாஜகவுக்கு இந்த டீலிங் பிடித்துப் போயிருக்கு. ஆகட்டும் பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்களாம்.”

“ஸோ, பாஜகவுக்கு இன்னொரு கவர்னர் ரெடி”

“ஆமாம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...