அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக, பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க கோரி, எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ. பன்னீர்செல்வம் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, “வரும் 23-ம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். தாங்களும் கட்டாயம் அதில் பங்கேற்க வேண்டும்” என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்வாரா என்று கேள்வி இருந்துவந்தது.
இந்நிலையில், இன்று உயர் நீதிமன்ற விசாரணையின்போது, “நாளை நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொள்வேன். ஆனால், ஏற்கெனவே என்னிடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் கொண்டுவரக் கூடாது” என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்யும் அதிகாரம் உள்ளது – நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. தொடர்ந்து பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கோரி ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அப்போது, “இதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை; பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது” என தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் முர்முவுக்கு பாமக ஆதரவு
பாமக தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்களை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவும் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராகிய திரவுபதி முர்மு அவர்களை களமிறக்க முடிவு செய்திருப்பதாகவும் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்தக் கோரிக்கை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் இன்று காலை கலந்தாய்வு நடத்தினார். இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 920 பேர் பலி; இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டது
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920ஆக உயர்ந்துள்ளது. மேலும், 600 பேர் காயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் இந்தியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத் தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது.
காபூலில் இருந்து 182 கி.மீ. தொலைவிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 334 கி.மீ. தொலைவிலும், இந்திய நிர்வாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் ரஜௌரியில் இருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 6.1 அளவில் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம்: அமைச்சர் பொன்முடி
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “பொறியியல் சேர்க்கைக்கு 42,716 பேர் இன்று வரை விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். ஜூலை கடைசியில் சிபிஎஸ்இ ரிசல்ட் வரும் என்று சொல்லுகிறார்கள். அதனால், கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த 5 நாட்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு செய்ய நாட்கள் நீட்டிக்கப்படும். இதனால், மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்காகத்தான் நாங்கள் மாநில கொள்கையின் அடிப்படையில் கல்வி இருக்க வேண்டும் என்று கூறுகிறோம்” என்றார்.