No menu items!

அஇஅதிமுக – வளர்ந்த கதை

அஇஅதிமுக – வளர்ந்த கதை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். தமிழக அரசியலின் பெரும் சக்தி.

ஏழு முறை தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய தொண்டர் பலம் நிறைந்த கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரண்டு செல்வாக்கு மிக்க ஆளுமைகள் வழி நடத்திய கட்சி. அந்த இரண்டு ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகும் ஆட்சிப் பொறுப்பை தக்கவைத்துக் கொண்ட கட்சி.

அந்தக் கட்சியின் துவக்கம், கடந்து வந்திருக்கும் பாதை, சந்தித்த சவால்கள், இன்றைய நிலையை இப்போது பார்ப்போம்.

அகில இந்திய அண்ணா தி.மு.க. என்று நாம் அழைத்தாலும் எம்.ஜி.ஆர். கட்சி என்பதுதான் அதன் ஆரம்பக் கால அடையாளம். அதற்கு எளிய காரணம் கட்சியைத் தொடங்கியவர் மக்கள் திலகம் என்று ரசிகர்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். என்ற எம்.ஜி.ராமச்சந்திரன். அவர்தான் அதிமுகவின் நிரந்தர நாயகன். கட்சியின் பெயரில் அண்ணா இருந்தாலும் கட்சியின் உயிர் எம்.ஜி.ஆர்.தான்.

எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை

புராணக் கதைகளிலிருந்து சமூகக் கதைகளுக்கு தமிழ்த் திரையுலகம் மாறிக் கொண்டிருந்த காலம். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் கருத்துக்கள் வேகமாய் பரவிக் கொண்டிருந்த சூழல். எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகில் புதிய கதாநாயகனாய் உருவெடுக்கிறார். அவர் நடித்த கதாபாத்திரங்கள் மக்களின் விரும்பும் குணங்களைக் கொண்டிருந்தன. அநீதியைக் கண்டு பொங்குகிற வீரனாக, எதிரிகளை பந்தாடுகிற பலசாலியாக, தாயை வணங்கும் மகனாக, பெண்கள் நாடும் காதலனாக, ஏழைகளுக்கு உதவும் தயாள பிரபுவாக…..இப்படி எல்லாம் கலந்த ஹீரோ அப்போது தமிழ் சினிமாவுக்கு புதிது.

அவர் ஏற்ற பாத்திரங்கள் மட்டுமல்ல அவர் படத்தின் பாடல்களும் அவற்றில் அவர் சொன்ன கருத்துக்களும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தை பல மடங்கு உயரே கொண்டு போனது. இது அவரது பிற்கால அரசியலுக்கு உதவியது. அவரது ரசிகர்கள் அவரை ஒரு ரட்சகராகவே பார்க்க துவங்கினார்கள்.

தங்களின் அத்தனை பிரச்சனைகளுக்கும் எம்.ஜி.ஆரிடம் தீர்வு இருக்கிறது என்று நம்பினார்கள். இந்த ரசிகர்கள்தான் பின்னர் அ.தி.மு.க.வின் தொண்டர்களாக மாறினார்கள்.


எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸ்காரராதான் இருந்தார். 1953ல் தி.மு.க.வில் இணைந்தார். அவர் தி.மு.க.வில் சேர்வதற்கு முக்கிய காரணம் அண்ணா.
எம்.ஜி.ஆர். இணைவதற்கு சில வருடங்களுக்கு முன்பு 1949ல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா துவக்கியிருந்தார். தி.மு.க.வின் கொள்கைகளும் அண்ணாவின் பேச்சும் அந்தக் காலக்கட்டத்தில் பலரை தி.மு.கவில் சேர வைத்தது. எம்.ஜி.ஆரும் அவர்களில் ஒருவர்.

மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மர்மயோகி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக எம்.ஜி.ஆர். மாறியிருந்த காலம் அது. அதே போல் திமுகவும் மக்கள் செல்வாக்கைப் பெற்று, வேகமாய் வளர்ந்துக் கொண்டிருந்த கட்சியாக இருந்தது.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரைப் போன்று பல திரைக் கலைஞர்கள் திமுகவில் இருந்தார்கள். எம்.ஜி.ஆர் நடித்த மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற படங்களுக்கு கதை – வசனம் எழுதி பிரபலமாக இருந்த, எம்.ஜி.ஆரின் அரசியல் போட்டியாளராக பின்னர் மாறிய மு.கருணாநிதி அவர்களில் முக்கியமானவர்.

திமுகவில் எம்.ஜி.ஆர்.

திமுகவுக்காக பொதுக்கூட்டங்களில் பேசுவது, பிரச்சாரம் செய்வது என்றிருந்த எம்.ஜி.ஆர். முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டது 1967 சட்டப் பேரவைத் தேர்தலில். பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு 27 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முதன் முதலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததும் 1967 தேர்தலில்தான்.

இந்தத் தேர்தலின் போது தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் நடந்தது. தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு – 1967 ஜனவரி 12 ஆம் தேதி – எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். எம்.ஜி.ஆரை சுட்டவர் பிரபல நடிகர் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆரை சுட்டுட்டாங்கன்ற செய்தி செல்ஃபோன், வொட்ஸ் அப் இல்லாத காலத்திலேயே வேகமாய் பரவி தமிழகம் பரபரப்பானது.

தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் தி.மு.க.வுக்கு கூடுதல் அனுதாபமும் வாக்குகளும் கிடைத்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. கழுத்தில் கட்டுடன் இருக்கும் எம்.ஜி.ஆரின் படத்தை போஸ்டராக அச்சிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஒட்டினர். திமுக தேர்தலில் வென்றது.

எம்.ஜி.ஆர். மீது எரிச்சல்

எம்.ஜி.ஆரால் திமுகவுக்கு லாபம் கிடைத்தாலும் கட்சிக்குள் எம்.ஜி.ஆரின் வளர்ச்சியை பலரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

1962ல் எம்.ஜி.ஆரை தமிழக சட்ட மேலவை உறுப்பினராக்கினார் அண்ணா. அந்தப் பதவியை அண்ணாவிடம் கேட்காமலேயே 1964ல் ராஜினாமா செய்தார். இதை திமுகவினர் ரசிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் 1965ல் நடந்த ஒரு கூட்டத்தில் ‘ காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று எம்.ஜி.ஆர் பேசியதும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது போன்ற பிரச்சனைகளை வளரவிடாமல் அண்ணா சமாளித்துக் கொண்டிருந்தார். ஆனால், 1969 ல் அண்ணா மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கும் கட்சியின் மேலிடத் தலைவர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்படத் துவங்கின.

அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராகியிருந்தார். எம்.ஜி.ஆரும் கருணாநிதி முதல்வராவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆதரவு தெரிவித்தாலும் அவர்களுக்குள் ஒரு பனிப்போர் இருந்தது.

1971ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தல். இந்தத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளில் வென்றது. மீண்டும் கருணாநிதி முதல்வரானார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். திமுகவின் பொருளாளர் பொறுப்பில் இருந்தார். கருணாநிதி தலைமையில் பெற்ற வெற்றி இருவருக்குமிடையே இடைவெளியை அதிகரித்தது.

மந்திரிசபை அமைப்பதில் எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்கு மாறாக கருணாநிதி நடந்துக் கொண்டதில் எம்.ஜி.ஆருக்கு அதிருப்தி. அதிருப்திகள் அதிகரித்து வெடிக்கும் சூழல் உருவானது. 1972ஆம் வருடம் அக்டோபர் 8 ம் தேதி திருக்கழுக்குன்றத்திலும் ஆயிரம் விளக்கிலும் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டங்களில் எம்.ஜி.ஆர். கேட்ட கணக்கு தி.மு.க.விலிருந்து அவர் வெளியேற்றப்பட காரணமாயிருந்தது. 1972ஆம் வருடம் அக்டோபர் 14ஆம் தேதி எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். கேட்ட கணக்கு

கட்சியில் கணக்கு கேட்டதால் எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதை தொடர்ந்து நாம் படித்தும் கேட்டும் வருகிறோம். அது என்ன கணக்கு?
“ மந்திரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கு காட்ட வேண்டும் என்று சொல்லுகிறோம். கணக்கு அங்கு காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று ஏன் தி.மு.க. பொதுக்குழு கேட்கக் கூடாது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான், சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் கணக்கு காட்டு. மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்திற்கு வாங்கிய சொத்துக்கள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவை எப்படி வந்தது என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். தங்கள் கை சுத்தமானது என்று நிருபிக்க வேண்டும்” இதுதான் எம்.ஜி.ஆர். திமுக கூட்டங்களில் கேட்ட கணக்கு.

எம்.ஜி.ஆர். இப்படி பேசியது திமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. கட்சிக்கு இழுக்கு வரும் வகையில் பேசியிருக்கும் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதியிடம் வைத்தார்கள்.

எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. எம்.ஜி.ஆர். விளக்கமோ வருத்தமோ தெரிவிக்க மறுத்துவிட்டார். “தவறு செய்தவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன்” என்றார்.

எம்.ஜி.ஆரிடம் நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் பேசிப் பார்த்தார்கள் . பெரியார் கூட சமரச முயற்சி மேற்கொண்டார். “ இதையெல்லாம் கட்சிக்குள் பேசி தீர்த்துக் கொள்ளாமல் வெளியில் ஏன் பேச வேண்டும்? நம்மைச் சுற்றி ஏராளமான எதிரிகள் இருக்கிறார்கள். வெளியே பேசினால் பாதிக்கப்படுவது நாம்தானே. எதிரிகளுக்கு ஆக்கம் தரும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டாம்” என்று எம்.ஜி.ஆரை அழைத்துக் கூறினார். ஆனால் எம்.ஜி.ஆர். தனது நிலையில் பிடிவாதமாக இருந்தார். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு 1972 ஆம் வருடம் அக்டோபர் 14ஆம் தேதி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார்.

பிறந்தது அதிமுக

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. எம்.ஜி.ஆர். யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை செய்தார். தனது ரசிகர் அனகாபுத்தூர் ராமலிங்கம் பதிவு செய்திருந்த அதிமுக என்ற கட்சியில் இணைந்துவிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு திமுகவில் பிரச்சனை என்றதுமே அதிமுக என்ற பெயரில் ஒரு கட்சியைப் பதிவு செய்து வைத்திருக்கிறார் அனகபுத்தூர் ராமலிங்கம். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் உடனடியாக அதில் எம்.ஜி.ஆர். இணைந்துவிட்டார்.

அந்த அதிமுகதான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இது நடந்தது 1972 அக்டோபர் 17ம் தேதி.

அதிமுகவின் கொள்கை என்ன?

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அதிமுகவின் கொள்கை அண்ணாயிசம் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். “காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் ஆகிய மூன்று கொள்கை தத்துவங்களில் உள்ள நல்ல அம்சங்களை திரட்டினால் என்ன கிடைக்குமோ அது தான் அண்ணாயிசம்’ என்று அதற்கு விளக்கமும் தந்தார்.
எம்.ஜி.ஆரின் பல லட்சம் ரசிகர்களுக்கு கொள்கை விளக்கங்கள் தேவைப்படவில்லை. எம்.ஜி.ஆர். கட்சி என்ற ஒரு காரணம் போதும் அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க.

முதல் தேர்தல்

அதிமுக சந்தித்த முதல் தேர்தல் 1973ஆம் வருடம் மே மாதம் திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்ற இடைத் தேர்தல். கடுமையான பிரச்சாரங்கள், கட்சி தொண்டர்களின் மோதல்கள் என்று அந்தத் தேர்தல் பரபரப்பாக இருந்தது. அதிமுகவுக்கு வெற்றி. முதல் வெற்றி.

அதிமுகவின் அந்த வெற்றி குறித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி, “ ஒரு தொகுதியின் வெற்றி – தோல்வி தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதல்ல. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி இதற்கு பொருந்தாது” என்றார்.

ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக எதிர்கால தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக மாறியது. திமுகவுக்கு வலிமையான எதிரியாக உருவெடுத்தது.

திண்டுக்கல் வெற்றியைத் தொடர்ந்து 1977ல் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வந்தது. அதிலும் அதிமுக அபார வெற்றி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் எம்.ஜி.ஆர். கூட்டணி 144 இடங்களிலும் அதிமுக தனியாக 130 இடங்களிலும் வென்றது.

எம்.ஜி.ஆர். முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு 1987ல் அவர் இறக்கும் வரை அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர்.

தமிழகத்தை மாற்றிய இரண்டு திட்டங்கள்

எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அதிமுகவின் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவற்றில் மக்களின் நன்மதிப்பை பெற்ற திட்டம் பள்ளி குழந்தைகளுக்கான மதிய சத்துணவுத் திட்டம்.

பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம் சுதந்திரத்துக்கு முன்பே நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் மிகச் சில இடங்களில் மட்டுமே அது செயல்படுத்தப்பட்டது. இந்த மதிய உணவு திட்டம் பெரிய அளவில் 1956ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, பல இடங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் முழுமையான அரசு திட்டமாக மதிய உணவு திட்டத்தை செழுமைப்படுத்தினார்.

1982ஆம் வருடம் ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய அதே அதிமுக அரசுதான் மீண்டும் தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்தது. கருணாநிதியின் தலைமையில் நடந்த முந்தைய திமுக ஆட்சியில் 1971 முதல் 1974 வரை மூன்று வருடங்கள் தமிழகத்தில் மது அனுமதிக்கப்பட்டிருந்தது. 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்படும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்து மதுவிலக்கை கொண்டு வந்தார்.

தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று 1977ல் முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர். மதுவிலக்கு தொடரும் என்று அறிவித்தார். மதுவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், 1981 மே 1 ஆம் தேதி தமிழகமெங்கும் சாராயக்கடைகளைத் திறக்க அனுமதி தந்தார். சாராயத் தொழிற்சாலைகள் அமைக்கவும் அனுமதி தரப்பட்டது. 1983ல் டாஸ்மாக் நிறுவனமும் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில்தான் துவக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். சந்தித்த சவால்கள்

1977ல் முதல்முறையாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த அதிமுக 1980ல் மத்தியில் ஆண்டுக் கொண்டிருந்த இந்திரா காந்தி அரசால் கலைக்கப்பட்டது. அதற்கு ஒரு காரணம் இருந்தது.

1980ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசும் திமுகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வென்றது. எம்.ஜி.ஆரின் அதிமுக கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது. எம்.ஜி.ஆர். சந்தித்த பெரும் தோல்வி அது.

நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெற்று விடலாம் என்று நம்பியது திமுக – காங்கிரஸ் கூட்டணி. எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது. உடனடியாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஆதரவு எம்.ஜி.ஆருக்கே இருந்தது. அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்று மீண்டும் தமிழக முதல்வரானார்.


1984ல் அதிமுக மீண்டும் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எம்.ஜி.ஆருக்கு திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. முதலில் நெஞ்சுச் சளி என்று கூறப்பட்டது. ஆனால் நிலைமை கொஞ்சம் மோசம் என்று சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. அமெரிக்காவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் டாக்டர்கள் வந்தார்கள். எம்.ஜி.ஆர். அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். தமிழகமே அவருக்காக பிரார்த்தனை செய்தது.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த போது 1984 டிசம்பர் மாதம் இங்கு சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் பிரதமராய் இருந்த இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்திருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராகியிருந்தார். இங்கே தமிழகத்தில் காங்கிரசும் அதிமுகவும் கூட்டணி அமைத்திருந்தன.

இந்திராவின் மரணம், எம்.ஜி.ஆரின் உடல் நலக் குறைவு – இவையெல்லாம் அதிமுக கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தந்தது. அமெரிக்க மருத்துவமனையிலிருந்து ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாத இறுதியில் வந்தாலும் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆரால் உடனடியாக பதவியேற்க முடியவில்லை. 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 தேதிதான் முதல்வராக பதவியேற்றார்.

அதிமுகவில் ஜெயலலிதா

1984 சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு 1982ல் அதிமுகவில் முக்கிய திருப்பம் நடந்தது. ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே அவருக்கு கட்சியியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. சத்துணவு திட்ட உயர்மட்டக் குழுவிலும் சேர்க்கப்பட்டார். ராஜ்ய சபை எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த சூழலில் ஜெயலலிதாவின் பிரச்சாரம் அதிமுகவுக்கு பெரிய பலத்தை தந்தது.

கட்சிக்குள் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்த சில மூத்த தலைவர்களுக்கு எரிச்சல். ஆனாலும் அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் முழு ஆதரவு ஜெயலலிதாவுக்கு இருந்தது.

1987ஆம் வருடம் டிசம்பர் 24 ஆம் தேதி எம்.ஜி.ஆர். காலமானார். அதிமுக மட்டுமில்லாமல் தமிழகமே அதிர்ச்சியானது. சோகமானது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் கலந்துக் கொண்டார்கள். இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள வந்த ஜெயலலிதாவை வாகனத்திலிருந்து தள்ளி அவமானப்படுத்திய நிகழ்வும் நடந்தது.

கட்சியில் பிளவு

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆர். இருந்தவரை அரசியல் ஆர்வம் காட்டாத அவரது மனைவி வி.என்.ஜானகி அரசியலுக்கு வந்தார். ஜானகி தலைமையிலும் ஜெயலலிதா தலைமையிலும் கட்சி பிரிந்து நின்றது. தொண்டர்கள் குழம்பி நின்றார்கள்.

எம்.ஜி.ஆர். இருந்த காலத்திலும் மூத்த தலைவர்கள் சிலர் அதிமுகவை விட்டு விலகியிருக்கிறார்கள். 1980ல் நாஞ்சில் மனோகரன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். 1984ல் அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் அதிமுகவிலிருந்து விலகி நமது கழகம் என்ற பெயரில் தனிக் கட்சித் துவக்கினார். ஆனால் இந்த விலகல்களால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை காரணம் அதிமுகவின் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்.தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட ஜெயலலிதா – வி.என்.ஜானகி மோதல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.

1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெ அணி – ஜா அணி என்று போட்டியிட்டார்கள். ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னம். ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னம். உடைந்திருந்த அதிமுக போட்டியிட்ட தேர்தலில் தி.மு.க. எளிதாக வென்று – 13 வருடங்களுக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானார்.

தேர்தல் தோல்வி அதிமுகவினருக்கு பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. ஜானகி அணியிலிருந்து பி.எச்.பாண்டியன் மட்டும் வெற்றி பெற்றார். வி.என்.ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கினார். 27 தொகுதிகளை வென்ற ஜெயலலிதாவின் தலைமைக்குள் அதிமுக வந்தது.

அதிமுக மீண்டும் புத்துயிர் பெற்றது. எம்ஜிஆர் அதிமுக முடிந்து ஜெயலலிதா அதிமுக துவங்கியது.

ஜெயலலிதா தலைமை

ஜெயலலிதா தலைமையில் அதிமுக 1991, 2001, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. 1996, 2006 ஆகிய தேர்தல்களில் தோற்றது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு 2011,2016 என தொடர்ந்து இரண்டு முறை பொதுத் தேர்தலில் வென்று முதல்வர் ஆன சிறப்பை ஜெயலலிதா பெற்றார்.
69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தது, தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியது, காவிரி நதி நீர் பங்கீடு குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு , இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியது போன்றவை ஜெயலலிதாவின் ஆட்சியின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது.

சாதனைகள் ஒருபக்கம் இருந்தாலும் சர்ச்சைகளும் தோல்விகளும் அதிகம் இருந்தன.

முதல் பெரிய சர்ச்சை 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமணம்.

அதன்பின் சர்ச்சைகளும் வழக்குகளும் அதிமுகவை நிறையவே தொடர்ந்தன. 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டபேரவைத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோல்வியடைந்தார். 2001 சட்டபேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

ஊழல் வழக்குகளில் வந்த தீர்ப்புகளினால் ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியாத சூழலில் அதிமுகவின் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இரண்டு முறை முதலமைச்சராக சில மாதங்கள் பதவி வகித்தார்.

2006 தேர்தலில் ஆட்சியை இழந்த அதிமுக 2011 தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் ’மோடியா லேடியா’ என்ற கேள்வியுடன் மக்களைச் சந்தித்து, 44.3 சதவீத வாக்குகளுடன் 37 நாடாளுமன்றத் தொகுதிகளை அதிமுக வென்றது.

ஜெயலலிதா மரணம்

2016 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஜெயலலிதா சீரான உடல்நிலையில் இல்லை என்பதை அவரது பிரச்சாரக் கூட்டங்கள் காட்டின.

2016 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். நீர் சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அப்போலோ சொல்லியது. 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 5 ஆம் தேதி மருத்துவமனையிலேயே காலமானார். அவரது மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற குரல்கள் அதிமுகவில் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக 2017 பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதிமுகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தச் சூழலில் பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதியில் தியானம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார். தர்ம யுத்தத்தை துவக்கினார்.

தமிழக அரசியல் பரபரப்பானது. இந்தச் சூழலில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல் முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொன்னது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. முதல்வராக முடியாமல் சசிகலா சிறைக்குச் சென்றார். எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த நிலை நீடிக்கவில்லை. அதிமுகவில் காட்சிகள் மீண்டும் மாறியது. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கை கோர்த்தார்கள். 2017 செப்டம்பரில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் பொதுச்செயளாளர் பதவி இனி இல்லை என்றும் ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளாராகவும் புதிய பதவிகளில் பொறுப்பேற்றார்கள்.

தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தினகரன் 2017 டிசம்பரில் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் துவக்கினார்.

இந்த சூழலில் 2019 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலும் தமிழ் நாட்டில் 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வென்றது. 38 இடங்களில் தோல்வியுற்றது.

22 தொகுதி இடைத் தேர்தல் மிக முக்கியமானது. ஆட்சியைக் கவிழ்க்க சக்தி வாய்ந்த அந்த இடைத் தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது எடப்பாடி பழனிசாமியின் சாதனையாக பார்க்கப்பட்டது.

2021 சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் கடினமான சவாலை சந்தித்தது அதிமுக. பாஜக, பாமக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து 66 இடங்களை அதிமுக பெற்றது. கூட்டணியாக 75 இடங்களில் வென்றது.

மேற்கு மற்று வடக்கு தமிழ் நாட்டில் அதிமுக கூட்டணி பெருவாரியான வெற்றியை பெற்றது. ஆனால் தெற்கிலும் டெல்டா பகுதிகளிலும் கடுமையான தோல்வியை சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மீண்டும் தோல்வியைத் தழுவியது.

இந்த சூழலில்தான் அதிமுகவின் பொதுக்குழு நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்.

மீண்டும் அதிமுக உடையுமா அல்லது மீண்டும் தியாகியாக ஓபிஎஸ் மாறுவாரா?

காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...