No menu items!

நியூஸ் அப்டேட்: தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – ஓபிஎஸ்

நியூஸ் அப்டேட்: தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – ஓபிஎஸ்

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு நாளை நடக்கவுள்ள நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஓபிஎஸ் அணியில் இருந்து பலரும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவி வருகின்றனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுகவில் நிலவி வரும் அராஜக மற்றும் சர்வாதிகாரப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இணைச் செயலாளர் கேசவன் தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்த செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்” என இதில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

வெற்றிகள் குவியட்டும்: கமலுக்கு இளையராஜா வாழ்த்து

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே!!! மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்.என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசன், “நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்” என்று தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தள்ளிவைப்பு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மேகதாது பகுதியில் அணை கட்டுவது பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி குழுவையும் டெல்லிக்கு அனுப்பினார்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை தள்ளி வைப்பதாக அதன் தலைவர் ஹல்தர் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்தமாதம் (ஜூலை 6-ம் தேதி) கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்வது அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,249 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,659 பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 2,609 பேர் பாதிப்பு உள்ளாகி இருக்கிறார்கள். கர்நாடகாவில் 738, தமிழ்நாட்டில் 737, அரியானாவில் 611, உத்தரபிரதேசத்தில் 487, மேற்கு வங்கத்தில் 406, தெலுங்கானாவில் 403, குஜராத்தில் 226, கோவாவில் 135, பஞ்சாபில் 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...