No menu items!

விஜய் சேதுபதி – வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா?

விஜய் சேதுபதி – வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா?

வெள்ளித்திரையில் கதாநாயகன் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்ட சில இலக்கணங்களை உடைத்தெறிந்தவர் என்பதால் விஜய் சேதுபதிக்கு குடும்பங்களில் ரசிகைகள் அதிகம்.

கதாநாயகர்களுக்கென்று சொல்லப்படும் பளீர் நிறம் இல்லை. சொல்லும்படியான வசீகர தோற்றம் இல்லை. கவர்ந்திழுக்கும் உடற்கட்டு இல்லை. மனதைக் கொள்ளை கொள்ளும் உடல்மொழி இல்லை. இப்படி பல இல்லை என்றாலும், தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் என்பதால் இவரை தங்களோடு பொருத்திப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.

பெரும் போராட்டம்,. கடுமையான முயற்சி,. நீண்ட காத்திருப்புக்கு தளராத மனம். தனக்கு பொருந்துகிற கதைகளை, கதாபாத்திரங்களை சரியாக கணிக்கும் திறமை. இவை நான்கும்தான் விஜய் சேதுபதியை ’மக்கள்செல்வன்’ என்று இன்று கொண்டாட வைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் ’தென்மேற்கு பருவக்காற்றைப்’ போல தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக நுழைந்த விஜய்சேதுபதியின் திரைப்பயணத்தில், தற்போது ’நடுவுல கொஞ்சம் ஆளைக் காணோம்’ என்று அவரது ரசிகர்கள் ரசிகைகள் வருத்தத்துடன் சொல்லுமளவிற்கு நிலைமை ‘தலைகீழாக’ மாறியிருக்கிறது.

’96’ படத்திற்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை.. விஜய், கமல் என தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்களின் படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டியிருக்கின்றன. இந்த வசூலுக்கு விஜய் சேதுபதி எந்தவிதமான உரிமையையும் கோர முடியாது என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், நானும் ரவுடிதான், 96, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தப் படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபீஸில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்படங்களில் நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய இரு படங்களும் வரவேற்பை பெற நயன்தாராவின் மவுசும் முக்கிய காரணம். விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம் என வெற்றிப் படங்களில் இவர் இருந்தாலும் அப்படங்களின் வெற்றிக்கான க்ரெடிட்டை விஜய் சேதுபதிக்கு மட்டும் கொடுக்க இயலுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி ஒற்றை ஹீரோ அல்ல அது மட்டுமல்ல இந்தத் திரைப்படங்கள் திரைக் கதைக்காகவும் இயக்கத்துக்காகவும் பெயர் பெற்றவை.

மறுபக்கம் ஆரஞ்சுமிட்டாய், ஜூங்கா, லாபம், அன்னபெல் சேதுபதி. துக்ளக் தர்பார், க.பெ. ரணசிங்கம், சங்கத்தமிழன், சிந்துபாத், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, றெக்க, கருப்பன், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, வன்மம், ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், கடைசியில பிரியாணி, யாதும் ஊரே யாவரும் கேளீர் என மக்களிடம் வரவேற்பை பெறாத, வசூலில் கல்லா கட்டாத, விஜய் சேதுபதியின் தோல்விப் படங்களுடைய எண்ணிக்கை ஹிட் படங்களின் எண்ணிக்கையை விட மிக பெரிதாக நீள்கிறது.

கதைகளை பார்த்து பார்த்த் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் இன்றைக்குள்ள நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருக்கும் விஜய் சேதுபதியின் இந்த தோல்வி பட்டியலில் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாவதற்கு என்ன காரணம்?

ஜெயிக்கும் வரை, முகம் அடையாளம் காணப்படும் வரை காட்டிய அக்கறை, விஜய் சேதுபதியிடம் தற்போது இல்லை என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். சினிமா மீதான காதல், கதை மீதான அக்கறையைத் தாண்டி அவருக்கு பணத்தின் மீதான மோகம் அதிகமாகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சம்பளம் கொடுத்தால் கால்ஷீட் ரெடி என்கிற ஃபார்மூலாவுக்கு அவர் மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதன் விளைவே கதையைப் பற்றி அவர் கவலைப்படாமல் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து பெரும் தோல்வியைச் சந்தித்தன. தற்போது விக்ரம் படத்தில் நடிப்பதற்காக 14 கோடி ரூபாய் சம்பளமாக விஜய் சேதுபதி பெற்றதாக கிசுகிசுக்கிறார்கள். இதைவிட அதிகமாக சம்பளம் கொடுத்தால் போதும். அதுவும் ரொக்கமாக கொடுத்தால் இன்ஸ்டண்ட் கால்ஷீட் கிடைத்துவிடும். எந்த குப்பை கதையாக இருந்தாலும் கூட ஷூட்டிங்கிற்கு அவர் தயார் என்கிறார்கள்.

இதனால் வழக்கமான கமர்ஷியல் ஹீரோக்களிடமிருந்து மாறுபட்ட, வித்தியாசமான கதைகளத்தில், ஒரு யதார்த்தமான கதை நாயகனைப் பார்க்க விரும்பிய அனைத்து ரசிகர்களின் எதிர்பார்பை விஜய் சேதுபதியால் பூர்த்தி செய்ய முடியாமல் போயிருக்கிறது.

விஜய் சேதுபதியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஆரம்பக்கால திரைத்துறை நண்பர்கள். இவர்கள் யாருக்கும் விஜய் சேதுபதியை நெருங்க முடியாத ‘நோ எண்ட்ரீ’ வளைத்திற்குள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

வித்தியாசமான கதைக் களம் என்பதால், ஒரே மாதிரியாக நடித்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகு தானாகவே ஏறிவிடும். ஆனால் கதை பெரிதாக இல்லாமல், கமர்ஷியல் சமாச்சாரங்களை மட்டுமே நம்பி எடுக்கப்படும் திரைப்படங்களில் நகாசு பண்ணும் நகைச்சுவை திறமை, வாவ் என்று சொல்ல வைக்கும் நடன அசைவு, சூப்பர் என்று சொல்ல தூண்டும் ஆக்‌ஷன் அதிரடி என இந்த அம்சங்கள் எல்லாம் இருந்தால் மட்டுமே கமர்ஷியல் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமென்பதையும் விஜய் சேதுபதி கண்டுகொள்ளவில்லை.

ஒரே மாதிரியான மோனோடோனஸ் ஆக்டிங்கை வழக்கமான கமர்ஷியல் படங்களில் பார்க்கும் பொறுமை இன்று திரைப்பட ப்ரியர்களிடம் இல்லை என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

’உங்களுக்கு இருக்கும் இமேஜ் வேறு. ஆனால் ஏன் கமர்ஷியல் படங்களில் நடிக்கிறீர்கள்’ என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, ‘நானும் கமர்ஷியல் மசாலா படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார் விஜய் சேதுபதி. இங்குதான் தடம் மாறியது விஜய் சேதுபதியின் சக்ஸஸ் ட்ராக்.

சம்பளம் என்ற ஒரே விஷயத்திற்காக இவர் நடித்த அன்னபெல் சேதுபதி, சீதக்காதி படங்களில் இவருடைய கதாபாத்திரம் அதிக நேரம் திரையில் இல்லை. விஜய் சேதுபதி படம் என்று எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள் தொடர்ந்து ஏமாறுவார்கள் என்று நினைத்தால் அதற்கு வாய்ப்பில்லை என்பதை சமீப காலமாக ரசிகர்கள் புரிய வைத்திருக்கிறார்கள்.

’சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அடுத்த தலைமுறை நாயகன். நிச்சயம் அவரது தேடலும், துணிச்சலும் வீண் போகாது.’ என்றார் கமல்.

பல நடிகர்களின் திரை வாழ்க்கையில் இது போன்ற பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு கமல், ரஜினி கூட விலக்கில்லை. ஆனால் அவர்கள் தங்களை திருத்திக் கொண்டு வெற்றிப் பாதைக்கு மீண்டும் திரும்பினார்கள்.

விஜய் சேதுபதி தன் சிக்கல்களை உணர்வாரா? தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா?

அவர்தான் சொல்ல வேண்டும். செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...