விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை கிண்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடந்தது. விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், அனிருத் கலந்துக் கொண்டனர். விழாவிலிருந்து….:
இசையமைப்பாளர் அனிருத் சுருக்கமாக பேசினார். ”விக்ரம் படத்தை பிரம்மாண்டமாக மாற்றிய மக்களுக்கு நன்றி. உங்களுக்கு என்ன கமல் பரிசு கொடுத்தார் என்று நிறைய பேர் கேட்டனர். விக்ரம் படமே எனக்கு பெரிய பரிசு வேறு எந்த பரிசும் தேவை இல்லை” என்று சிரித்துக் கொண்டே அனிருத் கூறினார். இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரும் சிறிய வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சும் கமல் பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உற்சாகமாய் பேசினார் உதயநிதி. ”இந்த படத்தை கமல் எனக்குதான் முதலில் காண்பித்தார்.இடைவேளை முடிந்த பின்பு நான் ஆச்சரியமாக உணர்ந்தேன். தமிழ் சினிமாவில் ஒரு ஆங்கிலப்படமா என்று வியந்தேன். என்னுடைய வாழ்த்தையும் தெரிவித்தேன்.. இந்த திரைப்படத்தின் முதல் விமர்சகர் நான் தான் என்பதில் பெருமையாக உள்ளது..
படம் வெற்றி பெறும் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்க வில்லை.. விக்ரம் திரைப்படத்தை 7 முறை பார்த்துவிட்டேன். விக்ரம் திரைப்படத்தின் தமிழ்நாடு பங்கு மூலம் மட்டும் 75 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதுவரை எந்த படமும் இந்த அளவிற்கு பணம் சம்பாதிக்கவில்லை.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய போது, இந்த ரயிலில் கடைசியாக ஏறிய பயணி நான் என சொன்னேன்.நான் ஏறியது ரயில் இல்லை, ராக்கெட். விக்ரம் படம் ஒரு ராக்கெட்..” என்று கூறினார் உதயநிதி.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் அனுபவங்களை பேசினார். ”விக்ரம் படம் எழுத்துக்கு ஊரடங்குக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், இந்த படத்தை பொறுமையாக எழுத நேரம் கிடைத்தது. வேலையை பகிர்ந்து செய்துக் கொண்டோம். கமல் சார் பங்கு இல்லை என்றால் வெற்றி சாத்தியம் இல்லை.
படம் வெளியானதும் செல்போனில் அழைத்து அரை மணி நேரம் பேசினார் கமல். படம் வெற்றி பெற்று விட்டது, இனி உடனடியாக அடுத்த படத்திற்கான வேலைகளை பாருங்கள் என்று அறிவுறுத்தினார். அதனால் அடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டேன்” என்றார் லோகேஷ்.
கலகலப்பாய் பேசினார் கமல்:
எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என தான் சினிமாவிற்கு வந்தேன், பாலசந்தர் சார் தான் என்னை நடிக்க வைத்தவர்.எனக்கு வெற்றிகளை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் என் ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள்.
கடந்த பத்து வருட காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் இதுமட்டுமே. அதற்கு காரணம் மகேந்திரனும், உதயநிதி ஸ்டாலினும் தான். இவர்கள் உடன் இருந்ததால் தான் என்னால் தைரியமாக இருக்க முடிந்தது.
உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடித்தாலும், அரசியலில் இருந்தாலும் பட விநியோகத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள் எனக் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால், இத்தனை நேர்மையோடு பட விநியோகத்தை மேற்கொள்வது என்பது நிச்சயம் சினிமா துறைக்கு அவசியம்.
விக்ரம் படத்துக்காக நான் கார் பரிசளித்தது, வாட்ச் பரிசளித்தது, பைக் பரிசளித்து இவற்றைப் பற்றியெல்லாம் பேசினார்கள். அதையெல்லாம் விட சிறந்த பரிசு உழைக்கும் மக்கள் தங்கள் கூலியிலிருந்து ஒரு தொகையை விக்ரம் படத்துக்கு கொடுத்ததே சிறந்த பரிசு. உண்மையான வள்ளல்கள் பிளாட்பாரங்களில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் சின்னத்திரைக்கு சென்ற போது என்னிடம் சின்னத்திரை செல்ல வேண்டாம் என சொன்னார்கள், இப்போது நான் தொலைக்காட்சி மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுள்ளேன். நான் தொலைக்காட்சிக்கு சென்றது படத்தின் விளம்பரத்துக்கு உதவியது.
நானும் இந்த வெற்றியை எளிதாக எடுத்து கொள்ளப் போவதில்லை. சாய்ந்து படுத்துக்கொள்ளவும் மாட்டேன். தெளிவாக நிமிர்ந்து உட்கார்ந்து எப்படி ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதைவிட அதிகமாக அமர்ந்து வேலை செய்வோம். என் திறமைக்கு அதிகமாகவே தமிழக மக்கள் என்னைக் கொண்டாடி இருக்கிறார்கள்
என்னை விட திறமையானவர்கள் என்னை மாதிரியான குருமார்கள் இந்த துறையை விட்டு போய் இருக்கிறார்கள்.. லோகேஷ் நீங்கள் பிறருக்கு கற்றுக் கொடுங்கள். லோகேஷ் கனகராஜ் வாத்தியாராக மாறவேண்டும். நிறைய கற்றுக்கொடுக்க வேண்டும். கற்றுக்கொடுக்கும்போதுதான் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
இந்த அனிருத் தம்பியை என்ன சொல்வது என தெரியவில்லை, யாராவது தனியாக பார்த்தால் ஏம்பா காலேஜ் போகலயா? என கேட்பது போல உள்ளார்.ஆனால் எழுந்து நின்று பேசினால் அமிதாப் பச்சன் குரல் போல இருக்கும்.
ஆரோக்கியமான விமர்சனங்களையும், எங்களை தட்டி கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.என் படத்திற்கு மட்டும் இப்படி வரவேற்பு அளிப்பதை தாண்டி மற்ற படங்களுக்கும் ஆதரவு அளியுங்கள்” என்றார் கமல்ஹாசன்.