No menu items!

ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் ஒட்டகசிவிங்கிகள் – நோயல் நடேசன்

ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் ஒட்டகசிவிங்கிகள் – நோயல் நடேசன்

தென் ஆப்பிரிக்கா பயணம் – 4

மாலை முழுவதும் குருகர் காட்டினுள் வாகனத்தில் அலைந்து, பல மிருகங்களையும் பார்த்தபின்னர், எமது வாகனம் மாலை ஏழு மணியளவில் பொழுதுசாயும் நேரத்தில் இருப்பிடத்திற்கு திரும்பியபோது நாங்களும் களைப்படைந்திருந்தோம். திறந்த வாகனம் என்பதால் ஆப்பிரிக்க கோடை வெய்யில் உற்சாகத்தை உறிஞ்சிவிட்டது.

அப்போது ஓடிக்கொண்டிருந்த வாகனம் எதிர்பாராமல் நின்றது. வாகன சாரதி தனது கையில் இருந்த பிரகாசமான லைட்டை அடித்தபோது வாகனத்தில் இருந்து ஐந்து மீட்டர் முன்பாக தார்பாதையின் ஓரத்தில் புதிதாக வேட்டையாடப்பட்ட பன்றியின் கழுத்தில் இருந்து இரத்தம் வழிய சிறுத்தை உண்டு கொண்டிருந்தது.

பன்றியின் பின்பகுதியில் சிறிதளவு தசை ஏற்கனவே காணாமல் போயிருந்தது. எமது வாகனத்தைப் பற்றியோ வெளிச்சத்தைப் பற்றியோ எதுவித கவனமும் அற்று தனது உணவை அது உண்டது. ‘அப்படியே மரத்தின் பின்னால் பார்க்கும்படி’ சாரதி கூறியதும் அருகில் தலையை திருப்பியபோது மரத்தின் மறைவில் வேறு ஒரு சிறுத்தை நிற்பது தெரிந்தது. ‘‘இது ஆண். இரண்டும் சேர்ந்து வேட்டையாடிவிட்டு நம்மை கண்டு ஆண் சிறுத்தை விலகிப்போய்விட்டது” என்றார் சாரதி.

சிங்கம், சிறுத்தைக்கு அடுத்ததாக ஆப்பிரிக்க காட்டு யானைகளை அருகே சென்று பார்க்கவேண்டும் என்ற ஏன் நெடுங்கால ஆவலும் இந்த தென் ஆப்பிரிக்கா பயணத்தில் நிறைவேறியது மறக்க முடியாத அனுபவம்.

மிருக வைத்தியராக இலங்கையில் யானைகளை பற்றி படித்திருப்பதுடன், அவற்றிற்கு வைத்தியம் பார்க்கும் வேலைகளையும் ஓரளவு செய்திருக்கிறேன். தந்தத்திற்காக கொலை செய்யப்பட்ட யானைகளை பிரேத பரிசோதனை செய்திருக்கிறேன். குட்டிகளை பிடிப்பதற்காக, வெட்டிய குழிகளில் விழுந்த ஓரிரு மாதங்களேயான, யானைக் குட்டிகளை இலங்கையில் போலீஸ் பாதுகாப்பில் எடுத்தால், அவற்றை வளர்ப்பதற்கு உதவுவது மிருக வைத்தியர்களான எங்கள் கடமை. அப்படி பல குட்டிகளுக்கு குழந்தை பால்மா ஊட்டி வளர்க்க உதவியுள்ளேன்.

உண்மையில் யானைகளின் இடம் காடுகளே. கூட்டமாக காட்டில் இயற்கை சூழலில் பல கிலோமீட்டர் ஒவ்வொரு நாளும் நடந்து சந்தோசமாக இருக்கவேண்டியவை. அவ்வாறு சுதந்திரமாக நடமாடும் விலங்குகளை சிறிய இடத்தில் அடைத்தல் சித்திரவதையே.

சம்பேசி ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் சாம்பியாவில் உருவாகி பின்னர் மொசாம்பிக்கின் ஊடாக இந்து மகா சமுத்திரத்தில் வந்து கலக்கும் பெரிய நதி. இந்த நதியில் இருந்துதான் பிரசித்திபெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகிறது. ஒரு நாள் மாலை நேரத்தில் சம்பேசி ஆற்றில் போய் கொண்டிருந்தபோது, படகில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பு என்னைக் கவர்ந்தது. படகில் பல நாட்டவர்கள் இருந்ததால் பல மொழிகளில் பேசியபடி ஓரே இடத்தைப் பார்த்தார்கள். அந்த அற்புதமான காட்சி பல காலத்திற்கு மனதை விட்டு விலகாது

எமது படகு செல்லும் இடத்திற்கு சிறிது தூரத்தில் சம்பேசி நதி இரண்டாகி சிறிய தீவை உருவாக்கிவிட்டு கடந்து சென்றது. அந்தத் தீவு மிகவும் பசுமையான சோலை. பலவித மரங்களால் நிறைந்து அரைகிலோ மீட்டருக்கு அந்தத் தீவு தெரிந்தது. நதியின் ஓரு பக்கம் அடர்ந்த காடு. காட்டில் இருந்து தீவுக்கு செல்வதற்கு கொம்பன் யானையொன்று நதியில் மெதுவாக இறங்கியது கண்ணுக்குத் தெரிந்தது. பின்பு பல நிமிடம் தண்ணீருக்குள் மறைந்துவிட்டது. ஆனால், பின்பு இடைக்கிடை தும்பிக்கையின் நுனி மட்டும் காற்றையும் தண்ணீரையும் மத்தாப்புபோல் ஊதிவிட்டு மறைந்துவிடும். இப்படியாக நீந்தி அரைக் கிலோமீட்டர் அகலமான நதியைக் கடந்து அந்தத் தீவில் சென்று பச்சைப் புதர்கள் மத்தியில் மறைந்தது. நாம் சென்ற காலம் கோடைகாலம். அந்தத் தீவில் உள்ள பச்சைத் தளைகளைத் தேடி அவை போயிருக்க வேண்டும். யானைகள் நதியில் நீந்தும் என அறிந்தாலும், யானையின் நீந்தும் ஆற்றலைப் பார்க்க முடிந்தது இதுவே முதல் தடவை. அதைவிட தனது நீளமான தும்பிக்கையை மனிதர்கள் மூங்கில் குழாயை பாவித்ததுபோல் பாவித்தது பரவசமான காட்சி.

யானையின் உறுப்புக்களான நீளமான மூக்கு தும்பிக்கையாகவும் மேல் கடவாய் பல் இரண்டும் தந்தமாகவும் மாறுபட்டதால் யானைகள் தனித்தன்மையானவை. தற்பொழுது அந்த வகுப்பை சேர்ந்த எந்த உயிரினமும் இல்லை. பரிணாமத்தில் யானைகளின் நேரடி உறவான வூலி மமுத் 8000 வருடங்களுக்கு முன்பாக அழிந்துவிட்டது.

யானைகளுக்கு காட்டில் அதிக எதிரிகள் இல்லாததால் அறுபத்தைந்து வருடங்கள் வாழ்கின்றன. நீண்ட காலம் வாழ்வதால் அவற்றின் நினைவுத் திறன் குரங்குகள் மற்றும் மனிதக் குரங்குகளுக்கு ஒப்பானது. உணவு கிடைக்கும் இடங்கள், ஆபத்தான இடங்கள், வறட்சி காலங்கள் மற்றும் பருவகாலங்கள் என்பவற்றை அவை நினைத்து வைத்திருக்கும். இதனது தொடர்ச்சியே யானையை துன்புறுத்தியவர்களை அவை பழிவாங்குதலுமாகும்.

தென்னாபிரிக்க குறுகர் தேசியவனத்தில் முட்கள் கொண்ட அக்காசி மரத்தில், முள்ளுகளை தவிர்த்து, பட்டைகளை உரித்து யானைகள் சாப்பிடுவதைப் பார்த்தேன். நாம் கைகளால் உரித்தால் கூட அவ்வளவு அழகாக உரிக்கமுடியாது. வறட்சியான கோடைகாலத்தில் உணவு குறைந்து போகும். அதனால் இந்த பட்டை உரிப்பு நடக்கிறது. தந்தமும் தும்பிக்கையும் இதற்கு உதவுகிறது

யானைகள் தனது தும்பிக்கையை இரை தேடவும் எதிரிகளிடம் இருந்து தம்மை பாதுகாக்கவும் உபயோகிக்கின்றன. வட்டமான தசைகளாலான இந்தத் தும்பிக்கை மூக்கும் மேலுதடும் சேர்ந்து உருவாகியது. தும்பிக்கையின் உள்ளே இரண்டு முக்குத் துவாரங்கள் அமைந்துள்ளன. அவை பத்து – பன்னிரண்டு லீட்டர் தண்ணீரை உள்ளடக்கும். ஆயிரத்துக்கு மேற்பட்ட தசைகளால், வட்டவடிவமாகவும் ஸ்பிங்கு போலவும் அமைந்து மிகவும் பலத்தைக் கொடுப்பதோடு, தொடுகைக்கு ஏற்ற நுண்ணுர்வையும் அளிக்கிறது. தும்பிக்கையின் உள்ளேயும் நுனியிலும் உள்ள மயிர்கள் இவற்றிற்கு உதவும். அதேபோல் எப்பொழுதும் முனை ஈரலிப்பாக இருப்பதால் அதிக தூரத்தில் இருந்து மணத்தை மோப்பம் அறிந்துகொள்ளும்.

தும்பிக்கை சத்தத்தை எழுப்பும் உறுப்பாகவும் தொழில்படுகிறது. தும்பிக்கையை தூக்கி பிளிறும் சத்தம் நாம் கேட்கக் கூடியது. ஆனால், யானைகள் நாம் கேட்காத அளவில் குறைந்த சத்தம் எழுப்பி தங்களிடையே தகவல்களைப் பரிமாறும். இதைவிட தும்பிக்கைக்கு சேற்றில் இருந்து தண்ணீரை வடிகட்டுதல், சதுப்பு நிலத்தில் நடக்க முடியுமா என அறிதல் முதலான பல பயன்பாடுகளும் உள்ளன.

யானையின் கோரைப் பற்களே தந்தங்களாகின்றன. கடவாய் பற்கள் உணவு உண்ண உதவுகிறது. யானைகளின் வாழ்க்கையில் மூன்றுமுறை பற்கள் விழுந்து முளைக்கும். கடினமான மரங்களையும் அவை தின்பதால் கடவாய் பற்கள் தேய்ந்து போகிறது. முளைக்கும் பற்கள் கடைவாயின் உட்புறத்தில் இருந்து வெளியே தள்ளப்படும். மூன்றாவது முறையாக பற்கள் தேயும்போது அவற்றால் உணவு உண்ணமுடியாது.

காதுகளும் யானைகளுக்கு மிகவும்  முக்கியமானவை. மென்மையான தோல் இருபக்கமும் இருப்பதால் இங்கு ஏராளமான இரத்த குழாய்கள் அமைந்துள்ளன. காதின் தோல் மென்மையாக இருப்பதால் உடல் வெப்பத்தை குளிரப் பண்ணும் ஏர்கண்டிசன் கருவியாக தொழில்படுகிறது. சுளகுபோல் வீசுவதும் அற்காகத்தான். அதிக சூரியஒளியின்போது காதுகள் கருப்புக் கண்ணடிகள்போல கண்ணை மறைத்து பாதுகாக்கும்.

குருகர் தேசியவனத்தூடாக போகும்போது கூட்டம்  கூட்டமாக பாதையில் யானைளை எதிர் கொண்டோம். எமது சாரதி வாகனத்தின் இஞ்சினை அணைத்ததும், அவை வாகனத்தின் அருகாமையில் எதுவித சிரத்தையும் அற்றபடி பார்த்துச் சென்றன. அதனால் அவற்றில் ஆண் பெண் யானைகளை துல்லியமாக அவதானிக்க முடிந்தது. பெண்ணுக்கு பின்கால்களின் இடையில் யானையின் உடல் பருமனுக்கு பொருந்தாத இரு சிறிய முலைகள் இருந்தன. ஆண், பெண் இரண்டிற்கும் தந்தம் உள்ளது. இரண்டு வயதில் வளரும் இந்தத் தந்தம் ஒப்பீட்டு அளவில் பெண்ணுக்கு சிறிது மெலிந்த தோற்றம் கொண்டது.

இந்தியாவில் பெரியார் தேசிய வனத்தில் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆண் யானையை எதிர் கொண்டோம். அப்போது அது எம்மை நோக்கி வந்தபோது சாரதி ஜீப் எஞ்ஜின் சத்தத்தை அதிகமாங்கினார். யானை எமக்கு எதிரே நின்றபடி தும்பிக்கையை உயர்த்தி காதை சுளகுபோல் வீசி எம்மை நோக்கி பிளிறியது. சத்தத்துடன் வாகனம் முன்னேறியபோது அது பின்வாங்கியது. அந்த யானை எமது வாகனத்தை தனது எதிரியாக நினைத்தது தெரிந்தது. ஆனால், குருகர் தேசியவனத்தில் வாகனத்தை நிறுத்தியதும் எம்மைக் கடந்து அமைதியாக சென்றது. அந்த விதத்தில தென் ஆப்பிரிக்காவில் மிருகங்களின் மனநிலையை அறிந்து தொழில்படுகிறார்கள் என்பது புரிந்தது.

யானைகள் குட்டிகளோடு கூட்டமாக பாதையை கடந்து செல்லும் காட்சிகள் அழகானவை. முக்கியமாக கோடைகாலத்தில் அவை நீர்நிலைகளைத் தேடி செல்வதை நாங்கள் சென்றிருந்த கோடைகாலத்தில் அவதானித்தோம்.

அடுத்து எங்களை கவர்ந்தவை ஒட்டக சிவங்கி…

ஆப்பிரிக்காவுக்கு மட்டுமே உரிய மிருகமாக மட்டுமல்லாது சவானாக் காடுகளில் வளரும் முட்களைக் கொண்ட முக்கிய மரமான அக்கேசியாவின் இலையை சாப்பிட்டு உயிர் வாழ்வதற்காக மட்டுமே பரிணாமமெடுத்துள்ள ஒட்டகச்சிவிங்கியை பார்த்தபோது – இவ்வளவு பெரிய உடம்பிற்கு சிறிய தலையிருப்பதென்றால், நிச்சயமாக அதன் புத்தி மட்டமாகத்தான் இருக்கவேண்டுமன்ற நினைப்பே ஆரம்பத்தில் எனது மனதில் ஏற்பட்டது.

குருகர் தேசிய வனத்தில் எமது ஜீப்பை கண்ட ஒவ்வொரு முறையும், அக்காசிய மரங்களின் மேற்பகுதியை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எங்களை அந்த ஒட்டகசிவிங்கி பார்க்கும்போது எனக்கு அன்னியோன்னியமான உணர்வு தோன்றியது. கலர் போட்டோவிற்காக படைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் கொண்டது இந்த சிவிங்கிகள். எங்களைப் பார்த்தபடி நின்று, தம்மை விளம்பர மாடலாக போஸ் கொடுக்கும்.

ஒன்பது உப பிரிவுகளைக்கொண்டவை ஒட்டகசிவிங்கிகள். அவற்றின் தோல் பிரத்தியேக வர்ணத்துடன் இருப்பதுடன் வளரும் போது மாற்றமடையும். அவை புல் மேயாதபடியால் அவற்றுக்கு முன்பற்கள் இல்லை. கிட்டத்தட்ட தாத்தாவின் பொக்கைவாய்தான். கொடுப்பு பல்லுகள் உணவை அரைக்கின்றன. மிகவும் நீளமான நாக்கும் (2 அடி) முன் உதடுகளும் முட்தடிகளை வளைத்து அங்குள்ள இலைகளை மட்டும் நூட்பமாக தின்பதற்கு ஏதுவானவை.

ஓட்டகசிவிங்கியின் தோல் மிகத்தடிப்பானவையாக இருப்பதால் முட்களிடம் இருந்து மட்டுமல்ல உண்ணிகளிடத்திலும் இருந்து பாதுகாப்பை பெறுகின்றன. ஆப்பிரிக்காவில் ஒட்டகசிவிங்கிகளின் உடலில் இருக்கும் உண்ணியை தின்று மட்டும் உயிர்வாழும் பறவை இனம் உள்ளது.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ஆறடிக்கு மேலாக இருக்கும். இவ்வளவு உயரம் இதயத்தில் இருந்து எப்படி இரத்தம் மூளையை நோக்கி பாய்ச்சப்படுகிறது? அதாவது கிணற்றில் இருந்து தண்ணீர் டாங்கிக்கு நீர் அனுப்பும் மோட்டர் பம்பு மாதிரி எதாவது உண்டா என்ற கேள்வி பலகாலமாக மிருக வைத்தியரான எனக்கு எழுந்தது.

மனித இதயத்திலும் பார்க்க இரண்டு தடவை, அதாவது நிமிடத்துக்கு 150 தடவைகள் ஒட்டகச்சிவங்கிகள் இதயம் துடிக்கிறது.நமது இதயத்தில் ஏற்படும் அழுத்தத்திலும் ஆறுமடங்கு அதிக அழுத்தத்துடன் குருதி மேல்நோக்கி தள்ளப்படுகிறது. அதற்கு ஏற்ப இதயத்தின் சுவர்கள் மிகத் தடிப்பான தசையாலானவை. மேலே தலைக்குப் போன இரத்தம் வேகமாகத் திரும்பினால் தலை சுற்றிவிடும். எனவே, இரத்தம் அருவியில் இருந்து தண்ணீர்போல் இறங்காமல் கழுத்து நாளத்தில் வால்வுகள் மெதுவாக ஓடவிடுகின்றனவாம்.

அதேபோல் காலுக்குச் செல்லும் இரத்தமும் வால்வுகள் மூலம் மெதுவாகச் செல்கிறது. இப்படியாக அதிக இரத்த அழுத்தத்துடன் இயங்கினாலும் ஒட்டகசிவிங்கிகளுக்கு இரத்த அழுத்த வியாதியோ அல்லது பக்கவாதமோ வருவதில்லை.

மிருகங்களின் கண்களில் நிறங்களை பகுத்துப் பார்க்கும் தன்மை மிக அரிது. எல்லாவற்றிற்கும் கறுப்பு வெள்ளை சினிமாதான். ஆனால், ஓட்டகசிவங்கி மட்டுமே வானவில்லை பகுத்து நிறத்தைப் பார்க்கும். பெரிதான கண்ணால் முன்புறம் மட்டுமல்ல பின்புறமும் பார்க்கும் வல்லமை அவற்றுக்கு இருப்பதால் வேட்டையாடும் மிருகங்களான சிங்கம், சிறுத்தைகளிடமிருந்து தனது குட்டிகளைப் பாதுகாத்துக்கொள்ளும். ஒரு குட்டி மட்டும் போடும் பெண்சிவிங்கி அவற்றை இரண்டு வருடங்கள் வரை பாதுகாக்கும்.

ஒட்டகசிவிங்கி பின்னங்காலால் விடும் உதையால் சிங்கத்தின் தாடை எலும்பு உடைந்துவிடும். இதனால் வளர்ந்த சிவிங்கிக்கு எதிரிகள் குறைவு. ஆனால், குட்டிகளை சிங்கங்கள், சிறுத்தைகள், காட்டு நாய்கள் தின்றுவிடுகின்றன. 25 வீதமான குட்டிகள் பிழைத்து பெரிதாவதில்லை.

ஒட்டகசிவிங்கிகள் காட்டில் உள்ள நீர்நிலைகளுக்கு பாதுகாப்பின் நிமித்தம் நீர் அருந்த செல்வதும் குறைவு. குனிந்து குடிக்கும்போது ஆபத்தை எதிர் கொள்ளவேண்டிவருமே? ஆனால், அவைகள் உண்ணும் இலைகளில் அதிக நீர்த்தன்மையுள்ளது.

ஒட்டக சிவிங்கிகள் 30 வருடங்கள் வாழ்பவை. நத்தையின் தலையில் உள்ளதுபோல ஓட்டகசிவிங்கியின் தலையில் கொம்புகள் அமைந்துள்ளன. ஆண் சிவிங்கிகள் மற்றைய ஆண் சிவிங்கிகளுடன் மோதுவதற்கு தலையில் அமைந்த இந்த கொம்புகளை சுத்தியலாக உபயோகிக்கும்.

அவற்றின் நீளமான கழுத்துகள் உடலுறவுக்கும் முந்திய உரசல் விளையாட்டிற்கு உதவுகிறது. அவ்வேளையில் ஒன்றை ஒன்று பின்னியபடி இருக்கும். இதைப் போன்று பெண் சிவிங்கிகளை அடைவதற்காக ஆண் சிவிங்கிகள் தங்கள் பலத்தை கழுத்தால் பரீட்சிக்கும். இந்த உடலுறவுக்கான பலப்பரீட்சையில் கொம்புகள் உடைவதும் இரத்தம் சிந்துவதும் நடக்கும். கொம்பால் அடிப்பதிலும் கழுத்தால் கழுத்தை திருகுவதாலும் இளம் ஆண் சிவிங்கிகள் முதிர்ந்த சிவிங்கியால் விரட்டப்படுகின்றன.  பெண் சிவிங்கிகளுக்கும் கொம்பு இருந்தாலும் அவை ஆண்களில் இருந்து சிறிது வித்தியாசப்படும்.

பாதுகாப்புக் காரணங்களால் ஓட்டகசிவங்கிகள் படுத்து உறங்குவது மிகக்குறைவு. நின்றபடி இளைப்பாறுவது வழக்கம். ஆனாலும், தலையை விலாவில் வைத்தபடி இரவிலும் நண்பகலிலும் இரைமீட்பதோடு உறங்கும்.

இப்படியான விசேச தன்மைகளைக் கொண்ட ஓட்டகச்சிவிங்கிகளை ஆப்பிரிக்காவில் கண்ட ஜுலியஸ் சீசரில் தொடங்கி ஐரோப்பியர்கள் வரை, காலம் காலமாக தங்கள் நாடுகளுக்கு கொண்டுவந்து மிருகக்காட்சிசாலை என்ற பெயரில் சிறைவைப்பது நடக்கிறது. அதையே இப்பொழுது எல்லா நாட்டவர்களும் பின்பற்றுகிறார்கள். ஓட்டகசிவிங்கி போன்ற வனவிலங்குகள் எக்காலத்திலும் நகரவாசியாவது முடியுமா?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...