திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கிரிவலப் பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் கால்வாய் அமைந்துள்ள அப்பகுதியில், கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது, பட்டா வழங்கியதை எதிர்த்துதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்” எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மனுதாரர் வழக்கை திரும்பப் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டுவரக்கூடாது: அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்தது போல் மாணவர்கள், பள்ளிக்குள் மொபைல் போன் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டாது. இது தொடர்பாக, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையும் மீறி, யாரேனும் பள்ளிக்கு மொபைல் போனை பள்ளிக்கு கொண்டு வந்தால், அந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதோடு, திருப்பித் தரப்படமாட்டாது” என்று கூறினார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ம் தேதி (வியாழன்) சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இதுபற்றி விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் அதிமுக தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் 150 பேர் பங்கேற்றனர்.
மொத்த விலை பணவீக்கம் உயர்வு
மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 15.88-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த அளவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விலைப் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 12.96 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 13.11 சதவீதமாகவும், மார்ச் மாதம் 14.55 சதவீதமாகவும், ஏப்ரல் மாதம் 15.08 சதவீதமாகவும் உயர்ந்தது. பின் கடந்த மே மாதம் 15.88-ஆக அதிகரித்துள்ளது.