No menu items!

மிஸ் ரகசியா – ஆளுநரின் டெல்லி பயணம் ஏன்?

மிஸ் ரகசியா – ஆளுநரின் டெல்லி பயணம் ஏன்?

“என்ன ஆபீஸ்ல சேரெல்லாம் இடம் மாறிக் கிடக்குது” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ரகசியா.

“எங்களால சேரைத்தானே மாத்த முடியும். அரசு அதிகாரிகளையா மாத்த முடியும்” என்றோம்.

“ஓ.. ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தைப் பத்திச் சொல்றீங்களா? அதைப் பத்தித்தான் உங்கள் செய்தியாளர் தனியாவே ஒரு கட்டுரை தந்திருக்காரே. நான் வேற தரணுமா?”

“ஆமா, அவசரமா ஆளுநர் டெல்லி கிளம்பி போயிருக்காரே என்ன காரணம்?

ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும் அவருக்கும் முட்டிக்கிட்டு இருக்கிற நேரத்துல டெல்லி போகிறாரே?”

“கவர்னர் மாளிகைல விசாரிச்சேன். ஆளுநர் டெல்லில முக்கியமானவங்க யாரையும் சந்திக்கல. டெல்லிலருந்து பீகாருக்கு போறார். அங்க அவருக்கு தனிப்பட்ட வேலை இருக்கு முடிச்சுட்டு டெல்லி வழியா சென்னை திரும்புறாருனு சொல்றாங்க. ஆனால் கவர்னர் தரப்பு தகவலை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க”

“அவங்க சொல்றதை எப்படி நம்ப முடியும்? டெல்லிக்கு சும்மாவா போவார்?”

“கரெக்ட். ஆளுநர் ரெண்டு விஷயமா டெல்லி போயிருக்கார்னு சொல்றாங்க. சமீபமா மதுரை ஆதீனத்துக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மோதல் இருக்கு. டெல்லில பிரதமரை சந்திக்கணும்னு மதுரை ஆதீனம் கேட்டிருக்காரு. அந்த சந்திப்பை ஏற்படுத்துறதுக்காக ஆளுநர் டெல்லி போயிருக்காராம். மதுரை ஆதீனம் மட்டும் தனியா வந்தா நல்லா இருக்காது அதனால மற்ற ஆன்மீக தலைவர்களையும் அழைச்சுட்டு வர சொல்லியிருக்கார் ஆளுநர். காஞ்சி மடத்துல கேட்டிருக்காங்க. ஆனால் இதுல அரசியல் இருக்குனு தெரிஞ்சிக்கிட்ட சங்கராச்சாரியார் நைசா மறுத்துட்டாராம். பிரதமர் – மதுரை ஆதீனம் சந்திப்பு ஆளுநர் மூலம் நடக்கலாம்”

”ரெண்டு விஷயம்னு சொன்னே?”

“அவசரப்படாதிங்க, வரேன். தமிழக அமைச்சர் ஒருத்தரை நான் டிஸ்மிஸ் பண்ணட்டுமானு ஆலோசனை கேட்கவும் டெல்லி போயிருக்காருனும் சொல்றாங்க”

“அமைச்சரை கவர்னர் டிஸ்மிஸ் பண்ணுவாரா?”

“அதிர்ச்சியா இருக்குல. அப்படிதான் சொல்றாங்க. ஏதோ ஒரு அமைச்சரோட ஃபைல்ஸ் ஆளுநர் கிட்ட வந்திருக்கு. அந்த ஆதாரங்களின் அடிப்படையில நான் டிஸ்மிஸ் பண்றேன்னு சொல்லியிருக்கார். ஆனால் டெல்லிலருந்து இன்னும் அனுமதி கிடைக்கலயாம்”

”வரப்போற நாட்கள்ல ஆளுநர் – அரசு மோதல் அதிகரிக்கும்னு சொல்லு”

“ஆமாம். நிச்சயமா. முதல்வரும் இறங்கி வர விரும்பவில்லை. மாநில சுயாட்சினு பேசுற கட்சி, ஆளுநருக்கு பயப்படுறதானு கேட்கிறாராம். ஆனா கட்சில சிலர் ஆளுநர்கிட்ட ஏன் இத்தனை மோதல், சுமூகமாக போலாமேனு மனசுக்குள்ளேயே தவிச்சுக்கிட்டு இருக்காங்களாம். முக்கியமா அமைச்சர்கள் சிலர் ஆளுநர்கிட்ட மோதுறத விரும்பலையாம்”

“ஏற்கனவே அமைச்சரவை மாற்றம் வருமானு கலக்கம் அமைச்சர்கள்கிட்ட இருக்கும். இப்ப ஆளுநர் கவலை வேறயா?”

“உண்மைதான். அமைச்சரவை மாற்றம் வந்தா பதவி போயிடுமோன்ற அச்சம் அமைச்சர்கள்கிட்ட இருக்கு. பதவியைக் காப்பாத்த என்ன செய்யலாம்னு அவங்க யோசிச்சிட்டு இருக்காங்க. இதுல ஒரு அம்சமா தங்கள் மாவட்டத்துல கருணாநிதி சிலையை அமைச்சு, அதை முதல்வரை வச்சு திறந்து வைக்கலாம்னு திட்டம் போட்டிருக்காங்க. இதுக்காக எல்லா மாவட்டங்கள்லயும் இடத்தை தேர்ந்தெடுக்கற வேலை ஜரூரா நடந்துட்டு இருக்கு. திருவண்ணாமலை மாவட்டத்துல ஒரு இடத்துல சிலை திறக்க நாளெல்லாம் குறிச்சாங்க. ஆனால் அதுக்கு அப்புறம் அந்த இடத்துல சிலை வைக்கிறத எதிர்த்து ஒருத்தர் வழக்கு தொடர, அந்த மாவட்ட அமைச்சருக்கு பிரச்சினை ஆயிடுச்சு. அதனால இனி சிலை வைக்கறத்துக்கு முன்னாடி, அந்த இடத்துல எந்த வில்லங்கமும் இல்லாத மாதிரி பாத்துக்கணும்னு அமைச்சர்களுக்கு கட்சித் தலைமையில இருந்து உத்தரவு போயிருக்கு.”

“ஜனாதிபதி தேர்தல் விஷயத்துல திமுக என்ன முடிவெடுக்கப் போகுதாம்?”

“திமுக ரொம்ப அடக்கி வாசிக்குது. முதல்வர் மனசுல ஒரு ஆண், ஒரு பெண்ணுனு ரெண்டு பெயர் இருக்காம். எதிர்க் கட்சிகளுடன் பேசும்போது அந்தப் பெயர்களை சொல்லலாம்னு இருக்கார்”

“யாரு அந்த ரெண்டு பேர்?”

“திமுக வட்டாரத்துல விசாரிச்சிருக்கேன். ரொம்ப ரகசியமா வச்சிருக்காங்க. இப்பவே வெளில சொன்னா வேற பிரச்சினைகள் வரும்னு முதல்வர் நினைக்கிறாராம். எதிர்க் கட்சிகள் நல்ல பெயரை முன் மொழிந்தா அவரையே ஏத்துக்கலாம், இந்த ரெண்டு பெயரை சொல்ல வேண்டாம்னும் நினைக்கிறாராம்”

“வெங்கையா நாயுடுக்கு திமுக ஆதரவு கொடுக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தியே”

“இப்பவும் அப்படிதான். பாஜக தரப்புல வெங்கய்யா நாயுடுவை வேட்பாளரா அறிவிச்சா அவருக்கு திமுக ஆதரவு கொடுக்க தயாரா இருக்காங்க. அப்படி இல்லாட்டி காங்கிரஸ் எடுக்கற ரூட்லதான் திமுகவோட பயணம் இருக்கும். வெங்கையா நாயுடு இப்பவே ஜனாதிபதி தோரணைக்கு வந்துட்டார். ஆனாலும் பாஜகவுல சில கோஷ்டிகளுக்கு அவரை பிடிக்கல. இவர் ஏற்கனவே ஒரு பதவியை அனுபவிச்சிட்டார். திரும்பவும் அவருக்கே பதவியான்ற கேள்வி எழுந்துருக்கு”

“சரி, பாஜக தரப்பு செய்திகள் வேறு ஏதாவது இருக்கா?”

“திமுகவுக்கு கடிவாளம் போடறதுல நாங்கதான் நம்பர் 1 எதிர்கட்சின்னு நிரூபிக்கறதுல பாஜக தீவிரமா இருக்காங்க. அதே நேரத்துல அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜக ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கிற 25 தொகுதிகளைக் கண்டறிஞ்சு அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி கமலாலய நிர்வாகிகளுக்கு பாஜக தேசிய தலைமைகிட்ட இருந்து உத்தரவு போயிருக்கு. கூடவே விவரங்களைச் சேகரிக்க பக்கத்து மாநிலத்துல இருந்து தொழில்நுட்ப குழுவையும் அனுப்பி இருந்தாங்களாம். இதைத்தொடர்ந்து முதல் கட்டமா வேலூர், ஈரோடு, கோயம்புத்தூர், தென்சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 தொகுதிகளைக் கண்டறிஞ்சு தேசிய தலைமைக்கு அவங்க அறிக்கை தாக்கல் செஞ்சிருக்காங்க. மத்த தொகுதிகளை அடையாளம் காணற வேலைகள் நடந்துட்டு இருக்கு.”

”25 தொகுதில ஜெயிக்க முடியும்னு நிஜமாவே பாஜக நம்புதா? ஆனா அதிமுகதான் முக்கிய எதிர்கட்சின்னு ஓபிஎஸ் குரல் கொடுத்திருக்காரே? அவங்க இல்லாமா பாஜகவால ஓட்டு வாங்க முடியுமா”

“ஓபிஎஸ் அப்படி தனியா அறிக்கை வெளியிட்டதை எடப்பாடியார் ரசிக்கலையாம். என்கிட்ட ஆலோசிக்காம அவர் மட்டும் எப்படி தனியா அறிக்கை விடலாம்னு அவர் சத்தம் போட்டதா அதிமுக வட்டாரத்துல சொல்றாங்க.”

”அதிமுக பொதுக்குழு வேற நடக்கப் போகுது. இப்போதே கட்சிக்குள்ள மோதல்னு செய்தி வருதே”

”ஆமா, பொதுக்குழு குறித்த நடந்த ஆலோசனைக் கூட்டத்துலயே மோதல் தெரிஞ்சிருச்சு. ஆலோசனைக் கூட்டம் நடக்கும்போது வெளில ‘ஒற்றைத் தலைமை வேண்டும்”னு ஒரு கூட்டம் கோஷம் போட்டுக்கிட்டு இருந்தது. ஆனால் இப்போதைக்கு அதிமுகவுல எடப்பாடி கைதான் ஓங்கியிருக்கு”

“கைனதும் ஞாபகத்துக்கு வருது. அமலாக்கத் துறை விசாரணைல ராகுல் சிக்கியிருக்கிறாரே?”

“நேஷனல் ஹெரால்ட் வழக்கு அவஙகளை சுத்திக்கிட்டு இருக்கு. ராகுல் விசாரணைக்கு வந்தது காங்கிரஸ்காரங்கள ஒண்ணு சேர ஒரு வாய்ப்பா அமைஞ்சிடுச்சு. விசாரணைக்கு கூப்பிட்டிருக்கக் கூடாதுனு பாஜககாரங்களே பேசிக்கிறாங்க”

“கரெக்ட்தான். ரொம்ப நாள் கழிச்சு காங்கிரஸ்காரங்க தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தியிருக்காங்க. ஒற்றுமையா வேற வந்துருக்காங்க”

“ஒற்றுமையா? இன்னும் காங்கிரஸ் அப்படியே கோஷ்டிகளோடுதான் இருக்கு. இத கேளுங்க… தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேத்து ரொம்ப காலம் ஆச்சு. சீக்கிரம் புது தலைவர் வரப்போகிறார்னு யாரோ வதந்தியை கிளப்பி விட, பல பேர் தலைவர் பதவிக்காக டெல்லியில லாபி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா டெல்லியில இருக்கிற முக்கிய தலைவர் ஒருத்தர் இப்போதைக்கு அழகிரியை மாத்த மாட்டாங்கன்னு தெளிவா சொல்லிட்டாரம். கட்சித் தலைமையோட மனம் கோணாம நடந்துக்கறதால அழகிரிக்கு இப்ப டெல்லியில செல்வாக்கு அதிகமாம்.”

“அப்ப கொஞ்ச நாளைக்கு லாபி எதுவும் இருக்காதுன்னு சொல்லு.”

”சரி, கடைசியா ஒரு நியூஸ் சொல்றேன். ஷாக்காயிடுவிங்க”

“என்னது?”

”ஜனாதிபதி வேட்பாளர் பெயர்கள்ல ஜக்கி வாசுதேவ் பெயரும் இருக்கு” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...