No menu items!

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் எப்படியிருக்கிறார்கள்?

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் எப்படியிருக்கிறார்கள்?

ரஷ்ய போரால் உக்ரைனில் திடீரென ஆபத்தில் மாட்டிக்கொண்ட இந்திய மருத்துவ மாணவர்கள் 16 ஆயிரம் பேர் கடந்த பிப்ரவரியில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 1,896 மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சில நாட்களில் முடிந்துவிடும் எனக் கருதப்பட்ட போர் மாதக் கணக்காக நீண்டுகொண்டே செல்வதால் இந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது. இம்மாணவர்கள் உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்டபோது, அவர்களின் படிப்பு தொடர வழி செய்வதாக உறுதியளித்த மத்திய, மாநில அரசுகள் அதற்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? உக்ரைன் பல்கலைக்கழகங்கள் என்ன சொல்கின்றன?

உக்ரேனில் படித்த சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவி கிருஷ்ணவேணியுடன் பேசினோம்.

“இந்தியாவில் மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள், உக்ரைன், ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர். அங்கு மருத்துவம் படிக்க எளிதாக ‘சீட்’ கிடைப்பதோடு நம் நாட்டை ஒப்பிடும்போது கல்விக் கட்டணமும் குறைவாக இருக்கிறது. இதில், உக்ரைனில்தான் அதிக இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.

நான் உக்ரைனில் லிவீவ் நகரத்தில் படித்தேன். இது மேற்கு உக்ரைனில் உள்ளது. நம் நாட்டில் மருத்துவம் படிக்க கோடிக் கணக்கில் செலவாகும் என்பதாலும், நீட் என்ற நுழைவுத் தேர்வு ஓட்டப் பந்தயத்தில் ஓடி வெற்றிபெற முடியாது என்று கருதியும்தான் நான் உக்ரைன் சென்றேன். ஆனால், அங்கே சென்ற பின்னர் அந்த சூழல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அங்கே மருத்துவம் என்பது எல்லா தொழில்ளையும் போல் ஒரு தொழில் அவ்வளவுதான். எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக டாக்டர்கள் வாடகை டாக்ஸி ஓட்டுவதை அங்கே சாதாரணமாக பார்க்கலாம். நம ஊர் மாதிரி டாக்டர் படிப்பை அதிக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அவர்கள் பார்ப்பதில்லை. எனவே, தற்செயலாக உக்ரைன் சென்றாலும் இந்த வாய்ப்பை என் வாழ்க்கையின் சிறந்த ஒரு முடிவாக நான் நினைத்திருந்தேன்.

இந்நிலையில்தான் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. நான் வசித்த லிவீவ் நகரத்தில் குண்டு வீச்சு அதிகம் இல்லை. ஆனாலும், போர் தொடங்கியதும் நமது அரசு கேட்டுக்கொண்டதால் லிவீவ் நகரத்தில் இருந்த இந்திய மருத்துவ மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பிவிட்டோம்.

கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் நாடு திரும்பினோம். அப்போது எல்லோரையும் போல் சில நாட்களில் போர் முடிந்துவிடும்; விரைவில் மீண்டும் உக்ரைன் திரும்பி படிப்பை தொடரலாம் என்றுதான் நான் உட்பட என சக மாணவர்கள் எல்லோரும் கருதினோம். நாங்கள் வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. போர் முடிவது போல் தெரியவில்லை.

எங்களை உக்ரைனில் இருந்து அழைத்து வந்தபோது எங்கள் படிப்பு தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன. தற்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை. எங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்றால் அது ஒன்றிய அரசால்தான் முடியும்; மாநில அரசின் அதிகாரம் இதில் மட்டுப்படுத்தப்பட்டதுதான்.

உதாரணமாக, உக்ரைனில் இருந்து மேற்கு வங்கம் திரும்பிய 412 மாணவர்களுக்கு அம்மாநில கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

ஆனால், மாநில அரசின் இந்த அறிவிப்பு, ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMC) வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போவதில்லை என்பதால் அனுமதிக்க முடியாது என என்எம்சி தெரிவித்துவிட்டது.

மேலும், ‘‘உக்ரைன் மருத்துவ மாணவர்கள் தொடர்பான எந்தவொரு முடிவும், என்எம்சியிடம் இருந்து மட்டுமே வர வேண்டும். மேற்கு வங்கம் திரும்பிய உக்ரைன் மாணவர்கள், அரசு கல்லூரி செய்முறை வகுப்பில் கலந்துகொண்டால், அவர்கள் FMGE தேர்வு எழுத தகுதியற்றவர்கள் ஆவர்” என்று என்எம்சி உறுதியாக கூறிவிட்டது.

அதன்பின்னர் என்எம்சியும் இந்த விவகாரத்தில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. உக்ரைனிலிருந்து திரும்பியவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் படிப்பை தொடர்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்கள். ஆனால், அப்படியும் எதுவும் இதுவரை நடக்கவில்லை.

உக்ரைனில் மருத்துவம் 6 ஆண்டு படிப்பாகும். இதில் இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் இந்தியாவில் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, இறுதியாண்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்போடு மருத்துவப் பயிற்சியும் மேற்கொண்டுள்ளதால் குறித்த காலத்தில் அவர்கள் படிப்பை முடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், முதலாமாண்டு முதல் ஐந்தாமாண்டு வரை படித்த மாணவர்களின் நிலைதான் கேள்விக்குறியாகிவிட்டது.

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடரலாம் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதரக அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால், ரஷ்யாவில் படிப்பது பாதுகாப்பில்லை என பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். அதேநேரம், ஹங்கேரி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று படிப்பை தொடர பெரும்பாலோர் விரும்புகிறார்கள். ஆஸ்திரேலியா ஓப்பன் விசா கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், அதற்கு என்எம்சி, தடையில்லா சான்றிதழ் தர மறுத்து அலைகழிக்கிறார்கள்.

இப்படி அவர்களாகவும் எதுவும் செய்வதில்லை, நாங்களாக எதாவது வழி ஏற்படுத்திக்கொள்ளவும் அனுமதிப்பதில்லை என்னும் நிலையால் பல மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கம்போல் நீதிமன்றம் சாட்டையை சுழற்றி எதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு.

ஒரு அதிசயம் நடந்து, உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பைத் தொடர நமது பிரதமர் மோடி வகை செய்வார் என எங்கள் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. சுமார் 90,000 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளது. அதில் கிட்டதட்ட 12 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்வது என்பது சாத்தியமில்லை. எனவே, உக்ரைனிலேயே படிப்பை தொடர சாத்தியமான வழிகள் பற்றிதான் நான் ஆராய்ந்து வருகிறேன்.
நான் தற்போது இரண்டாமாண்டு படிக்கிறேன். மூன்றாம் ஆண்டுக்கான கட்டணத்தை செப்டம்பரில் கட்ட வேண்டும். அதற்குள் போர் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

தற்போது உக்ரைனில் பங்கரில் இருந்து ஆன்லைனில் எங்கள் பேராசிரியர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். “போர் முடியாவிட்டாலும் பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு மாற்றி வகுப்புகளை தொடர திட்டமிட்டுள்ளோம். எனவே, விரைவில் நேரடி வகுப்புகளில் நாம் சந்திக்கும் வாய்ப்பு அமையும்” என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதில் நாங்கள் கலந்துகொள்ள என்எம்சி தடையில்லா சான்றிதழ் தரவேண்டும். எனவே, இது தொடர்பாகவும் நிறைய மாணவர்கள் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்கிறார் உறுதியுடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...