தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து கன்னட மொழியில் உருவாகி வரும் படம் ‘அரபி’. இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.
இது குறித்து படக்குழு தனது சமூக வலைத்தளத்தில், முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலை மற்றும் பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷ் கே.எஸ்ஸை முதன் முதலாக திரையில் பார்க்க ஒரு வாய்ப்பு என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அண்ணாமலை சினிமாவில் புதிய அவதாரம் எடுத்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள் இந்த படத்தின் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
குறையும் தமிழக மாணவர்கள் கற்றல் திறன் – ஆய்வில் தகவல்
பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கணிதப் பயன்பாடு, வரலாற்றுச் சின்னங்களை வரைபடத்தில் (மேப்) கண்டறிவது, கட்டுமான மாதிரிகளை அடையாளம் காண்பது, ஓர் அறிவியல் விதியை விளக்குவது ஆகியன 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் திறனாக அறியப்படுகிறது. இது தொடர்பான, தேசிய திறன் மேம்பாட்டு ஆய்வு (2021) அறிக்கையின்படி, கற்றல் திறனில் தேசிய சராசரியைவிட தமிழக பள்ளி மாணவர்களின் திறன் சராசரி மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
2017 ஆய்வுடன் ஒப்பிடும்போது 2021 ஆய்வில் தமிழக மாணவர்களின் திறன் குறைந்துள்ளது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் மேற்கு வங்க பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அனைத்து வகுப்புகளிலுமே தேசிய சராசரியைவிட அதிகமாக இருக்கிறது.
சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர்
இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதையான கீதாஞ்சலி ஸ்ரீயின் ‘ரெட் சமாதி’ (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘டூம் ஆஃப் சாண்ட்’க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 50,000 பவுண்ட் பரிசுத் தொகையும் அடங்கியது.
இலக்கிய துறையில் தீவிரமாக இயங்கி வருபவர் கீதாஞ்சலி ஸ்ரீ. அவரது ‘மாய்’ (Mai), ‘ ஹமாரா ஷாஹர் அஸ் பராஸ்’ (Hamara Shahar Us Baras) புத்தகங்கள் 1990களில் வெளியாகின. அதன்பின்னர், ‘திரோஹித்’, ‘காளி ஜகா’ (khali jagah) நூல்களும் வெளியாகின. நாவல்கள் மட்டுமல்லால் பல்வேறு சிறுகதைகளையும் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதியுள்ளார். அவருடைய ‘மாய்’ புத்தகம் ‘க்ராஸ்வார்ட்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ள 18 பேரில் 6 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இவர்கள் மூவரும் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விடுவிப்பு
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகு அவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருந்து ஆர்யன் கான் மற்றும் 5 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) விடுவித்துள்ளது.
இந்த வழக்கில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6,000 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆர்யன் கான் குற்றவாளி என பெயரிடப்படவில்லை. இது தொடர்பாக, “போதிய ஆதாரம் இல்லாததால் கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை” என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
நன்றி தமிழ்நாடு; நேற்றைய வருகை மறக்க முடியாதது: பிரதமர் மோடி ட்வீட்
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழ் நாட்டிற்கு நேற்று வருகை தந்திருந்தார். இந்த வருகை தொடர்பாக “நன்றி தமிழ்நாடு; நேற்றைய வருகை மறக்க முடியாதது” என்று இன்று ட்விட்டரில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ள மோடி, நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என குறிப்பிட்டு 2.07 நிமிட வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் தமிழக வருகை குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகம் பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகிறது. பிரதமர் மோடி மீது அன்பும் பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது” என தெரிவித்ததுடன், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை குறித்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.