No menu items!

மிஸ் ரகசியா – பாஜகவின் உச்சமுனை தீவு கணக்கு

மிஸ் ரகசியா – பாஜகவின் உச்சமுனை தீவு கணக்கு

மோடி ஸ்டைலில் வணக்கம் சொல்லி அலுவலகத்துக்குள் நுழைந்தார் ரகசியா.

 “பிரதமர் சென்னை வந்தது பற்றி சொல்லப் போறன்றது தெரியுது. அண்ணாமலை ரொம்ப சூடா ப்ரஸ் மீட்ல பேசியிருக்கிறாரே”  என்றவாறு அவரை வரவேற்றோம்.

“ஆனா அந்த பிரஸ் மீட்டை காமெடியாக்கிட்டாங்க திமுககாரங்க. அவர் பேசும் போது திமுகவும் பாஜகவும் 360 டிகிரி எதிரிகள்னு குறிப்பிட்டார். 360 டிகிரின்றது முழு வட்டம் இணையும் இடம். 180 டிகிரினாதான் எதிர் எதிர் துருவம். இது கூட தெரியாம எப்படி ஐபிஎஸ் பாஸ் பண்ணாருனு சோஷியல் மீடியாவுல கிண்டல் அடிச்சிக்கிட்டு இருக்காங்க”

“சோஷியல் மீடியாவுல கிண்டலடிக்கிறது இருக்கட்டும். பிரதமர் விசிட்ல என்ன நியூஸ்?”

 “ பிரதமரின் வருகையின் போது திமுகவினர் மாஸ் காட்டியதை பாஜகவினர் ரசிக்கவில்லை. முதல்வரும் பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டே மத்திய அரசை விமர்சித்து பேசினதை சுத்தமா ரசிக்கல. ஸ்டாலின் முதல்வரான பிறகு முதல் முறையாக பிரதமருடன் மேடையேறியிருக்கிறார், முதல் நிகழ்விலேயே இப்படி பேச வேண்டுமா என்று பாஜகவினர் கேட்கிறார்கள்.   இந்த மாஸும் பேச்சும் தமிழக பாஜகவிலிருக்கும் அண்ணாமலை கோஷ்டியை எரிச்சலடைய வச்சிருக்கு. அவர் பெரிய ஏற்பாடுகள் பண்ணியிருந்தாரு.   வழிநெடுக பாஜக தொண்டர்கள், பல இடங்களில் பூரண கும்ப மரியாதை, செண்டை மேளங்கள் என்று மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் அண்ணாமலை. ஆனால் விழாவில் திமுகவினர் பாஜகவை முந்திவிட்டனர்.  ஆனால் விஷயம் இதுவல்ல. பாஜகவுல மோடி ஆதரவாளர்கள் யாரும் அண்ணாமலையோட செயல்பாடுகளை ரசிக்கிறதில்லை”

“பாஜகவுல எல்லோருமே மோடி ஆதரவாளர்கள்தானே. அதில பிரிவு இருக்கா?”

“ஆமா. அண்ணாமலை அமித் ஷா ஆதரவாளர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல அமித்ஷாதான் பிரதமர் வேட்பாளர். ஆனால் அதுவரைக்கும் ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு மோடிக்கு இருக்கு. அதற்கு நட்புடனான குடியரசுத் தலைவர் தேவை. அதற்கான முயற்சிகள்ல மோடி இறங்கியிருக்கார். குடியரசுத் தலைவர் தேர்தல்ல திமுக ஆதரவு கிடைச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறார். அதற்காக திமுகவுக்கு வெள்ளைக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் சென்னை விழாவில் முதல்வர் ஸ்டாலினை கனிவுடன் கவனித்துக் கொண்டார். ஆனால் அண்ணாமலை கடுமையாக திமுகவை எதிர்ப்பதை மோடி ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை.”

“ஆனா, அண்ணாமலை மேலிட ஆதரவு இல்லாம இத்தனை காட்டமா எதிர்ப்பாரா?”

“உண்மைதான். ஒரு பக்க ஆதரவு இருக்கு. அவரை ராஜ்ய சபா எம்.பி ஆக்கி தமிழ்நாட்டுலருந்து டெல்லி அரசியலுக்கு மாத்திடலாமனு கூட யோசனை பாஜகவிடம் இருக்கிறது”

“அப்படியா? அமித்ஷா ஆதரவுல இருக்கிறவரை அப்படி அனுப்ப இயலுமா? சரி, திடீர்னு கச்சத் தீவு பிரச்சினை அதிகமா பேசப்படுதே?”

“ஆமா, கச்சத் தீவை 99 வருஷ குத்தகைக்கு எடுக்கலாம்னு ஒரு யோசனை இருக்கு. கச்சத் தீவை மீட்டால் பாஜகவுக்கும் தமிழ்நாட்டுல ப்ளஸ்ஸாக இருக்கும்னு பாஜக நினைக்கிறது. இலங்கையோட உச்சமுனை தீவை ஸ்விட்சர்லாந்துக்கு குத்தகைக்கு கொடுத்திருக்கு. அதே மாதிரி கச்சத் தீவையும் வாங்கலாம்னு நினைக்கிறாங்க. அதனாலதான் பாஜக இந்த நடவடிக்கைகளை எடுக்கிறதுக்கு முன்னால பிரதமரிடமே கோரிக்கை வைத்தார் முதல்வர் முதல்வர் ஸ்டாலின். நாளைக்கு கச்சத் தீவு கைக்கு வந்தால் கோரிக்கை வைத்தோம் என்று சொல்லலாம் அல்லவா?”

“நல்ல ஐடியாதான். ஆமா, அதிமுக ஒருவழியாக 2 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களே?”

 “கடைசி நேரம் வரை இழுபறி நீடித்துள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு இடத்தை கொடுக்காமல் தனது ஆதரவாளர்களுக்கு 2 இடங்களையும் ஒதுக்க கடைசிவரை முயன்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரோட சாய்ஸ் சி.வி.சண்முகமும், ஜெயக்குமாரும். ஆனால் ஓபிஎஸ் பிடிவாதமாக இருந்து தனது ஆதரவாளரான முதுகுளத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் தர்மரை ஒரு வேட்பாளர் ஆக்கிவிட்டார்.  இதைத்தொடர்ந்து தனது கோட்டாவில் சி.வி.சண்முகத்தை எடப்பாடி வேட்பாளராக்கியுள்ளார். தர்மருக்கு பதவி கிடைச்சதில திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்குதான் வருத்தம். அவருக்கும் தர்மருக்கும் ஏற்கனவே பெரிய பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு. சாதியை சொல்லி திட்டுனாருனு ராஜகண்ணப்பன் மேல புகார் வந்து இலாகா மாற்றப்பட்டதற்கு பின்னணில தர்மர் இருக்கிறாராம். இப்போது எம்.பி.யா கூடுதல் அதிகாரம் வந்துட்டதுனால முதுகுளத்தூர் பகுதில தர்மர் இன்னும் அதிகமா ஆதிக்கம் செலுத்துவார்னு ராஜகண்ணப்பன் கவலைப்படுறாராம்”

 “ஜெயக்குமார் ரொம்ப அப்செட்னு சொன்னாங்களே”

 “இல்லாமல் இருக்குமா? உள்ளாட்சித் தேர்தலின்போது கட்சிக்காக போராடி சிறைக்குச் சென்ற தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று டி.ஜெயக்குமார் நினைத்திருந்தார். இப்போது பதவி இல்லை என்றதும் அப்செட்டில் இருக்கிறார். அதேபோல் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான ராஜன் செல்லப்பா, தனது மகனுக்கு எம்.பி.பதவி கிடைக்க ஓபிஎஸ் சிபாரிசு செய்வார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் அப்படி செய்யாததால் ராஜன் செல்லப்பாவும் அப்செட்டில் இருக்கிறாராம்.”

 “வைகோவும் முதல்வர் ஸ்டாலினும் செல்போனில் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்ததாக தகவல் வந்ததே?”

 “ ஆமாம். வைகோவின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் அப்போது விசாரித்துள்ளார். பின்னர் மதிமுக மூத்த  நிர்வாகிகளிடம் திமுக முன்னணி தலைவர்கள்  தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். ‘உடல்நிலை சரியில்லாத வைகோ இன்னும் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்? பேசாமல் மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடச் சொல்லுங்கள். கட்சியில் அவருக்கு உரிய மரியாதையை செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்கள். அதை மதிமுகவினர் வைகோவிடமும் சொல்லியிருக்கிறார்கள். வைகோ என்ன முடிவெடுப்பார் என்று தெரியவில்லை”

 “வைகோவைப் பற்றிச் சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. விஜயகாந்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது?”

 “உடல்நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால மனசுதான் சரியில்லை என்கிறார்கள்? தனது மனைவி பிரேமலதாவுக்கும், மைத்துனர் சுதீஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் இருக்கிறாராம் விஜயகாந்த்.”

 “பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறதே?”

 “அன்புமணிக்கு இந்த பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக பட்டம் சூட்டப்படலாம் என்கிறார்கள். இதுவரை அப்பதவியில் இருந்த ஜி.கே.மணிக்கு மரியாதையான மற்றொரு பதவியைக் கொடுக்கவும் ராமதாஸ் யோசித்து வருகிறார். சமீப காலமாக ராமதாஸின் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்பு வருகிறது. அதனால் தான் ஓய்வு எடுப்பதற்காக அவர் இந்த முடிவை எடுக்கிறாராம்.”

”மதுரைல சாமியார்கள் மாநாடுனு செய்தி வந்திருக்கே அது என்னது? உபிலதானே இது மாதிரியான மாநாடுலாம் நடக்கும்?”

“விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாட்டுல சாமியார்கள் மாநாட்டை நடத்த இருக்கிறது. ஜூன் 4, 5ல இந்த மாநாடு நடக்கப் போகுது. வட மாநிலங்கள்ல இந்த மாநாடு நடக்கும்போது கடுமையான கருத்தக்கள் வெளியிடப்படும். அது பல முறை சர்ச்சையாகியிருக்கிறது. மதுரைல என்ன நடக்கப் போகுதோன்ற அச்சம் இருக்கு”

“அரசு அனுமதி தந்திருக்கும்ல?”

“அனுமதி மறுத்தா அதுவே அரசியலாகிடும். இந்து அறநிலையத் துறையின் கீழ் கோயில்களை வைக்க கூடாது. அறநிலையத் துறை அரசின் கீழ் இயங்கக் கூடாதுனு தீர்மானம் போடப் போறாங்க. ஏற்கனவே கருணாநிதி, ஜெயலலிதா ஆண்ட காலங்களிலும் இது போன்ற துறவிகள் மாநாடு நடந்திருக்கு. ஆனா அப்ப இருந்த சூழல் வேற இப்ப உள்ள சூழல் வேற. அதனால அரசு உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருக்கு”

”திடீர்னு சென்னை கலெக்டர் மாற்றப்பட்டிருக்கிறாரே? பணிக்கு வந்து ஒரு வருஷம் கூட ஆகலையே”

”ஆமா, சமீபத்துல கிண்டில இருக்கிற அரசு அலுவலகத்துக்கு ஆய்வு செய்தார் முதல்வர். அப்போ அங்க சில குறைபாடுகளை கண்டுபிடித்திருக்கிறார். அது கலெக்டர் அலுவலகம் தொடர்புடையது. அதோட ரியாக்‌ஷன் தான் இந்த மாற்றம்”

“அதிகாரிகள்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்”

“ஆமா, அதிகாரிகள் மட்டுமில்ல, அமைச்சர்களும் ஜாக்கிரதையா இருக்கணும்”

“ஏன் என்ன விஷயம்?” ஆவலாய் கேட்டோம்.

“இன்னும் கொஞ்சம் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு அடுத்த வாரம் சொல்றேன்” என்று கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...