No menu items!

தென் ஆப்பிரிக்கா பயணத்தில் ஒர் அழகி – நோயல் நடேசன்

தென் ஆப்பிரிக்கா பயணத்தில் ஒர் அழகி – நோயல் நடேசன்

தென் ஆப்பிரிக்க பயணம் என்பது என் வெகுகால கனவு. மிருக வைத்திய மாநாடு ஒன்றின் மூலம் இது சமீபத்தில் சாத்தியமாகியது. தென் ஆப்பிரிக்கா என்றவுடன் நெல்சன் மண்டேலாவும் ஆப்பிரிக்க மிருகங்களும் சாதாரணமாக எவருக்கும் மனதில் வரும். இவற்றிற்கும் அப்பால் இந்திய, இலங்கை நாட்டவர்களுக்கு காந்தியை மகாத்மாவாக்கிய நாடு என்பது மறுக்க முடியாதது.

இதற்கும் மேலாக எனக்கு நினைவு வருவது மனித சமூகத்தின் தோற்றம் தொடங்கியது தென் ஆப்பிரிக்க மண்ணில்தான். தற்போதுள்ள மனிதர்களின் மூதாதையர்களான மனிதவர்க்கத்தின் உருவ அமைப்புள்ளவர்கள் ((Humanoid) இரண்டு மில்லியன் வருடங்கள் முன்பாக வாழ்ந்தவர்கள் (Southern Ape or Australopithecus Africans) என்ற ஆதாரம் சிலகாலத்தின் முன்பு தென் ஆப்பிரிக்க தலைநகரான ஜோகன்ஸ்பேர்கின் அருகாமையில் உள்ள சுண்ணாம்புக் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை மனித பரிமாணத்தின் தொட்டில் என்கிறார்கள்.

ஆனால், இப்போது உலகத்தில் குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரமாக ஜோகான்ஸ்பேர்க் அடையாளம் காணப்படுகிறது.

ஜோகான்ஸ்பேர்க் நகரத்தின் மத்தியில் வாகனத்தில் செல்லும்போது சாலையில் சிவப்பு சிக்னலில்கூட காரை நிறுத்தக்கூடாது என பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தது.

ஆயுத முனையில் கார் கடத்தல்கள், பாலியல் வன்முறைகள் என்பன நடப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தன.

உலகத்தில் சிறந்த நட்பான நகரமாக தெரியப்பட்ட மெல்பர்னில் இருந்து ஜோகான்ஸ்பேர்க் செல்லும் எனக்கு இதைப் பற்றி சிறிது மனப்பயம் ஏற்பட்டாலும் அதை வெல்லும் அசாத்திய துணிச்சலும் வந்தது. விமானம் ஜோகன்ஸ்பேர்க் விமான நிலையத்தில் இறங்கியதும் புதிய அரசியல் மாற்றம் புரிந்தது. வாகனத்தில், ஹோட்டல் நோக்கி செல்லும்போது மனதில் சிறிது பயமும் பொதிகள் போல் ஒட்டிக்கொண்டு பிரயாணம் செய்தது. பாதையோரங்களில் வீடுகள், அலுவலகங்கள், பாடசாலைகள், கார் நிறுத்தும் இடங்கள் எல்லாம் இரும்பு கம்பிவேலியுடன் பாதுகாப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டும் இருந்தன. காவலர்களும் கடமையில் இருந்தார்கள்.

நமது புவியில் இயற்கையாக அமைந்திருக்கும் கண்ணைக் கவரும் ஏழு அற்புதங்களில் ஓன்று விக்டோரியா அருவி. ஒருவர் இறப்பதற்கு முன்பு உலகில் பார்க்க வேண்டிய நூறு இடங்களில் முதன்மையான இடமென இந்த அருவி சொல்லப்படுகிறது.

எனவே, நானும் மனைவியும் ஜோகன்ஸ்பேர்கில் இருந்து விக்டோரியா அருவி பார்க்க சென்றோம். அந்த சிறிய நகரத்தில் உள்ள விமான நிலையம், ஒரு பேருந்து நிலையத்தைப்போல் காட்சியளித்தது. மிகவும் சிறிய ஹோட்டல்கள் மட்டுமே விக்டோரியா அருவி நகரத்தில் உள்ளன. உல்லாசப் பிரயாணிகளுக்கு வசதிகள் இல்லாததால் அங்கு இயற்கை இன்னமும் சிதைக்கப்படவில்லை. உல்லாசப் பிரயாணிகளால் மட்டுமே வருமானத்தைப் பெறுகிறது அந்த நகரம்.

எங்களது ஹோட்டல் சம்பேசி ஆற்றின் கரையில் ஆப்பிரிக்க காட்டுப் புற்களால் வேயப்பட்டு அழகாக அமைக்கப்பட்டடிருந்தது. சகல வசதிகளும் உள்ள அழகான ஹோட்டல். எங்கள் அறைகளுக்கு வெளியே பபூன்கள் என்ற வானரங்களும் காட்டுப் பன்றிகள், கழுகுகள் என ஏராளமான பறவைகளும் மிருகங்களும் இயல்பாகத் திரிந்தன. அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை எழுதப்பட்டிருந்தது.

சம்பேசி ஆற்றருகே உள்ள அந்த ஹோட்டலில் தங்கியிருந்து காலையில் எழுந்து விக்டோரியா அருவிக்குச் சென்றோம். அருவி அருகில் செல்லும்போது நீரத்துளிகளால் நனைக்கப்படலாம் என எச்சரித்திருந்தபடியால் அதற்கேற்ற உடையணிந்திருந்தோம்.

‘வானத்திலிருந்து தேவதைகளின் மனமகிழ்விற்காக கடவுளால் உருவாக்கிய இடம் – இதைப்போல் ஒரு இடம் பிரித்தானியர்களுக்கோ ஐரோப்பியர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை’ என்றார் விக்டோரியா அருவியை முதலாவதாகத் தரிசித்த ஐரோப்பியரான டேவிட் லிவிங்ஸ்ரன். அருவியை ஆகாயத்திலிருந்து பதினைந்து நிமிடம் ஹெலிகப்டரில் பறந்து பார்த்தபோது அந்தத் தேவதைகளின் மனநிலையில் நாங்களும் இருந்தோம்.

ஸ்கொட்லாண்டைச் சேர்ந்தவரான டேவிட் லிவிங்ஸ்ரனின் அந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. மதியத்து ஆதவனின் ஒளியில் உருகிய வெள்ளித் திரவமாக சமபேசி ஆறு உருகியோடி மலையிடுக்கில் அமைந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து கீழே விழுந்து புகையாக வானத்திற்கு எழுந்தது. இருபது கிலோமீட்டருக்கு அந்தப் புகை தெரியுமென்றார்கள். ஆற்றின் இருபக்கமும் மரகதப் பச்சை நிறத்தில் காடுகள் வேலியாக கோடடித்து ஆற்றைப் பாதுகாத்தன.

இந்த ஆற்றுப்பகுதி அழகானது மட்டுமல்ல, மனித சமூகத்தின் கர்ப்பப் பையுமாகும். 2 மில்லியன் வருடங்கள் முன்பு இங்கு வசித்த எமது மூதாதையர்கள் உபயோகித்த கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதன்பின்னர் தற்கால மனிதர்களால் 50 000 வருடங்களுக்கு முன்னர் பாவித்த கருவிகளும் கண்டெடுக்கப்பட்டதால் மனித வரலாற்றின் முக்கிய இடமாக இந்தப் பகுதி கருதப்படுகிறது.

ஜிம்பாப்வே – சாம்பியா இரு நாடுகளையும் சம்பேசி ஆறு வடக்குத் தெற்காக பிரிப்பதால் விக்டோரியா அருவியின் பெரும்பகுதியும் மிகவும் அழகான பகுதியும் தற்பொழுது ஜிம்பாப்வேயின் பக்கத்திலே உள்ளது.

அருவியோடு நடக்கும் வழியில் ஒரு பக்கம் அருவி – மறுபக்கம் இயற்கையான சவானா வனப்பகுதி. அங்கும் இங்கும் பல்வகை மான்கள், பபூன்களை பார்க்க முடிந்தது.

காலையில் நிலத்தில் நடந்து பார்த்தும் ஆசை தீராதபடியால் மதியத்தில் ஆகாயத்தில் பறந்து பார்த்தோம். ஹெலிகொப்டர் ஜிம்பாப்வே, ஜாம்பியா ஆகிய இரண்டு நாடுகளின் எல்லையில் உள்ள அருவிக்கு மேலாகவும் வனத்தின் மேலாகவும் பறந்தபோது கண்களுக்கு விருந்தாக இருந்தது. வெள்ளிப்பாளங்கள் உருகி அருவியாகி பள்ளத்தில் விழும்போது, அதில் சிதறும் நீர்த்துளிகள் எழுந்து மேகத்தை தழுவி, அதனிடையே வானவில் கோலமாக அழகு காட்டியது.

விக்டோரிய அருவி நகரத்தில் கடையில் சில சாமன்களை வாங்கும்போது அமரிக்க டாலரையே கொடுக்க வேண்டியிருந்தது.

மிகுதியாக ஒரு டாலரை நான் வாங்கியபோது மிகவும் கசங்கியும் மிக அழுக்காகவும் இருந்தது. ஜிம்பாப்வே நாட்டின் பொருளாதார நிலையின் படிமமாக அதை நினைத்தேன்.

மெல்பன் நகரம் விருந்திற்கு வந்த அழகி என்றால் அதே பெண்ணை உல்லாசப் பிரயாணத்தில் பார்த்ததுபோல் தோன்றும் நகரம் கேப் டவுன். தென் ஆப்பிரிக்காவின் தொடக்கப் புள்ளி டேபில் பே (Table Bay ) இங்குதான் உள்ளது. மிகவும் அழகான கட்டிடங்களும் அதிகமான உணவுச் சாலைகளும் சிற்பங்களும் கொண்ட பிரதேசம். அகலமான வீதிகள், துறைமுகப் பிரதேசம், உயர்ந்த கட்டிடங்கள், சிறிது தூரம் சென்றால் மலைக்குன்றுகள், அதைச்சுற்றி கண்ணுக் கெட்டியதூரம் புல்வெளிகள், அப்பால் கரடுமுரடான கடற்கரையோரம்…

மேற்கு கேப் மாநிலத்தின் தலைநகரான கேப் டவுனின் தென்பகுதி கேப் மாநிலத்திற்கு மேற்கே அட்லாண்டிக் சமுத்திரமும் கிழக்கே இந்து மகா சமுத்திரமும் விரிந்துள்ளன. இந்த இரு சமுத்திரங்களும் ஒன்றாக சேர்வது நன்னம்பிக்கை முனை என அக்காலத்தில் கடலோடிகளால் பெயரிடப்பட்டது. அது இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

ரேபில் மவுண்டின் எனப்படுவது ஒரு மலைப்பிரதேசம். இந்த மலையின் உச்சியில் தட்டையான மேடை, மேசைபோ ல் இருக்கிறது. அங்கு வெள்ளை முகில்கள் படிந்திருப்பது மேசையில் வெள்ளைத் துணி மேசை விரிப்பாக விரித்ததுபோல் தோன்றும் என்கிறார்கள்.

ஆனால், இதன் உயரத்திற்கு செல்வதற்கு முயன்றபோது அதிகம் மேகமூட்டமாக இருந்ததால், எங்களை அழைத்துக் கொண்டு செல்லும் கேபிள் கார்ப் பயணம் நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்கள் சென்றும் ஏமாற்றம்தான். இந்தப் பகுதி மிகவும் அழகாகவும் பலவிதமான மரங்களைக் கொண்டதுமாக காட்சியளிக்கிறது. உலகத்தில் வேறு எங்கும் இல்லாத மரங்கள் இங்குள்ளன. மலையடிவாரத்திற்குச் செல்லும் வழிப்பயணம் அழகிய அனுபவம். இந்த மலைகளைத் தாண்டி செல்லும்போது அட்லாண்டிக் சமுத்திரம் தென்படுகிறது.

நாங்கள் மலையின் உச்சிக்கு செல்ல முடியாதபோது அடிவாரத்தை சுற்றிப் பார்த்தோம். அப்படியே அட்லாண்டிக் சமுத்திர கடற்கரை வழியாக செல்லும்போது பென்குயின்கள் காலனிகளாக இருந்த போல்டர் பீச் (Boulder Beach) வருகிறது. இங்குள்ள பென்குயின்கள் பலமடங்கு பெரிதான தோற்றம் கொண்டவை. இவற்றை ஆப்பிரிக்க அல்லது கறுப்புக்கால் பென்குயின் என்பார்கள். ஒரு சிறிய இடத்தில் கூட்டம் கூட்டமாக பென்குயின்கள் இருந்தன.

தொடர்ச்சியாக கடற்கரைப் பாதையில் சிறிது தூரம் சென்றபோது கடல் வாழ் முலையூட்டிகளில் முக்கியமான உரோமங்கொண்ட சீல்கள் வாழும் தீவு தென்பட்டது. இங்கு ஏராளமாக சீல்கள் வாழ்வதால் அவற்றைப் பார்ப்போம் என கட்டணம் செலுத்தி – படகில் ஏறி அரைவாசித் தூரம் சென்ற போது பெரும்புயல் உருவாகி படகை தூக்கி தூக்கி குத்தியது. கடற்கரையில் இருந்து இரண்டு கிலோ மீட்டரில் புயல்காற்றால் திரும்ப வேண்டியிருந்தது. நன்னம்பிக்கை முனை என பெயர் வைத்ததே ஒரு நம்பிக்கையில்தான். உண்மையில் பல கப்பல்கள் உடைந்தது இந்தப் பகுதியில்தான். காலாகாலமாக தென்பகுதியில் ஏராளமான கப்பல்கள் உடைந்து மாலுமிகள் கடலோடு சமாதியாகிய கதைகள் வரலாற்றில் உள்ளன. அந்த வரலாற்றில் நாங்களும் இடம்பெறுவதை அந்த கப்பல் கேப்டன் விரும்பவில்லை.

சீல் தீவுக்கு போகாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை எங்களுக்கு அளிக்க விரும்பாத பல சீல் விலங்குகள், நாங்கள் நின்ற கடற்கரையில் வெய்யில் குளிக்க வந்தன. கறுப்பு அல்லது பிரவுண் நிறமான இவை கடல் சிங்கத்திற்கு உறவானவை. மாமிசம் தின்று குட்டிபோடும் சீல்கள் குளிர்பிரதேசத்தை விரும்புவதால் தென்துருவம் மற்றும் வடதுருவத்தை அண்டிய நாடுகளின் கடற்கரையில் வாழ்கின்றன. மிகவும் சாதுவானதுடன் 120 கிலோ நிறை கொண்டவை. 19ஆம் நூற்றாண்டில் இவற்றின் உரோமத்திற்காக தலையில் அடித்து வேட்டையாடப்பட்டன. இப்பொழுது எல்லா இடங்களிலும் வேட்டைக்கு எதிரான சட்டங்கள் இருப்பதால் அமைதியான வாழ்கைக்கு திரும்பியிருப்பதாகத் தெரிகிறது.

இவற்றிற்கு விருத்தியடைந்த மூளை இருப்பதால் இவை பழக்கப்படுத்தப்படலாம் என்பது, நாங்கள் கொடுத்த மீனுக்காக போட்டோவிற்கு அவை போஸ் கொடுத்ததில் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்து சமுத்திரமும் அட்லாண்டிக் சமுத்திரமும் சந்திக்கும் ஒரு புள்ளிதான் நன்னம்பிக்கை முனை என ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், உண்மையில் இந்துசமுத்திரத்தில் இருந்து வெப்பமான நீரும் அட்லாண்டிக்கின் குளிர் நீரும் வேறு காலங்களில் ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் எந்த இடத்திலும் வெப்ப நிலைக்கேற்ப கலப்பதாக அறியப்படுகிறது. கன்னியாகுமரியில் அரபிக்கடலும் வங்கக்கடலும் ஒரு முனையில் சந்திப்பது போல் இங்கு நடக்கவில்லை.

தொடர்ச்சியாக முழங்கியபடி கரையை மோதும் நீல நிறமான அட்லாண்டிக் சமுத்திரத்தில் மேற்கு நோக்கி கேப் டவுனில் இருந்து ஒரு மணிநேரம் பிரயாணம் செய்தால் நெல்சன் மண்டேலாவை 18 வருடங்கள் சிறைவைத்த ரொபின் ஐலன்ட் என்ற தீவை அடையலாம். பிரயாணசீட்டை பெற்றுக்கொண்டு கேப் டவுன் துறைமுகத்தில் இருந்து சிறிய படகு, ஆனால், பாதுகாப்பான வசதிகள் கொண்டதில் புறப்பட்டோம். அன்று மழையும் காற்றுமாக பருவகாலம் சோதித்தது.

கொந்தளித்த சமுத்திரத்தில் எங்கள் பயணம் இலகுவானது இல்லை. நிச்சயமாக அந்தத் தீவிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது என்பதை அந்தப் பயணத்தில் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்தத் தீவில் இருந்து மண்டேலாவை தப்பிக்க வைக்க எக்காலத்திலும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முயலவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க உளவு நிறுவனம் முயன்றது. மண்டேலாவை தப்ப வைத்து வழியில் கொலை செய்வதற்கான திட்டமது. எனவே, அந்தத் திட்டத்தை மண்டேலா சந்தேகித்து ஒப்புக் கொள்ளவில்லை. பல் வைத்தியரைப் பார்க்க அவர் கேப் டவுனுக்கு சென்றபோது தப்புவதற்கு மனதில் நினைத்தாலும் பின்பு கைவிட்டார்.

தென் ஆப்பிரிக்க தலைநகரான பிரிட்டோரியாவில் தண்டனை விதிக்கப்பட்டதும் மண்டேலாவிற்கும் மற்றைய கைதிகளுக்கும் தென் ஆப்பிரிக்க கர்னல் சொன்னாராம், ‘உங்களை நாங்கள் நான்கு சுவர்களுக்கு இடையே அடைக்கப் போவதில்லை. நல்ல இடத்திற்கு அனுப்பப் போகிறோம். அங்கு கடல், காற்று, வானம் என சுதந்திரமாக வைத்திருக்க கொண்டு செல்கிறோம்.’

‘அந்த வார்த்தையில் நக்கல் இல்லை’ என்கிறார் மண்டேலா தனது சுயசரிதையில். நாங்களும் அதை உணர்ந்தோம்.

இங்கு உல்லாச பிரயாண வழிகாட்டிகள் மற்றும் பராமரிப்பவர்கள் என இருநூறு பேர் வாழ்கிறார்கள். இதைவிட கடல் காகங்கள், வான்கோழிகள், பென்குயின்கள், பாம்புகள், ஆமைகள் என்பன அதிகம் வாழ்கின்றன. சிறை தற்பொழுது கண்காட்சி சாலையாக பாதுகாக்கப்படுகிறது. மிகவும் விஸ்தாரமான இடம். அதி உயர் பாதுகாப்பு சிறைப் பகுதியில் மண்டேலா இருந்த அறையில் அவரது படுக்கைகள் விரிப்புகள் மட்டும் இன்னமும் உள்ளன.

இந்தத் தீவிற்கு வந்த டோனி பிளேயர், ஹிலாரி கிளிண்டன் போன்றவர்கள் இரவு வேளையில் தங்கி மண்டேலாவின் அனுபவத்தை உள்வாங்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் சென்ற அன்று மழைநாள். அதனால் அவசரமான பயணமாக இருந்தது. எங்களை அரை மணி நேரம் பஸ்ஸில் ஏற்றி தீவை சுற்றிக்காட்டினர். மற்றைய அரைமணி நேரம் சிறைச்சாலையை சுற்றிப் பார்க்க அனுமதித்தார்கள்.

எங்கள் வழிகாட்டி மண்டேலாவுடன் மூன்று வருடம் சிறையில் இருந்தவர். எனவே, அவரது விவரணைகள் உணர்வு கலந்து இருந்தது. சிறைக்குப் பின்னால் மண்டேலா உடற்பயிற்சி செய்த இடம் – அவரது சுயசரிதையை புதைத்த பகுதியை பார்க்க முடிந்தது. மண்டேலா மற்றும் கைதிகள் சுண்ணாம்பு பாறையை உடைத்த இடத்தை பார்த்தபோது அவரது சுயசரிதையில் கூறிய பகுதி நினைவுக்கு வந்தது.

“கல்லுடைத்தபோது உடல் முழுவதும் சுண்ணாம்பால் மூடுவதுடன் சூரிய ஒளி பட்டு கண்ணைக் கூசச் செய்வதால் அதைத் தடுக்க கருப்புக் கண்ணாடி கேட்டு பல மாதங்கள் போராட வேண்டியிருந்தது’ என்று எழுதியுள்ளார்.

மண்டேலாவின் உடல் மரணித்தாலும் தனது காலடியை தென் ஆப்பிரிக்கா எங்கும் நினைவுகளாக மிகவும் அழுத்தமாக பதித்து விட்டுச் சென்றுள்ளார். அவரது பெயரில் தெருக்கள், சிலைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்கள் என எங்கும் அவரது பெயர் நிறைந்துள்ளது

மண்டேலா இருந்த சிறைச்சாலை, விக்டோரியா அருவிக்கு அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் பார்க்க திட்டமிட்டிருந்தவை காடுகள், அதில் வாழும் மிருகங்கள். ஆப்பிரிக்க காட்டுக்குள் மாலை ஆறு மணியிருக்கும், எதிரே சூரியன் அழகான சிவந்த பந்துபோல் திரண்டு மறைவதற்கு தயாரானபோது, அந்த காண்டாமிருகத்தை புகைப்படம் எடுப்பதற்காக சாரதியை வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். உடனே வாகனம் நின்றுவிட்டது.

அரைநிமிடத்தில் படத்தை எடுத்து முடிந்து ‘நன்றி’ என்றபோது அருகில் இருந்த டென்மார்க் பெண் என்னைப் பார்த்து தனது வாயில் கையை வைத்து அமைதி என சைகை காட்டினாள்.

எதிரே 1500 கீலோவுக்கும் குறைவில்லாத ஒரு கருப்பு காண்டாமிருகம் எமது வாகனத்தை நோக்கி வேகமாக 100 மீட்டர் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. பார்த்ததும் எனக்கு இதயத்தில் இரத்த ஓட்டம் உறைந்துவிட்டது. கேமராவின் துரப் பார்வை லென்சை அகலப் பார்வை லென்சுக்கு மாற்றிய போது இன்னும் அருகாக அது வந்திருந்தது. கருத்த வாளிப்பான மயிரற்ற தோல்கொண்ட அதனது உடம்பில் வயிற்றுப் பகுதியில் சேறு படிந்திருந்தது. தங்களை மறைத்துக்கொள்வதற்காக அவை செய்வது. தூரப் பார்வையில் ஆப்பிரிக்க எருமை போல் இருந்தாலும் அதன் தலை சிறிதாக நீளமானது. கால்கள் கட்டையானவை.

இப்பொழுது ஐம்பது மீட்டர் தொலைவில் அது வந்தபோது அதனது கண்கள் தெரிந்தது, அது எம்மைப் பார்க்கவில்லை. நிலத்தைப் பார்த்தபடி வந்தது. பல வருடங்களாக அவை நடந்து வந்த பாதையில் எமது வாகனம் நிற்கிறது என்ற விஷயம் மட்டும் எனக்குப் புரிந்தது. அப்போதுதான் காண்டாமிருகத்திற்குரிய முன் பின்னாக அமைந்த இரண்டு கொம்புகளைக் காணவில்லை என்பதை கவனித்தேன். காரணத்தை கேட்க முடியவில்லை. ஏற்கெனவே காட்டு மிருகங்களை பார்க்கும்போது பேசக்கூடாது என்பது எமக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு.

மிக அருகில் வந்ததும் மேலும் பயம் அதிகரித்தது. எனது மனைவி என்னோடு ஒட்டிக்கொண்டாள். அந்த வாகனத்தில் எட்டு பேர் இருந்தார்கள். அது தாக்கினால் அந்த வாகனம் தாங்காது. மேலும், சுற்றிவர ஆள் உயரத்திற்கு மேல் அடர்த்தியாக வளர்ந்த முற்புதர்கள் நிறைந்த காடு.

மிகவும் அண்மையில் அதாவது மிருகங்களின் பாதுகாப்பு பிரதேசம் என்ற இடத்திற்கு அது வந்துவிட்டது. அன்னியர்களை தாக்கவேண்டும் அல்லது அந்த இடத்தை விட்டு ஓடவேண்டும். இதுவே இயற்கையின் நியதி. அருகே வந்ததும் என்னால் தாங்கமுடியவில்லை. ‘இன்னும் அருகில் வருமா? என முணுமுணுத்தேன்.

“சத்தம் கேட்டால் அருகே வரும்” என்றான் அந்த வழிகாட்டி.

அந்தக் கணத்தில் அது எம்மை ஏறெடுத்து பார்த்தது. கண்கள் அகலமானது, கழுத்தின் தசைகளில் விறைப்பு ஏற்பட்டது போன்ற தோற்றம். அதனது இரண்டு மூக்குத் துவாரங்களும் பெரிதாக விரிந்தன. இரண்டு காதுகளும் எம்மை நோக்கி நிமிர்ந்து ஆண்டனாவாகின. நாங்கள் உறைந்து இருந்தோம்.


பயணம் தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...