அதிர்ஷ்டம் இருந்தால் சிறைச்சாலைகூட சொர்க்கமாக மாறும் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் நவஜோத் சிங் சித்து. ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்துவுக்கு தினசரி வழங்கவேண்டிய உணவின் பட்டியலை பாட்டியாலா நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மெனு போல் இருக்கிறது.
சித்துவுக்கு சிறையில் கொடுக்கப்படும் உணவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன் அவர் எதற்காக சிறையில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வோம்..
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, நண்பர் ரூபீந்தர் சாந்துவுடன் 1988-ம் ஆண்டு பாட்டியாலாவில் ஒரு இடத்தில் காரை நிறுத்தியபோது அங்கு இன்னொருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலபாக மாறி சித்து அடித்ததில் குர்மான் சிங் (65) என்பவர் இறந்துவிட்டார். சித்து மீது வழக்கு பதியப்பட்டது. சுமார் 34 ஆண்டுகள் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது. சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் சரணடைந்த சித்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறிய சித்துவை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதேநேரத்தில் மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு உணவுகள் எடுத்துக்கொள்ள தனக்கு அனுமதி கோரி பாட்டியாலா நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சித்து மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து, சித்துவிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இப்போது அந்தக் குழுவின் பரிந்துரைப்படி கீழ்கண்ட வரிசைப்படி சித்துவுக்கு உணவு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாலை:
ஒரு கோப்பை மூலிகை டீ (rosemary tea), அரை டம்ளர் இளநீர்.
காலை உணவு:
லாக்டோஸ் இல்லாத பால் ஒரு கப், ஆழி விதை அல்லது சூரியகாந்தி விதை அல்லது தர்பூசணி விதை ஒரு ஸ்பூன், பாதாம் பருப்பு – 6, ஒரு வாதுமை கொட்டை, 2 பெக்கன் நட்கள் (pecan nuts).
நண்பகல் 11 மணி:
பீட்ரூட் அல்லது சாத்துக்குடி அல்லது நெல்லிக்காய் ஜூஸ் ஒரு கோப்பை, தர்பூசணி, கிவி, ஸ்டிராபெர்ரி, ஆப்பிள், கொய்யா ஆகியவற்றில் சித்து கேட்கும் ஏதாவது ஒரு பழம், முளைகட்டிய பயிறு 25 கிராம், பச்சைப் பயிறு 25 கிராம், வெள்ளரிக்காய், தக்காளி, அவக்காடோ ஆகியவற்றைக் கொண்ட சாலட் ஒரு கோப்பை.
மதிய உணவு:
ராகி அல்லது கோதுமையால் செய்யப்பட்ட ஒரு சப்பாத்தி. ஒரு கோப்பை வெஜிடபிள் சாலட், வெள்ளரிக்காய் ராய்தா, ஒரு கிளாஸ் லஸ்ஸி.
மாலை:
கொழுப்பு அதிகம் இல்லாத பாலில் தயாரிக்கப்பட்ட 100 மில்லி டீ. 25 கிராம் பனீர்.
இரவு உணவு:
பருப்பு அல்லது கொண்டைக்கடலை சூப், ஒரு கோப்பை காய்கறி சாலட்.
தூங்கச் செல்வதற்கு முன்:
ஒரு கோப்பை சமொலின் டீ (Chamomile tea).
இப்படி நாளொன்றுக்கு 7 முறை வித்தியாசமான உணவை சித்துவுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் இருந்தாலும் சித்துவுக்கு ராஜ வாழ்க்கை தான்.