No menu items!

நியூஸ் அப்டேட்: பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

நியூஸ் அப்டேட்: பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

மத்திய அரசின் 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வரும் மோடி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக, விழா நடைபெறும் பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். நேரு ஸ்டேடியத்துக்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில் மோடியின் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பெரியமேடு பகுதியைச் சுற்றியுள்ள ஈ.வெ.ரா. சாலை, தாஷ்பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி வரையிலான சாலையில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா சாலை, எஸ்.பி. படேல் சாலை, ஜி.எஸ்.டி. சாலை ஆகியவற்றில் போக்குவரத்து இயக்கம் மந்தமாக நடைபெறும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று சாலைகளை பயன்படுத்திக் கொள்ளவும் மாற்று வழிகளில் செல்ல முன்கூட்டியே திட்டமிடுமாறும் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் சென்னை விசிட்: பாஜகவின் பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு தடை

பிரதமர் மோடி சென்னை வருகை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் பலூன்களை பறக்க விடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்வில் கலந்துகொண்டு பலன்களை பறக்கவிட இருந்தார். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில நிர்வாகிகள் பலூன்களை கையில் ஏந்தி பிரதமர் தமிழகம் வருவதை முன்னிட்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் உள்ள அறையை பூட்டி சாவி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், ‘‘வணக்கம் மோடி வாங்க மோடி என்ற வாசகம் பொருந்திய பலூன்களை பறக்க விட இருந்தோம். சில பாதுகாப்பு காரணமாக பறக்க விட முடியவில்லை. 1 லட்சம் பலூன்களை தயார் செய்து இருந்தோம். இதை வேறு இடத்திற்கு கொண்டு சென்று பறக்க விட முடியாது. தற்பொழுது இந்த பலூன்களை எதுவுமே செய்ய முடியாது. அப்படியே தான் வைத்து இருக்க போகிறோம்” என்றார்.

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்பு

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றுள்ளார்.

அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஓம் சிங் ஆவார். ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேருவதற்கு முன்னர் கேப்டன் அபிலாஷா, தொழில் ரீதியில் நிறைய ராணுவ படிப்புகளை படித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானிகளாக 36 பேருடன் அபிலாஷா பாரக்கும் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சூரி அணிவித்தார்.

இந்தியாவில் இதுவரை குரங்கம்மை தொற்று இல்லை: மத்திய அரசு விளக்கம்

ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் காணப்படும் குரங்கம்மை தொற்று நோய் தற்போது பல்வேறு உலக நாடுகளில் தீவிரமாக பரவிவருகிறது. ஆப்ரிக்கா கண்டத்திற்கு வெளியே 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவும் நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் குரங்கம்மை தொற்று குறித்து மத்திய அரசின் கோவிட் தடுப்பு குழுவின் தலைவரான டாக்டர் என்கே அரோரா கூறுகையில், ‘‘கோவிட்-19 வைரஸ் போன்று குரங்கம்மை தொற்று வைரஸ் தீவிரம் கொண்டது அல்ல. அதேவேளை இதை நாம் அலட்சியமாக கருத கூடாது. இதுவரை குரங்கம்மை தொற்று பரவல் இந்தியாவில் கண்டறியப்படவில்லை. கோவிட்-19 போன்றே குரங்கம்மை தொற்று பரவல் குறித்து கண்காணிக்க மத்திய அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது” என்றார்.

ராமேசுவரம் பெண் பலாத்காரம் செய்து கொலை: வடமாநில வாலிபர்கள் 6 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றார். மாலை வரை வீடு திரும்பாததால் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர். அந்த பெண் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் முள் புதரில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது.

அந்த பெண் பிணமாக கிடந்த இடத்திற்கு அருகே செயல்பட்டு வரும் இறால் பண்ணையில் பணிபுரியும் ஒடிசா மாநில வாலிபர்கள் பிரகாஷ் (வயது 22), விகாஷ் (24), ராகேஷ் (25), பிரசாத் (19), ரஞ்சன்ராணா (34), பிண்டு (19) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசாருடன் நின்ற பொதுமக்கள் வாலிபர்கள் 6 பேரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் இறால் பண்ணையின் முன் பகுதியில் இருந்த வாகனம் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கடல்பாசி சேகரித்துவிட்டு தனியாக வந்த பெண்ணை 6 பேரும் வழிமறித்து புதருக்குள் தூக்கிச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக தெரிவித்தனர். இதையடுத்து 6 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...