மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி 4 பந்துகளில் 16 ரன்களைக் குவித்து வெற்றியை வசமாக்கியுள்ளார் மகேந்திரசிங் தோனி. இதன்மூலம் உலகின் தலைசிறந்த பினிஷர் என்றுமே தான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக கடைசி ஓவர்களில் தோனி செய்த சில முக்கியமான சாகசங்களை திரும்பிப் பார்ப்போம்:
ஜூலை 3, 2009 – மிரண்ட மேற்கிந்திய அணி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி செயிண்ட் லூசியா நகரில் நடைபெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களைக் குவித்தது. இந்தியா ஆட வருவதற்குள் மீண்டும் மழை. இதனால் 22 ஓவர்களில் வெற்றிக்கு 159 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் (47 ரன்கள்), கவுதம் காம்பீர் (41 ரன்கள்) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தாலும் ஒவ்வொரு ஓவரிலும் எடுக்க வேண்டிய ரன் ரேட் ஏறிக்கொண்டே இருந்தது. இந்த சூழலில் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கி, ருத்ர தாண்டவம் ஆடினார் தோனி. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட, பவுண்டரிகளை விளாசி வெற்றி மாலை சூடினார் தோனி. இப்போட்டியில் 34 பந்துகளில் தோனி குவித்த ரன்கள் 46. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பினிஷராக தோனி முதன்முதலில் அறியப்பட்டது அன்றுதான்.
ஜூலை 11, 2013 – 3 பந்துகள் 15 ரன்கள்
மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்தது. இலங்கையை எதிர்த்து இதில் இந்தியா ஆடியது. முதலில் ஆடிய இலங்கை அணி 201 ரன்களைக் எடுக்க, அடுத்து ஆடிய இந்தியா, 139 ரன்களில் 4 விக்கெட்களை இழந்தது. இந்த இக்கட்டான சமயத்தில் ரெய்னாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். அதன் பிறகும் தொடர்ந்து விக்கெட்கள் சரிய, கடைசி பேட்ஸ்மேனான இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார் தோனி. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்டன. ஷமிந்தா எரங்கா வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் தோனி ரன் எதையும் எடுக்கவில்லை. இந்தியா அவ்வளவுதான் என்று அனைவரும் நினைக்க, அடுத்த 3 பந்துகளில் 15 ரன்களைக் குவித்து ந்தியாவை கரைசேர்த்தார் தோனி. இப்போட்டியில் 52 பந்துகளில் அவர் 45 ரன்களைக் குவித்தார்.
பிப்ரவரி 12, 2012 – அதிர்ந்த ஆஸ்திரேலியா
காமன்வெல்த் பேங்க் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஆடியது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடந்த இப்போட்டியில் ஜெயிக்க இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு 270. ஆரம்பத்தில் காம்பீர் 92 ரன்களைச் சேர்த்தாலும், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பு தோனியின் கைக்கு வந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை. மெக் கே வீசிய இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுத்து தோனியிடம் பொறுப்பை ஒப்படைக்க, இவர் கரையேற்றுவார் என்று மொத்த இந்தியாவும் ஆசுவாசமானது. தோனியும் ஏமாற்றவில்லை. அடுத்த பந்தை 112 மீட்டர் தூரத்துக்கு பறக்கவிட்டார். அடுத்தடுத்த பந்துகளிலும் தோனியின் பேட் சுழன்றடிக்க, 2 பந்துகளை மீதம் வைத்து வெற்றி இலக்கை அனாயாசமாக எட்டியது இந்தியா.
அக்டோபர் 20, 2011 – இடிந்து போன இங்கிலாந்து
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 298 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 8 ரன்கள் தேவை. டிம் பிரஸ்னன் இந்த ஓவரின் முதல் 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி 4 பந்துகளை மீதம் வைத்து ஜெயித்துக் கொடுத்தார் தோனி. இப்போட்டியில் 31 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்து சிறப்பாக ஆட்டத்தை முடித்தார் தோனி.
அக்டோபர் 30, 2013 – அவுட்டான ஆஸ்திரேலியா
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 6-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது. ரன் மழை பொழிந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களைக் குவித்தது. அடுத்து இந்தியா ஆட, 115 ரன்களைக் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் இட்டார் விராட் கோலி. ஆனால் அடித்தளம் மட்டும் போதுமா? பினிஷிங் வேண்டாமா?
இந்த இடத்தில் தோனி கைகொடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட, மூன்றே பந்துகளில் அதை அடித்து முடித்தார்.
தோனியின் சாகசங்களுக்கு இது வெறும் சில சோற்றுப் பருக்கைகள்தான். ஐபிஎல் போட்டிகளில் அவர் செய்த சாகசங்களை சொன்னால் இன்னும் நீண்டுகொண்டே போகும்.