No menu items!

நியூஸ் அப்டேட்: இனி நோ பவர்கட் – அமைச்சர் உறுதி

நியூஸ் அப்டேட்: இனி நோ பவர்கட் – அமைச்சர் உறுதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மின்தடை தொடர்பாக அரசியல் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது பேசிய மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கடந்த 18-ம் தேதி 312 மில்லியன் யூனிட் நுகர்வு 21-ம் தேதி 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தத.  இந்த நிலையில் ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் வரவில்லை. இதனால் மின்தடை ஏற்பட்டது. இனி மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது. குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிற்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு தினமும் 48,000 முதல் 50,000 டன் நிலக்கரியை ஒதுக்கீடு செய்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக தினசரி நிலக்கரி ஒதுக்கீட்டை 20 ஆயிரம் டன் வரை குறைத்து வழங்குகிறது. எனவே, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்” என்று கூறினார்.

கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்க – அரசு உத்தரவு

வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா நோய் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: தமிழகம் முழுவதும் மே 8 முதல் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் வரும் மே 8-ம் தேதி முதல் சிறப்பு மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா. சுப்பிரமணியன், “தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தில் இருந்து இங்கே பணியாற்ற வந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. எத்தனை பேர் வந்துள்ளனர் என்கிற விவரத்தை கட்டுமான நிறுவனங்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் 1.46 கோடி பேர் 2-வது தவணையும், 50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை. இதை மனதில் வைத்து, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வரும் மே 8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் சுமார் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது” என்றார்.

ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளது: காவல்துறை தகவல்

தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடை பயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சீலிடப்பட்ட கவரில் ரகசிய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். பின்னர் வாதிட்ட வழக்கறிஞர், ‘சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது. விரைவில் குற்றவாளிகளை நெருங்கிவிடுவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

போர் விமானங்கள் தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும்: பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று குஜராத் பயணத்தை முடித்துக் கொண்ட போரிஸ் ஜான்சன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை ராஜ்காட்டில் மகாத்மா காந்தி சமாதியில் போரிஸ் ஜான்சன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினார்.

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது போரிஸ் ஜான்சன், “இன்று பேச்சுவார்த்தைகள் மூலம் இருநாட்டு உறவுகளை அனைத்து வகையிலும் வலுப்படுத்தியுள்ளோம். போர் விமானங்கள் தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும். எரிசக்தி பாதுகாப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக நானும் பிரதமர் மோடியும் விவாதித்தோம். உதாரணமாக கோவிட்க்கு எதிராக 100 கோடி மக்களுக்கு அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி சீரம் நிறுவனம் போட்டுள்ளது. இது உலகின் மருந்தகமாக இந்தியா மாற உதவியது. நான் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். எனது கை வலிமையுடன் உள்ளது. எனக்கு நல்ல பலனை தந்துள்ளது. அதற்காக இந்தியாவுக்கு மிக்க நன்றி” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...