No menu items!

எம்.பி.யாகிறார் குஷ்பு – மிஸ் ரகசியா

எம்.பி.யாகிறார் குஷ்பு – மிஸ் ரகசியா

முகத்தில் டபிள் மாஸ்க், கைகளில் கிளவுஸ், ஜீன்ஸ் பேக்கட்டில் சானிடைசர் என்று ஏகப்பட்ட பாதுகாப்பு கவசங்களுடன் அலுவலகத்துக்கு வந்தார் ரகசியா.

”பழைய கஷ்டத்துக்கு வந்தாச்சு…எப்பதான் இந்த கொரோனா போகுமோ?” அலுப்பாக ஒரு மாஸ்க்கை கழற்றிக் கொண்டே கூறினார்.

“வடக்குல கொரோனா ஜாஸ்தியாகுது போல” என்றோம்.

“சென்னை ஐஐடில 30 பேருக்கு வந்துருக்கு.. அதைப் பாக்கலையா? இப்போதே தற்காப்புடன் இருந்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் அல்லவா? அதுதான் இந்த ஏற்பாடுகள்” சானிடைசரை கைகளில் தடவிக் கொண்டார்.

“முன்னெச்சரிக்கையா இருக்கிறதுல உன்னை அடிச்சுக்க முடியாது”

“அதிமுக இரட்டையர்களைவிடவா? இப்போ ரொம்ப ஜாக்கிரதையா காய்களை நகர்த்துறது அவங்கதான்.”

“என்ன ஜாக்கிரதை?”

“காலைல கிரீன்வேஸ் சாலை வழியா போனேன். தமிழக அமைச்சர்கள் பலரும் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு பல வீடுகளின் முன்பு வழக்கமாக கூட்டம் இருக்கும். ஆனால் இன்று காலையில் நான் பார்த்த வரையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வீடுகள் முன்னாடிதான் கூட்டம் அதிகம். உள்கட்சி தேர்தலில் வெற்றிபெற விரும்பும் பலரும் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வீட்டில் குவிந்திருந்தனர். இந்த நிலையில் உள்ளே நடக்கும் விஷயங்கள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டின் முன்பக்கத்தில் பெரிய தடுப்புகளை வைத்து மறைத்திருக்கிறார்கள். எடப்பாடியின் வீட்டைப் போலவே கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டு வாசலிலும் ஏகப்பட்ட கும்பல். அங்கும் ரகசியங்களை காக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.”

“ஓபிஎஸ்ஸின் வீடு ஆழ்வார்பேட்டையில் அல்லவா இருந்தது?”

“ஆமாம் முன்பு அங்குதான் இருந்தது. ஆனால் இப்போது கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்திருக்கிறார் ஓபிஎஸ். எடப்பாடியை அருகில் இருந்து கண்காணிக்க இந்த ஏற்பாடு என்கிறார் அங்கிருந்த சின்னமனூர்காரர்.”

“உள்கட்சித் தேர்தலில் பங்குகளை பிரிப்பது எந்த அளவில் இருக்கிறது?”

“இன்னும் இது தொடர்பான மோதல்கள் முடிவுக்கு வரவில்லை. தான் நினைக்கும் அளவுக்கு தனது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்காவிட்டால் எம்பியாக இருக்கும் மகனை பாஜகவில் சேர்த்துவிட்டு அங்கேயே ஐக்கியமாகி விடலாமா என்று யோசிக்கிறாராம் ஓபிஎஸ். இதுபற்றி பாஜகவின் டெல்லி தலைமைக்கு அவர் தெரிவிக்க, இப்போதைக்கு பொறுமை காக்கும்படி ஆலோசனை சொல்லியிருக்கிறார்களாம். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் பாஜகவில் இணைந்தால் கட்சிக்கு அது கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்பது பாஜக மேலிடம் போடும் கணக்கு. இந்த முயற்சியால் பாஜகவின் கருணைப் பார்வை ஓபிஎஸ் மீது படிந்துள்ளது. அவர் தற்போதைக்கு வலுவாக இருக்கிறார்? என்று ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் ஒருவர் தெரிவிக்கிறார்”

“நீ இப்படி சொல்ற, ஆனால் சட்டப் பேரவையில உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளிக்கும்போது எங்க கார் கமலாயம் போகாதா? எம்.ஜி.ஆர். மாளிகைக்குதான் போகும்னு சொன்னாரே ஓபிஎஸ்?”

“எடப்பாடிக்கு எதிரா இருந்தவர்தானே ஓபிஎஸ். இன்னைக்கு ஒண்ணா இருக்கார்ல?”

“ஆமா, அரசியல்ல நிரந்தரம்னு எதுவும் கிடையாது”

“அதோடு இப்போதெல்லாம் எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் மே.9-ம் தேதிக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தன் ஆதரவாளர்களிடம் சொல்கிறாராம் ஓபிஎஸ்?”

“அது என்ன மே.9”

“அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் பெரியகுளத்துக்கு மிக அருகில் உள்ள வடுகப்பட்டியில் ஒரு கோயிலின் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்காக ஏராளமாக நிதியுதவி செய்ததுடன், பணிகளையும் முன்னின்று நடத்தி வருகிறார் ஓபிஎஸ். இந்த கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி முடித்தால், அவர் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும் என்று சிலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அதனால் எதைச் செய்தாலும் மே 9-ம் தேதிக்குப் பிறகு செய்யலாம் என்று முடிவெடுத்டிருக்கிறாராம் ஓபிஎஸ். மேலும் அன்றைய தேதிக்குப் பிறகு தனக்கு நல்லது நடக்கும் என்றும் நம்புகிறாராம்”

“இபிஎஸ் நிலை என்ன?”

“அவரது நிலை இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டம்தான். ஒருபக்கம் செங்கோட்டையன் முரண்டு பிடிக்க, மறுபக்கம் இதுவரை ஆதரவாளராக இருந்த தங்கமணியும் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் மண்டை காய்ந்து போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதே போல் பாஜக தலைமையும் மண்டை காய்ந்து போய் இருக்கிறது”

“ஏன்? அதிமுக தலைமை பிரச்சினையா?”

“ இப்போ அவங்க அதிமுக பத்திலாம் கவலைப்படுறதில்லை. தேர்தல் நேரத்துலதான் கவலைப்படுவாங்க. யாருக்கு ராஜ்ய சபை எம்.பி. பதவி கொடுக்கிறது என்பதுதான் அவங்க குடைச்சல். குஷ்புவுக்கு ராஜ்யசபாவின் எம்.பி. பதவி கொடுக்கலாம் என்று பாஜக மேலிடம் யோசிக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னாருக்கும் மீண்டும் ராஜ்யசபா மூலம் எம்.பி. கொடுக்கலாம்னு இருக்காங்க. ஆனா இதற்கு பாஜகவிலேயே எதிர்ப்பு இருக்கிறது. கட்சியிலேயே நீண்ட காலம் இருந்தவங்களுக்கு கொடுக்கணும்னு குஷ்புவுக்கு பதவி கொடுக்கிறதக்கு எதிர்ப்பு வந்திருக்கு. பொன்னார் நிறைய பதவி அனுபவிச்சிட்டார். இனிமேயும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கணுமானும் கேள்விகள் வந்திருக்காம்.”

“இளையராஜாவுக்கும் பெரிய அளவில் ஏதாவது விருதுகள் கிடைக்கலாம் சொல்றாங்களே. பாரத ரத்னா கொடுக்கப் போறாங்கனு செய்திகள் வருதே”

”ஆமா அப்படி ஒரு பேச்சு இருக்கிறது. ஆனால் உடனடியாக அப்படி கொடுத்தால் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா எழுதியதால்தான் பாரத ரத்னா விருது கொடுக்கிறாங்கனு சொல்லிடுவாங்க. அது மட்டுமில்லாமல் இளையராஜாவுக்கு விருது இப்ப கொடுக்கிறதை விட 2024 தேர்தலையொட்டி கொடுத்தால் தமிழ் நாட்டில் பலன் கிடைக்கலாம்னு பாஜக கணக்குப் போடும்”

“ராஜ்ய சபா எம்.பி. பதவி கொடுக்கப் போறாங்கனு பேச்சு இருக்கிறதே?”

“அதற்கு வாய்ப்பில்லை என்று பாஜகவினரே கூறுகிறார்கள். தமிழ்த் திரையுலகத்தினரை முழுவதும் நம்புவது சரியில்லைனு நினைக்கிறாங்க. நான் பாஜக இல்லைனு பாக்யராஜ் பகிரங்கமா சொன்னதும் நான் திராவிடத் தலைவர்களை மதிக்கிறேன்னு கூட சேர்த்து சொன்னதும் பாஜகவினருக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கு. ரிட்டயர்டான திரைத் துறையினரால பாஜகவுக்கு பலன் கிடைக்காதுனு பாஜக தலைமை இப்போ நினைக்கிறதாம்”

“இளையராஜா என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. திடீரென்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளாரே இளையராஜா?”

“மோடி விஷயத்தில் தனக்கு இப்படியொரு எதிர்ப்பு வரும் என்று அவர் நினைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்திருக்கிறார் இளையராஜா. தன் மீதான எதிர்ப்பை எப்படி குறைப்பது என்ற யோசனையில் அவர் இருந்துள்ளார். இந்த நேரத்தில் அவரைச் சுற்றி இருப்பவர்கள், ‘தமிழக மக்களை உங்கள் இசையால் கட்டிப் போட்டவர் நீங்கள். மீண்டும் இசை தொடர்பாக ஏதாவது ஒரு பதிவை வெளியிடுங்கள். உங்கள் ரசிகர்கள் உருகிப் போவார்கள். அந்த உருக்கத்தில் உங்கள் மீதுள்ள விமர்சனங்கள் மறைந்துவிடும் என்று அவருக்கு ஆலோசனை தந்திருக்கிறார்கள். உடனே இளையராஜாவும் ‘நான் உனை நீங்கமாட்டேன்’னு ட்விட்டரில் பாடியிருக்கிறார். கூடவே ஒரிஜினல் வரிகளை மாற்றி, “பாடுவேன் உனக்காகவே… இந்த நாள் நன்னாள் என்று பாடு… என்னதான் இன்னும் உண்டு கூறு” என்று புதிய வரிகளை போட்டு பாடியிருக்கிறார்”

“இதற்கு என்ன அர்த்தம்?”

“அது இளையராஜவுக்குதான் தெரியும். நான் உனை நீங்க மாட்டேன்னு அவர் பாடுனது ரசிகர்களை நினைத்தா அல்லது மோடியை நினைத்தா என்று இணையத்தில் ராஜாவை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சிரித்தார் ரகசியா.

“திமுக விஷயம் எதையும் சொல்லவில்லையே”

“மற்ற அமைச்சர்களின் துறைகளில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் தலையிடுவதாக சில அமைச்சர்கள் புலம்பி வருகிறார்கள். உதாரணமாக பெண் பெயரை முன் பெயராகக் கொண்ட தென் மாவட்ட அமைச்சர் ஒருவர், மூத்த அமைச்சர் மாவட்டத்தில் தன் துறையில் ஒரு போஸ்டிங்கை போடப் போகும் சமயத்தில், அவருக்கு போன் போட்டு பேசிய மூத்தவர் அந்த போஸ்டிங் விஷயத்தை தன்னிடம் விட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். இதனால் அந்த அமைச்சர் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்”

“ஆளுநருக்கு எதிராக சிலர் கருப்புக் கொடி காட்டிய விஷயம் எந்த அளவில் இருக்கிறது?

ஆளுநர் விஷயத்தை ஊதி பெரிதுபடுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடி தர அதிமுகவும் பாஜகவும் முயற்சிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பக்கம் பக்கமாக அறிக்கை தயார் செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அதிமுக அனுப்பியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமித் ஷாவுக்கும் அனுப்புகிறது. ”

“கோடநாடு விவகாரம் தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடந்துள்ளதே?”

“ஆமாம்.. 10 மணிநேரம் நடந்த இந்த விசாரனையில் தனக்குத் தெரிந்த விஷயங்களை கொஞ்சம்கூட மறைக்காமல் சொல்லியிருக்கிறார் சசிகலா. ‘அன்று அதிகாரத்தில் இருந்தவர்களை விசாரித்தால்தான் முழுவதும் தெரியும்’ என்ரும் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் தொண்டர்களை தன் பக்கம் திருப்பும் என்றும் சசிகலா நம்புகிறாராம்.”

“உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் விஷயம் எந்த அளவில் இருக்கிறது?”

“சட்டசபைக் கூட்டம் முடிந்ததும் சேலத்தில் படப்பிடிப்புக்காக செல்ல இருக்கிறாராம் உதயநிதி. தற்போது அவர் ஒப்புக்கொண்டுள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது” இவ்வளவுதான் இந்த வாரம் என்று கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...