தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மக்கள் மீண்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து, பிற மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் தற்போது முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வரை கர்மவீரர் காமராஜர் போல நினைக்கிறேன் – பாமக எம்.எல்.ஏ. பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய, மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், “முதலமைச்சரை காமராஜர் போன்று நினைக்கிறேன். புகழ்ந்து பேசுவதாக நினைக்காதிங்க. புகழ்ந்து பேச கூடாது, காரியம் நடக்கனும். மேட்டூர் தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஒன்றியத்தில் தோனிமடுவு நீர்தேக்க திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் 1,30,000 ஏக்கர் பயனடையும். திமுக தேர்தல் அறிக்கையில் இங்கே தண்ணீர் தேக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கலகலப்பாக பேசினார்.
கொடநாட்டில் மாயமான ஆவணங்கள்: சசிகலாவிடம் 2-வது நாளாக இன்று விசாரணை
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை – கொள்ளை சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். எஸ்டேட்டில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயனின் மனைவி, மகள் ஆகியோர் விபத்தில் மரணம் அடைந்தனர். சயன் விபத்தில் காயம் அடைந்தார். இதனால், இந்த வழக்கு பரபரப்பானது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நேற்று 6 மணி நேரம் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். சசிகலாவிடம் இன்று 2-வது நாளாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலாவைத் தொடர்ந்து முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ‘எக்ஸ் இ’ வகை தொற்று கேரளாவிற்குள் நுழைந்தது
கொரோனா 4-ம் அலை பரவி வருவதாக உலக நாடுகள் தகவல் வெளியிட்டுள்ளன. கொரோனா எக்ஸ் இ எனப்படும் இந்த வகை தொற்று தற்போது சீனாவில் பரவி வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் இந்நோய் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் முதன்முதலாக கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொற்று கொரோனா எக்ஸ் இ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை நெருக்கடி: மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகம் வருகை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் நிலவுவதால், அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 3 குடும்பத்தை சேர்ந்த 13 பேரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 5 பேரும் படகு மூலம் தமிழகம் வந்துள்ளனர். தமிழகம் வந்துள்ள அவர்கள் கூறும்போது, இலங்கையில் வாழ முடியாத சூழல் நிலவுவதாகவும், அதனால் தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் பலர் அங்கிருந்து வர உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து இதுவரை 47 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.